சேசு சுவாமியின் இரண்டாம் வருகை!

சுவிசேஷக லூக்கா இருபத்தொராம் அதிகாரத்திலே எழுதிவைத்த வாக்கியமாவது:- 

அந்தக்காலத்திலே யேசுநாதர் தம்முடைய சீஷர்களுக்குத் திருவுளம் பற்றினது:- அப்பொழுது சூரியன் சந்திரன் நட்சத்திரங்களிலே பல அடையாளங்கள் தோன்றும். சமுத்திரமும் அலைகளும் இரைந்து கொந்தளிப்பதினால், பூமியில் ஜனங்களுக்கு உபத்திரவமுண்டாகும். உலகத்துக்கெல்லாம் இனி என்ன வரப்போகிறதோவென்று மனிதர்கள் பயந்து, எதிர்பார்த்திருப்பதினால் விடவிடத்துப் போவார்கள். ஏனெனில் வான மண்டலங்களின் சத்துவங்கள் அசைக்கப்படும். அப்பொழுது மனுமகன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின் மேல் வருவதைக் காண்பார்கள். இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, நீங்கள் அண்ணாந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள். ஏனென்றால் உங்கள் இரட்சணியம் சமீபித்திருக்கிறது என்றார். பின்னும் அவர் அவர்களுக்குத் திருவுளம்பற்றின உவமையாவது: அத்திமரத்தையும், சகல விருட்சங்களையும் பாருங்கள். அவைகள் காய்க்கத் துவங்கும்போது, கோடைகாலம் சமீபித்திருக்கிறதென்று அறிந்து கொள்ளுகிறீர்களே. அவ்விதமே நீங்களும் இவைகள் சம்பவிக்கிறதைக் காணும்போது, சர்வேசுரனுடைய இராச்சியம் சமீபமாயிற்றென்று அறிந்து கொள்ளுங்கள். இவையெல்லாம் நடந்தேறுமளவும், இந்தச் சந்ததி ஒழிந்து போவதில்லையென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். வானமும் பூமியும் ஒழிந்துபோம்; என் வார்த்தைகளோ ஒழிந்துபோகாது என்று, திருவுளம் பற்றினார்.

பிரசங்கம்.

இந்தச் சொல்லப்பட்ட வாக்கியத்தின் அபிப்பிராயமேதென்றால், சந்திர, சூரிய, நட்சத்திரங்களிலே அடையாளங்கள் காணப்படும் என்று சொல்லப்பட்டதே. அந்த அடையாளங்களாவன: சூரியமண்டலம் தனது கதிர்களை லோகத்திலே விடாமல் இருளடைந்த வேஷமாயிருக்கும். சந்திரமண்டலம் மலர்ந்த முகத்தை ஒழித்து இரத்தமயமான கோலத்தைக் காண்பிக்கும். நட்சத்திரங்கள் உதிக்கிற ஸ்தலங்களை விட்டுப் பிசகி ஒளிவிழந்து உயிர் போன பிரேதங்களைப்போல விழும். இந்தடைவாய்ச் சோதிமண்டலங்களிற் சுவாலிக்கிற அக்கினிப் பிரதாபமான அலங்காரம் எல்லாம் மறைந்து அவைகள் கன அந்தகாரம் அணிந்த ரூபமாய்க் காணப்படும். அதேதெனில் இவை எல்லாம் சர்வேசுரன் மனுஷனுக்கு உபகாரமாக உண்டாக்கினதினால், மனுஷன் பாவத்தால் கெட்டுப்போகிறபோது அவனை ஆதரித்திருந்த பிரகாரம் எல்லாம் அந்தகாரமாய்ப்போக ஞாயம் என்று அறியவும். ,

ஆனால் இதிலுள்ள ஞான உற்பனமானது: சூரியனோவென்றால் நீதிபர அருணனாகிய கிறீஸ்துநாதராம். சந்திரனோ என்றால் சாந்துவ குணம் நிறைந்த சோமனாகிய தேவமாதாவாம். நட்சத்திரங்களோவென்றால் ஞான ஒளிகளாகிய மோட்சவாசிகளாம். அவர்கள் இற்றைவரைக்கும் மனுஷருக்குப் பிரசன்னராயிருக்கக் கொள்ள, அன்று சற்றும் இரக்கமில்லாமல் அதி உக்கிர முகத்தைக் காண்பிப்பார்கள் என்ற விபரமாம்.

