1. *எல்லாம் வல்ல இறைவன் நமது மீட்பரை மாமரியின் வாயிலாகத்தான் அனுப்பினார்.*
இந்த பேருண்மை எல்லாவற்றிலும் முதன்மையானது. இரட்சகரின் வருகையில் அன்னை மாமரியின் பங்களிப்பு யாராலுமே குறைத்து மதிப்பிட இயலாது. ஏனெனில், இந்த உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மெசியா, பூமிக்கு வருவதற்காக ஒரு கன்னிப்பெண்ணின் கருவில் உருவாக, எல்லாம் வல்ல இறைவன் தேர்ந்தெடுத்தது நமதன்னை மாமரி
*சேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு வருவதற்கு ஏராளமான வழிகள் இருந்த பொழுதும் அன்னை மாமரி தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்??*
*அன்னை மாமரி கடவுளுக்கு முக்கியமானவராக இருக்கும் பொழுது, நமக்கெல்லாம் முக்கியமானவர் இல்லையா??*
2. *சேசுகிறிஸ்து தனது முதல் அற்புதத்தை அன்னை மாமரியின் வேண்டுதலின் பெயரால் நிகழ்த்தினார்.*
இது அடுத்த முக்கியமான பேருண்மை. சேசு கிறிஸ்து தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றுவதற்கு அன்னை மாமரி தேவை இல்லை. அவர்கள் அந்நேரத்தில் அங்கு எதேச்சையாக இருந்தார்கள் என்று பலர் கூறுகின்றார்கள். அப்படி என்றால், நற்செய்தியாளர் புனித அருளப்பர் அன்னை மரியாளை திருமணத்திற்கு அழைக்கப்பட்ட விருந்தினர்களில் முதன்மையாக குறிப்பிட்டது எப்படி?
"மூன்றாம் நாள், கலிலேயாவிலுள்ள கானாவூரில் திருமணம் ஒன்று நடைபெற்றது. 'இயேசுவின் தாய் அங்கு இருந்தார்கள் இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைக்கப்பெற்றிருந்தனர். (அரு 2:1-2).
அன்னை மாமரி இந்த நிகழ்ச்சியில் முக்கியத்துவம் இல்லாதவராக இருந்தால், அவர்கள் சீடர்களுக்கும் ஏன் சேசு கிறிஸ்துவுக்கும் முன்னரே அழைக்கப்பட்டவர்களின் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருப்பது ஏன்?
நற்செய்தியாளரான புனித அருளப்பர் தொடர்பற்ற, சம்பந்தமில்லாத விளக்கங்களை தனது எழுத்துக்களில் இணைப்பவராக அறியப்படவில்லை. அன்னை மாமரி் இங்கு முதலில் குறிப்பிடப்பட்டுள்ளார்கள் ஏனெனில், திருமணத்தில் அவர்களது பங்கெடுப்பு குறித்து வாசகர்களின் கவனத்தை ஈர்க்க விரும்பியே அருளப்பர் அங்கனம் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ஆண்டவர் ஏன் கடிந்துரைத்தார்? ஏனெனில் அன்னை மாமரிக்கும் சேசு கிறிஸ்துவுக்கும் உள்ள உரையாடலில், சேசு கிறிஸ்து அவரைக் கடிந்துரைத்தாக ஒரு சிலர் கருதுகின்றனர். ஏனெனில் அவர் கூறியதாவது,
அதற்கு இயேசு, "அம்மா! அதை ஏன் என்னிடம் கூறுகிறீர்? எனது நேரம் இன்னும் வரவில்லை" என்றார்.(அரு 2:4)”.
முதலாவது, சேசு கிறிஸ்து ஆழ்ந்த பற்றுடைய ஒரு யூதர் மட்டுமல்லாது பத்து கற்பனைகளுக்கு கவனமுடன் கீழ்படிந்து நடப்பவர். அப்படியிருக்கையில், தனது தாயை அனைவருக்கும் முன்பாக இகழ்ந்து நான்காவது கற்பனைக்கு எதிராக நடந்திருப்பாரோ?
இரண்டாவது, இது சேசு கிறிஸ்துவின் இகழ்ச்சி அல்லது மறுத்துரைப்பு எனில், அவர்
ஏன் தண்ணீரை திராட்சை இரசமாக்கி அற்புதத்தை நிகழ்த்தவேண்டும்? *அன்னை மரியாயை உயர்த்தவேண்டும், அவரது பரிந்துரையின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தவேண்டும்* என்று சேசு கிறிஸ்து நினைத்திராவிட்டால், அவரது மறுதலிப்பில் பரிந்துரை முடிவுற்று விட்டது அல்லவா? அவரது தாயார் அந்த குடும்பத்தினருக்காக பரிந்து பேசும் பொழுது, நமதாண்டவர் தனது நேரம் வந்துவிட்டதை தீர்மானிக்கிறார். இதன் வாயிலாக சேசு கிறிஸ்து என்ன சொல்ல வருகின்றார் என்று உங்களுக்கு புரியவில்லையா? *அன்னை மாமரியின் பரிந்துரையின் வல்லமையை உலகோர் அனைவருக்கும் உணர்த்துவதற்காகவே,* சேசு கிறிஸ்து, அன்னையின் பரிந்துரைக்கு பிறகு இந்த அற்புதத்தை நிகழ்த்தினார் என்றால் மிகையாகுமோ? இதிலிருந்து நற்செய்தியாளர் புனித அருளப்பர் அன்னை மரியாயை விருந்தினர்களின் பட்டியலில் ஏன் முதலில் குறிப்பிட்டுளார் என்று விளக்கவில்லையா?
