சுவிசேஷக அருளப்பர் முதலாம் அதிகாரத்திலே எழுதிவைத்த. வாக்கியமாவது:
அந்தக்காலத்திலே யூதர்கள் ஜெருசலேமிலிருந்து ஆசாரியரையும் லேவித்தரையும் அருளப்பரிடத்தில் அனுப்பி: நீர் யாரென்று கேட்டபோது, அவர் சொன்ன சாட்சியமாவது: நான் கிறீஸ்துவானவர் அல்ல என்று அறிக்கையிட்டு, அதை மறுதலிக்காமல் வெளிப்படுத்தினார். அவர்கள் மறுபடியும் அவரை வினாவி: பின்னை நீர் யார்? நீர் எலியாசோ என்று கேட்க, அவர்: நான் அல்ல என்றார். நீர் தீர்க்கதரிசியோ என, அதற்கும் அவர்: நான் அல்ல என்று மறுமொழி சொன்னார். ஆகையால் அவர்கள்: எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் மாறுத்தரஞ் சொல்லும்படி நீர் யார்? உம்மைக் குறித்து என்ன சொல்லுகிறீர் என்றார்கள். அதற்கு அவர் : கர்த்தருடைய வழியைச் செவ்வையாக்குங்களென்று இசையாஸ் தீர்க்கதரிசி வசனித்தபடியே வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய குரலொலி நானே என்றார். அனுப்பப்பட்டவர்களோ பரிசேயராயிருந்தார்கள். மீளவும் அவர்கள் அவரை நோக்கி: நீர் கிறீஸ்துவுமல்ல, எலியாசுமல்ல, தீர்க்க தரிசியுமல்லவென்றால், பின்னை ஏன் ஞானஸ்நானங் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள். அருளப்பர் அவர்களுக்கு மாறுத்தாரமாக: நான் ஜலத்தினால் ஞானஸ்நானங் கொடுக்கிறேன். ஆனால் நீங்கள் அறியாத ஒருவர் உங்கள் மத்தியில் நிற்கிறார். எனக்குப் பின் வரவேண்டியவரும், என்னிலும் மேன்மையாக்கப்பட்டவரும் அவரே; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கு நான் பாத்திரவானல்ல என்றார். இவைகள் யோர்தான் நதிக்கு அக்கரையில் அருளப்பர் ஞானஸ்நானங் கொடுத்துவந்த பெத்தானியாவில் சம்பவித்தன.
பிரசங்கம்.
பிரசங்கம்.
இந்தச் சொல்லப்பட்ட சுவிசேஷ வாக்கியத்திலே அறியும் விசேஷமாவது: ஸ்நாபக அருளப்பர் யோர்தான் நதிக்கரையிலே வருகிற சனங்களைத் தண்ணீரால் ஸ்நானம் பண்ணிக் கொண்டிருந்த இடத்திலே யூதர் தங்கள் குருமாரை அனுப்பி அவரை ஆர் என்று கேட்ட வகை சொல்லியிருக்கிறதே.. அதேது நிமித்தமோவென்றால், ஸ்நானத்தால் ஆத்துமசுத்தி பண்ணுகிறது தேவத்துவம் உடைய கிறீஸ்துவுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் அல்லாதே மற்றவர்களுக்கு ஏலுவதல்ல என்றதினால் அவர்கள் அவர் கிறீஸ்துதாமோ அல்லவோ என்று அறியத்தக்கதாகக் கேட்டனுப்பினார்கள்.
அத்தால் எங்களுக்குள்ள படிப்பினையாவது: அவர்கள் ஸ்நாபக அருளப்பரை ஆர் என்று அறியக் கருதினதுபோல நாங்களும் அவனவன் தன்னைத்தான் ஆர் என்று விசாரித்தறிந்தால் அதிக பலனுள்ளதாயிருக்கும். அதேதென்றால் மனுஷனானவன் தன்னைத்தான் அறியாததினால் சகலமான பாவங்களும் உண்டாகிறதாகும். அப்படியே எங்கள் ஆதித்தாய் தந்தையான ஆதனும் ஏவையும் தாங்கள் மண்ணால் உண்டாக்கப்பட்டதை அவதானம் பண்ணாததினால் தேவரைப் போலே இருப்போம் என்று நினைத்துப் பாவத்திலே விழுந்தார்கள். ஆகையால் அப்படிப்பட்ட ஆங்காரத்தைத் தள்ளத்தக்கதாகச் சர்வேஸ்வரன் அவர்கள் மண்ணாலே உண்டுபண்ணப்பட்டதையும் மரித்து மண்ணாய்ப் போகிறதையும் உடனே அவர்களுக்கு அறிவித்தார்.
