வீரமாமுனிவர் கட்டிய அந்தோனியார் கோவில்
பட்டுக்கோட்டை அருகில் வீரக்குறிச்சி என்ற ஊர் உள்ளது. இங்கு ஒரு மரத்தில் பேய் ஒன்று வசித்து வந்தது. அவ்வழியாக யாராவது கர்ப்ப ஸ்திரிகள் வந்துவிட்டால் அடித்துக் கொன்று விடும். மற்றவர்களையும் துன்புறுத்தும். ஒரு நாள் வீரமாமுனிவர் அவ்வழியே வந்தார். களைப்பின் மிகுதியால் பேய் இருந்த மரத்தடியில் அமர்ந்தார். பேய் தன் கைவரிகையை முனிவரிடம் காட்ட முயன்றது. அவரோ சிலுவை வரைந்து, செபித்து "ஓடிப்போ! இங்கு தலை காட்டாதே" என்றார். அலகை அவ்விடத்தை விட்டு ஓடியே விட்டது. அதன் பின் அப்பக்கம் வரவே இல்லை . வீரமாமுனிவர் இங்கு ஒரு ஆலயங்கட்டி, பதுவைப்பதியரை அவ்வாலயப் பாதுகாவலராக்கினார். அங்கு சில காலம் தங்கி திருத்தொண்டு செய்தார். இவ்வாலயம் இன்று பெரிதாகக் கட்டப்பட்டுள்ளது. மேமாதம் இங்கு திருவிழா நடைபெறுகிறது. கிராமப்புற மக்கள் வண்டிகளில் வந்திறங்கி, ஆலய வளாகத்தில் தங்கி சமையல் செய்து, அசனங்கொடுப்பது கண்கொள்ளாக் காட்சி. இங்கு நடைபெறும் வாணவேடிக்கை மிகப்பெயர் பெற்றது. தஞ்சை - பட்டுக்கோட்டை சாலை ஓரத்தில் இத்திருத்தலம் உள்ளது. செவ்வாய் தோறும் இங்குள்ள திரளான பக்தர்கள் கூடுகின்றனர், சத்துரு சங்காரர் என அவரைப் புகழ்கின்றனர்.
கண்ணுள்ளவன் கபோதியாதல்
அந்தோனியார் மீது பழி சுமத்த சிலர், ஒரு வாலிபனது கண்களைக் கட்டி, குருடன் என்று பொய் கூறினர். கல்லறை சென்று செபிப்பது போல நடித்தான் அப்போலிக் குருடன். பின் ஏளனமாக கண் பார்வை கிடைத்தது, கட்டை அவிழுங்கள்" என்றான். இவனது நண்பர்கள் சிரித்தனர். கட்டவிழ்க்கப்பட்டதும் போலிக் குருடன் உண்மையிலே குருடனாகி விட்டான். அவர்கள் பயந்து மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு மன்றாட மீண்டும் பார்வை கிடைத்தது.
அந்தோனியார் அப்பம்
அந்தோனியார் பெயரால் ஏழைகளுக்கு அப்பம் தரப்படுகிறது. இது தோன்றிய வரலாறு வருமாறு: துலோன் பட்டணத்தில் ஒரு பெண் ரொட்டிக் கடை வைத்திருந்தாள். இவள் பெயர் லூயிஸ் பூவியேர்:- இவள் பரம ஏழை. அவளது வயோதிபப் பெற்றோர் அவள் கன்னியர்மடம் சென்று துறவியாக வாழ்ந்திட இடந்தரவில்லை. ஏழைகளுக்குத் தன்னாலான தருமம் செய்தாள். ஒரு தினம் அவள் கடைச் சாவியைத் தொலைத்து விட்டாள். ஏழையான அவளுக்கு பூட்டை உடைக்க மனம் வரவில்லை. அந்தோனியாரை வேண்டினாள். சாவி கிடைத்தால் அந்தோனியார் நினைவாக ஏழைகளுக்கு அப்பம் தருவதாக வாக்குறுதி செய்தாள். அவளது கடைத்திறவுகோல் கிடைக்கவில்லையெனினும் வேறொரு சாவியால் திறக்க முடிந்தது. சொல்லியவாறே ஏழைகளுக்கு அப்பம் கொடுத்து வாக்குறுதியை நிறைவேற்றினாள். இது முதல் இவ்வழக்கம் தோன்றியது.
தொலைந்து போன பல பொருட்களையும் அந்தோனியார் மீட்டுத்தந்து உதவி வருவதால் காணாமற்போன பொருட்களைப் பெற்றுத் தருபவர் எனவும் அழைக்கப்படுகிறார். தன் தோழி ஒருத்தி அளித்த அந்தோனியார் சொரூபத்தை தன் கடையில் வைத்து உருக்கமாய் வேண்டுதல் செய்தாள். அவள் ஆசையைத் தூயவர் நிறைவேற்றினார். கன்னியர்மடம் புகுந்தாள். தூலோன் நகர் மடமொன்றில் நன்மரண மடைந்தாள்.