3. சேசு கிறிஸ்து சிலுவையினடியில் அன்னை மரியாயை அருளப்பரிடம் கையளித்தார்.
சேசு கிறிஸ்து பாடுகள் பட்டு உயிர் விடும் வேளையில் மிகவும் ஆழ்ந்த ஒரு மறையுண்மையினை மாந்தர் அனைவருக்கும் அறிவித்துள்ளார்:
இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு, தம் தாயை நோக்கி, "அம்மா, இதோ! உம் மகன்" என்றார். பின்பு சீடரை நோக்கி, "இதோ! உன் தாய்" என்றார்.அந்நேரமுதல் அச்சீடர் அவர்களைத் தம் வீட்டில் ஏற்றுக்கொண்டார்(அரு19:26-27).
பாடுகள் பட்டு சிலுவையில் தொங்கிக் கொண்டு, சுவாசிக்கவே சிரமப்பட்டுக்கொண்டிருந்த அந்த வேளையில், முக்கியத்துவம் அல்லாவிடில் இந்த வார்த்தைகளை சேசு கிறிஸ்து கூறியிருப்பாரா? நமதாண்டவரின் *அச்செயலுக்கு கண்டிப்பாக உள்ளார்ந்த காரணம் உள்ளது.*
*இங்கு இயேசுவின் அன்புச் சீடர் என்பது திருச்சபையின் ஒவ்வொரு அங்கத்தினர் என்றும், அந்நேரம் முதலே அன்னை மாமரி திருச்சபை அனைத்திற்கும் ஆன்மீகத் தாயானார்கள் என்று உறுதியாக தாய்த்திருச்சபை விசுவாசம் கொள்கிறது.*
அந்நேரமே அச்சீடர் அன்னை மரியாயை தன் வீட்டில் ஏற்றுக்கொண்டார் என்று பரிசுத்த வேதாகமம் உரைக்கின்றது. *நாமும் அதனைச் செய்ய வேண்டாமோ?*
4. சேசு கிறிஸ்துவின் முதல் கிருபை அன்னை மரியாயின் வாயிலாக அருளப்பட்டது.
இந்தப் பேருண்மையானது, அன்னை மரியாயின் முக்கியத்துவத்தை மறுதலிக்க முயலும் அனைவராலும் எப்பொழுதும் புறக்கணிக்கப்படுகின்றது. அனால் இது நமக்கு பரிசுத்த வேதாகமம் நேரிடையாக அறிவிப்பது!! எல்லாம் வல்ல இறைவனின் அழைப்பினை ஏற்று அவரது திருவுளத்திர்க்குப் பணிந்து *"இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின் படியே ஆகக்கடவது"*என்று கூறி நம்மீட்பரின் தாயாகும் பேற்றினைப் அடைந்த அன்னை மரியாள், உடனடியாக அவசர கதியில் விரைந்து சென்று யூதேயா மலைநாட்டிலிருந்த அவரது உறவினளான எலிசபெத்தம்மாளை காண சென்றார்கள்.
“மரியாயின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டவுடனே, அவள் வயிற்றினுள்ளே குழந்தை துள்ளியது. எலிசபெத்து பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று, "பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப் பட்டதே(லூக்:1:41-42))”.
பரிசுத்த வேதாகமத்தின் இந்த வசனங்களின் வாயிலாக, கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, அன்னை மரியாயின் வாழ்த்துரை எலிசபெத்தம்மாளுக்கு அருளிரக்கத்தை வழங்க பயன்படுத்தப்பட்டுள்ளது விளங்குகிறது. ஏன்? அன்னை மாமரி் பயன்படுத்தப்பட்டார்கள்? இந்த அருட்கொடையை வழங்க வேறு வழிகள் இல்லையா? இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை எனில், எலிசபெத்தம்மாள் கூறுவதைக் கேளுங்கள்,
*என் ஆண்டவருடைய தாய் என்னிடம் வர நான் வாய்ப்புப் பெற்றது எப்படி?* உமது வாழ்த்து என் காதில் ஒலித்ததும், என் வயிற்றினுள்ளே குழந்தை அக்களிப்பால் துள்ளியது(லூக் 1:44)
எலிசபெத்தம்மாளுக்கு வழங்கப்பட்ட இந்த அருட்கொடையில் அன்னை மரியாயின் பிரசன்னமும், அவரது வார்த்தைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதனை யாராலும் மறுக்க இயலாது. இந்த கிருபை அன்னை மாமரி் அளித்தவையா? கண்டிப்பாக கிடையாது, அவை கிறிஸ்துவிடம் இருந்தே வந்தன. ஆனாலும் தேர்ந்தெடுத்த வழி என்ன? அவர் அன்னை மரியாயை பயணப்பட வைத்து, அவரது வார்த்தைகளின் வாயிலாக அருளினார். ஏன்? ஏனெனில் அன்னை மரியாயின் முக்கியத்துவத்தை நமக்கு உணர வைக்க வேண்டியே!!!