அப்படியே நாங்களும் எங்கள் நீசமான பிறவிச்சுபாவத்தை அவதானிப்போமாகில் பாவத்திலே விழமாட்டோம். எங்கள் சரீரம் தாயுடைய உதர அழுக்கில் அல்லது பூமிச்சேற்றில் செனித்ததை நினைத்தால் வங்கிஷ குலபெருமை பாராட்டமாட்டோம். சரீரத்திலே பொக்ஷமாய் நிறைந்திருக்கிற அருவருப்பானதுகளையும் கண், செவி, நாசி, வாய், மல சலவழி முதலான சகல துவாரங்களினாலே நித்தம் ஊறிப்பாய்ந்து வருகிற துர்க்கந்தங்களையும் விசாரித்தால் அப்படிப்பட்ட துர்க்கந்த பாத்திரமான சரீரத்துக்குச் சந்தன, பரிமள, புட்பங்களை அணியவும், பொன், வெள்ளியால் அலங்கரிக்கவும், சலாக்கிய ஆசன சிங்காசனங்களிலே சயனிக்கவும் விரும்பமாட்டோம். அப்படியே சரீர சுக அபேட்சையால் வருகிற பாவம் எல்லாம் விலகும் என்று அறியவும்.
அதின்பின் ஸ்நாபக அருளப்பர் உரைத்த வசனத்திலே காண்கிற படிப்பினை ஏதென்றால்: யூதர் அவரைக் கிறீஸ்து என்று நினைத்தவிடத்திலே தாம் கிறீஸ்து அல்ல என்று உண்மை சொன்னதினால் எங்களுக்கு லோகத்தார் சொல்லுகிற இச்சகம் முதலான புகழான வார்த்தைகளை மனோவிருப்பமாய்க் கேளாமலிருக்க வேணும் என்று படிப்பித்தார். கடைசியாய் யூதர் அவரை ஆர் என்று மறுபடி தொடர்ந்து கேட்ட இடத்திலே: தாம் வனத்திலே தொனிக்கிற சத்தம் என்று சொன்னதினால், ஒரு உச்சிதமான ஞானபோதகம் எங்களுக்குப் போதித்தார். அதாவது: சத்தமானது வாக்கினாலே புறப்பட்டவுடனே அழிந்துபோகிறதுபோல மனுஷனானவன் சகல காரியத்திலும் அழிவுள்ளவன் என்று காண்பித்தார்.
அதேதெனில் நாங்கள் உண்டாக்கப்பட்ட முகனையை விசாரித்தால் உண்டாகுமுன் பூலோகத்திலே ஒரு காரணமும் இல்லாமல், வெறுமையில் நின்று எடுபட்டதினால் அழிவுள்ளவர்களாம். உண்டானதின் பின் தேவ அனுக்கிரகம் இன்றியே எங்களால் ஒரு நல்ல விசாரமானாலும் உண்டாகக் கூடாததினால் அழிவுள்ளவர்களாம். செத்தத்தின்பின் சரீரம் மண்ணாய்ப் போகிறதினால் அழிவுள்ளவர்களாம். எங்கள் பேரில் சொல்லப்பட்ட வெகுமான புகழ் எல்லாம் அற்றுப் போகிறதினால் அழிவுள்ளவர்களாம். நாங்கள் சம்பாதிக்கிற திரவியம் எல்லாம் எங்களோடு வராததினால் அழிவுள்ளவர்களாம். நாங்கள் சுகித்த செல்வ பாக்கியம் எல்லாம் எங்களுக்கு மிகுந்த வேதனைக்குக் காரணமாயிருக்கிறதினால் அழிவுள்ளவர்களாம். இப்படியே சகலத்திலும் அழிவுள்ளவர்களாயிருக்கிற எங்கள் நீசத்தனத்தையும் ஈனத்தையும் அனுதினமும் நினைத்து ஆங்காரம் ஒய்யாரம் எல்லாம் தள்ளித் தாழ்ச்சியோடே நடக்கவேண்டும் என்று அறியக்கடவோம்.
திருச்சபைச் செபம்
ஆண்டவரே! தேவரீர் எங்கள் செபங்களுக்குத் திருச்செவிசாய்த்து எங்கள் மனதில் அடர்ந்திருக்கிற பாவ அந்தகாரம் தேவரீருடைய வரவினால் நீங்கி ஞான வெளிச்சம் உண்டாகச் செய்தருளும். பிதாவோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் ஏக சருவேசுரனுமாய் சதாகாலமும் சீவியராய் இராச்சியபாரம் பண்ணுகிறவருமாயிருக்கிறவரே,
ஆமென் யேசு.