பூமியிலே காண்கிற அடையாளங்களின் விபாமோவென்றால், பூமியிலுள்ள பொருள்களைக் கொண்டு தானே மனுஷன் பாவத்துக்கு ஏதுவானதினால் அந்தப் பொருள்கள் எல்லாம் மனுஷ சென்மத்தின் பேரிலே வெகு சினத்தைக் காட்டி அழிவுண்டாக்க அடர்ந்து வருகிறதாயிருக்கும். அதனால் சமுத்திரமானது வான முகடுமட்டாகத் திரைகொண்டு எழும்பி அதின் மச்சங்கள் லோகத்தவர்களை விழுங்க அலட்டுகிறது போல வெகுவாய் ஓயாத அபயக்குரலிட்டு, காற்றானது பிரசண்ட மாருதமாய் அடித்து, பூமியானது சகலதிக்கும் அதிர்ந்து நடுக்கங்கொண்டு, மற்றுண்டான பொருள்யாவும் அந்தப் பிரகாரமாய் அழிவுகாண்பித்திருக்கும்.

அதேதென்றால்: சகலத்தையும் உண்டாக்கின ஆதி பரப்பொருளான சர்வேசுரனுக்கு மனுஷன் எதிராளியானதினால், சகல பொருளும் அவனுக்குப் பகையாய் அழிவுண்டாக்குவது கிரமமுள்ள நீதியென்று அறியவும். இதல்லாமல் இதின் ஞான அர்த்தம் ஏதென்றால், சமுத்திர சலம் நரக சுவாலை என்றும், அதில் அமிழுகிற மச்சங்கள் நரகவாசிகள் என்றும், பிரசண்டவாயு துஷ்டப் பிசாசு என்றும், பூமிநடுக்கம் தேவபயங்கரமான நீதிக் கோபம் என்றும் சொல்லப்படும். இதெல்லாம் மனுஷனுக்கு விரோதமாயிருக்கும் என்று அறியவும்.

அதின்பின் ஆண்டவர் எழுந்தருளுகிற பிரகாரம் எப்படியோவென்றால், பூலோகத்திலே ஆண்டவர் வருகிற வரவின் காலம் இரண்டாகும். முதலாவது மனுஷனை இரட்சிக்க வந்ததினால் பொறுத்தி, தாழ்ச்சி காண்பிக்கிறவராய் முனிவில்லாமல் அமிர்தகுணம் நிறைந்த குழந்தை முகத்தோடு, சிங்காசன பரிவார அலங்காரம் இல்லாமல் மகா வறுமை, எளிமையோடு வந்தார்.

இனிமேல் வருகிற பயணமோவென்றால், சகல லோகத்துக்கும் இராசாதிராசனாக முடி தரித்து ஆகாசத்திலே அரண்மனை அலங்கரித்து, மேகத்தின் மீதே சிங்காசனம் ஸ்தாபித்து பராக்கிரம தூதாதி தூதர் மோட்சவாசிகள் சகலரும் புடைசூழச் சிங்கத்தின் உக்கிரத்தைக்கொண்டு சகலலோக பொருள்களையும் ஆளவும் அழிக்கவும் அநந்த வல்லப மகிமையுள்ளவராய் வருவாரென்று அறியவும்.