5. சேசு கிறிஸ்து மட்டுமே இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான ஒரே பரிந்துரையாளர்.
கத்தோலிக்கர்களும் சேசு கிறிஸ்து மட்டுமே இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான ஒரே பரிந்துரையாளர் என்று முழுமையாக நம்பி ஏற்றுக்கொள்கின்றார்கள். கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி(The Catecechism of the Catholic Church, CCC) இந்த நம்பிக்கையினை தெளிவாக எடுத்துரைக்கின்றது.
பரிந்துரை என்பது வேண்டுதல் நிறைவேறுவதற்கான செபம், இது சேசு கிறிஸ்து செபித்து போல நம்மையும் செபிக்கத் தூண்டுகிறது. அவர் ஒருவர் மட்டுமே உலக மாந்தர் அனைவருக்காகவும், குறிப்பாக பாவிகளுக்காக பிதாவிடம் பரிந்து பேசுபவர். (CCC 2634)
இந்த கத்தோலிக்க திருச்சபையின் போதனை கீழ்க்கண்ட பரிசுத்த வேதாகமத்தின் வசனங்களை அடிப்படையாக கொண்டது.
*ஏனெனில், கடவுள் ஒருவரே. கடவுளையும் மனிதரையும் இணைப்பவரும் ஒருவரே. இவர் மனிதனான இயேசு கிறிஸ்துவே. இவர் அனைவரின் மீட்புக்கு ஈடாகத் தம்மையே கையளித்தார்.* (1 தீமோ 2:5-6)
சேசு கிறிஸ்து மட்டுமே இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே ஒரே பரிந்துரையாளராக இருந்த போதிலும், இது மற்றவர்கள் (அன்னை மாமரி் உட்பட)
இரண்டாம் படியிலான மத்தியஸ்தராகவோ, பரிந்துரையாளராகவோ இருப்பதை தடை செய்யவில்லை. இந்த திருவசனங்களை எழுதிய புனித சின்னப்பர் இதனை பற்றி அறியாதவரல்ல, இருந்த போதிலும் பலமுறை தனது கடிதங்களில் ஒருவர் மற்றவருக்காக செபிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இடைவிடாது நான் உங்களை என் செபங்களில் எப்போதும் குறிப்பிட்டு வேண்டுகிறேன்.(உரோ 1:9)
சகோதரர்களே, எங்களுக்காகவும் செபியுங்கள்.(1தெச 5:25)
முதன்முதல் வேண்டுதல்,செபம் மன்றாட்டு, நன்றியறிதலை அனைவருக்காகவும் நீங்கள் செலுத்தக் கேட்டுக்கொள்கிறேன்.(1தீமோ 2:1)
மறைக்கல்வி, இந்த வகையான பரிந்துரையை “கிறிஸ்துவின் பரிந்துரையில் பங்கெடுப்பது” என்று குறிப்பிடுகின்றது (CCC 2635). மேலும் இதனை நாம் ஒருவர் மற்றவருக்காக செபிக்கும் ஒவ்வொரு முறையும் செயல்படுத்துகின்றோம். அன்னை மரியாயின் பரிந்துரையை நாடுவதென்பது, இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான சேசு கிறிஸ்துவின் பரிந்துரையை மறுப்பதென்பது இல்லை, மாறாக அன்னை *மரியாயின் வழியாக சேசு கிறிஸ்துவின் பரிந்துரையில் பங்கேடுப்பதே ஆகும்.*
பரிசுத்த வேதாகமம் அன்னை மரியாயை குறித்து அதிக இடங்களில் குறிப்பிடவில்லை. ஆனால் குறிப்பிடப்பட்ட அனைத்துமே ஆற்றல் மிக்க, கருத்தாழம் மிக்க பேருண்மைகள். பரிசுத்த வேதாகமத்தின் பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வசனங்களில் இருந்து அன்னை மரியாயின் பங்களிப்பு குறித்து இன்னும் அதிகமாக அறிந்து கொள்ளலாம்.
இயேசுவுக்கு புகழ் ! மாமரித்தாயே வாழ்க