அந்தோனியார் கூரை
இ மெக்ஸிகோவில் வேத கலாபனை ஏற்பட்ட போது கன்னியர்கள் சபைகள் கலைக்கப்பட்டன. 1859ல் கன்னிகைகளில் சிலர் கலிபோர்னியா நாடுகளுக்குச் சென்றனர். பரம ஏழைகளான மக்கள் அவர்களுக்குத் தொண்டு செய்தனர், வெகு சிரமத்தில் ஒரு மடம் அமைத்தனர். எனினும் கூரைபோடப் பணமில்லை , அதற்கு ரூபாய் 6350 தேவைப்பட்டது. அவ்வளவு பணத்திற்கு அவர்கள் எங்கு செல்வர்? பாடசாலைப் பிள்ளைகள் அந்தோனியாரை மன்றாடினர். மழைக்காலம் அடுத்து வந்தது. ஒரு தினம் ஒரு சபைத்துறவி ஒரு சிறு குழந்தையுடன் தான்சி மடம் வந்தார். தலைமைக் கன்னிகையிடம் தகவல் கூற, கன்னிகை ஒருவர் உடனடியாகச் சென்றார். அவர்கள் வருமுன் துறவியார் மறைந்தார்.
ஆனால் அங்கு ஒரு கடிதமும், அதனுடன் 6350 ரூபாயும் இருந்தது. இது அந்தோனியாரது செயல்தான் எனத் தெரிந்து நன்றியறிதல் செலுத்தினர்; கூரையின் வேலையும் முடிந்தது.
கப்பல் கரை சேருதல்
பிரான்ஸ் நாட்டு கடற்படைக் கப்பலொன்று 1708ம் ஆண்டு கடலில் புயலால் தாக்கப்பட்டது. கப்பல் மூழ்கி விடும் என அனைவரும் அஞ்சினர். கப்பலில் இருந்த ஆன்ம குரு அந்தோனியாரைப் பார்த்து மன்றாடினார். "இதோ ஆண்டவருடைய சிலுவை' என்ற வார்த்தைகளை ஒரு காகிதத்தில் எழுதி கடலில் எறிந்தார். அந்தோனியாரே! எங்களைக் காப்பாற்றும் என மன்றாடினார். புயல் அகன்றது. கப்பல் பத்திரமாகக் கரை சேர்ந்தது. யாவரும் ஆலயஞ் சென்று நன்றி செலுத்தினர்.
தூயவர் செய்து வரும் புதுமைகள் கோடி கோடி. இதனால் தான் அவர் "கோடி அற்புதர்' என அழைக்கப்படுகிறார். அவைகள் அத்தனையும் தொகுத்திட இன்னும் பல நூல்கள் தேவைப்படும்.
காரோட்டியைக் காத்தவர்
மதுரை, சுப்பிரமணியபுரத்தைச் சார்ந்தவர் திரு.ஜேக்கப் என்பவர். இவர் பிரிவினை மதத்தினர். டி.வி.எஸ் நிறுவனத்தாரின் பயணிகள் காரை ஓட்டி வந்தார். இவர் அந்தோனியார் பக்தர். தன் வீட்டில் புனிதர் படத்தை மாட்டியுள்ளார். பணிக்குச் செல்லுமுன் "அந்தோனியாரே! இன்று என் பணியை ஆசீர்வதியும். எந்த விபத்தும் ஏற்படாது காத்தருளும்" என்று அந்தோனியார் படத்தின்முன் செபித்த படியே செல்லுவார். 25 ஆண்டுகள் இவ்வாறே செய்தும் வந்தார். அவர் வாழ்நாளில் எந்த விபத்தும் ஏற்படவில்லை. 26வது ஆண்டு இவர் கண்பார்வையில் மங்கல் ஏற்பட்டது. தாமாகவே பணியிலிருந்து ஓய்வு பெற்றார். "இனி கார் ஓட்டினால் விபத்து ஏற்படலாம். எனவே ஓய்வு பெறுவதே நல்லது'' என்ற யோசனையை இவருக்கு அந்தோனியார் கொடுத்ததாகச் சொல்கிறார். இன்று நல்ல வசதியுடன் தம் குடும்பத்துடன் அந்தோனியார் பக்தராக வாழ்கின்றார். பிரிவினை மதத்தினராய் இருந்த போதிலும் அவரது குடும்பத்தினர் அந்தோனியார் பக்தியை விடாது வேண்டி வருகின்றனர். தூயவரின் ஆசீரால் இவர் பிள்ளைகள் நல்ல நிலையில் உள்ளனர்.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
சில புதுமையான அற்புதங்கள்
Posted by
Christopher