எந்த ஸ்தலத்திலே வருவாரோவெனில், லோகத்துக்கு நடுவான இராச்சியத்திலே யோசேபாத்து என்று பேர்ப்பட்ட பள்ளத்தாக்கிலே எழுந்தருளுவார். அவரை எல்லாரும் காண்பார்களோ என்றால் சகல லோக சனங்களும் காண்பார்கள். ஆனால் பாவிகள் ஒருவிதமாயும் புண்ணிய ஆத்துமாக்கள் வேறே பிரகாரமாயும் காண்பார்கள்.

அதெப்படியென்றால்: பாவிகள் அவருடைய முனிவு நிறைந்த முகத்தைக் கண்டு பயந்து விலகி, அந்த முகத்தின் வெளிச்சத்தால் தங்களுடைய பாவத்தின் அகோரம் சகல லோகத்துக்கும் பிரசித்தமாய்ப் போகிறதினால் வெட்கித்த முகத்தைக் காண்பிக்க மாட்டாமல் தரைமட்டாகத் தலைகுனிந்து பாதாளங்களிலே அமிழ்ந்திப் போகவும், பருவதங்கள் தங்கள் பேரிலே விழவும் விரும்புவார்கள். புண்ணிய ஆத்துமாக்களோ என்றால், தங்கள் சுகிர்தங்களின் வாசனை லோகம் எங்கும் பரிமளித்து மகா கீர்த்தி பரம்பினதினால் நிறைந்த மகிழ்ச்சியாய் அலர்ந்த முகத்தோடு ஆண்டவரைக் காண்பார்கள்.

இப்படிப்பட்ட வர்த்தமானம் சம்பவிக்கிற காலத்தை அறியத் திருவுளம் பற்றின உவமையின் பயன் ஏதென்றால்: செந்நெல்லின் கதிர்கண்டவுடனே அறுப்புக்காலம் கூடுமாப்போலே லோகத்திலே உபத்திரிய துரிதம் வெகுவாய்ப் பலுகுகிற போது ஞானப்பயிராகிய மனுஷ சென்மங்கள் சங்கரிக்கப்படுகிற காலமாம் என்று அறிவித்தார்.

அப்போது நல்ல நெல்லைக் களஞ்சியத்திலே தெரிந்துவைத்துப் பதரையும் வைக்கோலையும் அகல் எறிகிறதுபோலப் பலன் நிறைந்த புண்ணிய ஆத்துமாக்கள் திவ்விய களஞ்சியமாகிய மோட்சராச்சியத்திலே கூடி இருப்பார்கள். பதரும் வைக்கோலுமாகிய துர்ச்சனப் பாவிகளும், பிசாசுகளும் நரக அக்கினியில் எறியப்படுவார்கள்.

ஆனதினால் இப்படிப்பட்ட வர்த்தமானத்தை நாங்கள் ஏலவே அறிந்து எங்கள் கிரியைகள் வியர்த்தகிரியைகளாய் நரகத்துக்கு ஏதுவாகாதபடிக்குத் தருமம் நிறைந்த பயிராய்ச் சீவித்து மோட்ச பராச்சியத்திலே பலன் அடையப் பிரயாசப் படக்கடவோம்.

திருச்சபைச் செபம்

ஆண்டவரே! தேவரீர் உமது அனந்த வல்லமையை எடுத்தாண்டு எங்கள் மத்தியிலே எழுந்தருளி வாரும். எங்கள் பாவத்துக்குக் கிடைக்க வேண்டிய ஆபத்துக்களில் நின்று நாங்கள் தேவரீருடைய வரவினால் பாதுகாக்கப்பட்டுத் தேவரீருடைய தயவு நிறைந்த அருளினால் ஈடேற்றம் அடைகிறவர்களாகக்கடவோம். பிதாவோடும் இஸ்பிரீத்துசாந்துவோடும் ஏக சருவேசுரனுமாய் சதாகாலமும் சீவியராய் இராச்சியபாரம் பண்ணுகிறவருமாயிருக்கிற ஆண்டவரே!

ஆமென் யேசு.