"கடவுளுக்கு பயந்து நடப்பவனை விடப் பெரியவன் எவனும் இல்லை'' (சீராக் : 10/27)
இறைவனின் குரல் கேட்ட இளைஞன்
சாமுவேல் சிறு பாலன். அவனது அன்னை அன்னாள் ஆலயப் பணிக்கு அவனை அர்ப்பணித்தாள். அவன் துயிலும் போது இறைவன் அவனிடம் பேசினார். அவன் "ஆண்டவரே பேசும்; உம் அடியான் கேட்கிறான்' (1சாமுவேல் 3/10) என பதிலளித்தான். எத்துணை இனிய பதில்! நாம் ஆண்டவரை நம் இதயங்களில் பேசவிட்டுக் கேட்கிறோமா? ஆனால் பெர்தினாந்து இறைவன் குரலைக்கேட்டார். துறவு மேற்கொள்ள முடிவு செய்தார். பெற்றோர். தயங்கினர். பக்திமிக்க அவர்கள் பெரும் தியாகம் செய்து தன் மகனை கடவுளுக்கு அர்ப்பணித்தனர். முதற் கனியை அளித்த மட்டற்ற மகிழ்ச்சி அவர்களுக்கு. ஆம்! தியாகத்தில் தான் மகிழ்ச்சி உள்ளது. "அவர் பொருட்டு அனைத்தையும் இழந்து விட்டேன் எல்லாவற்றையும் குப்பை எனக் கருதுகிறேன்." (பிலிப்பியர் 3/8)
பெர்தினாந்தும் தூய சின்னப்பரைப் போல் யாவற்றையும் துறந்தார். துறவற மடத்தை நோக்கிப் புறப்பட்டார்,
அகஸ்தீனார் மடம் புகுதல்
1210ஆம் ஆண்டு, பட்டணத்திற்கு வெளியே இருந்த வின்செந்தே தேபோரா என்ற அகஸ்தீனார் குருமடம் புகுந்து அங்கு வேதாகமப் படிப்பில் முதன்மையான மாணவராயிருந்தார். குருமட ஒழுங்குகளுக்குப் பணிந்து அமைதியான வாழ்க்கை நடத்திய அவரை நன் மாணவன் என யாவரும் புகழ்ந்தனர். துறவறவாழ்வு சபல மனப்பான்மை உள்ளவர் களுக்குக் கடினமானது. பெர்தினாந்திற்கு அதுவே இனிமையாக இருந்தது.
துறவியின் பிணி தீர்த்த அன்பன்
இவர் குருமடத்தில் பல சிறிய வேலைகளைச் செய்து வந்தார். பெருக்குதல், பாத்திரங்களைக் கழுவுதல், கழிவிடங்களை சுத்தம் செய்தல், பிணியாளர்களைக் கவனித்தல் போன்றவற்றை இன்முகத்துடனே செய்தார். அந்த குருமடத்தில் ஒரு துறவி பசாசினால் மிகவும் அவதியுற்று தன்னம்பிக்கை இழந்தார். பசாசு அவரை பயமுறுத்தியது. இதை பெர்தினாந்து அறிந்து நோயாளிகளின் மீது தன் மேலாடையைப் போர்த்தினார். துறவி கீழே விழுந்து புரண்டார். துர்நாற்றத்துடன் புகைப்படலம் கிளம்பி கிடுகிடு என்று நடுங்கி பேய் மிரண்டு ஓடியது. துறவி நலமடைந்தார். நன்றி நவின்றார்.
"நன்றி தனக்கல்ல, இறைவனுக்கே" என தூயவர் அறிவுரை கூறினார்.
ஆலயச்சுவர் விலகியது
ஒரு நாள் திருப்பலி வேளையில் நம் புனிதருக்கு தோட்டவேலை, நடுப்பூசை வேளை மணி ஒலித்தது. முழங்கால் படியிட்டார். ஆலயச்சுவர் விலகியது எழுந்தேற்றத்தின் போது இறைவனைக் கண்டார். பெரும் மகிழ்வு கொண்டார். மீண்டும் சுவர் முன்போலாகியது சபை முதல்வரிடம் இது பற்றிக் கூறினார். அவரும் அமைதியுடன் அனைத்தையும் கேட்டு மனத்தில் வியப்படைந்தார் இறைவனின் அடியார்களால் முடியாதது தான் என்ன?
அழகில் ஆண்டவனைக் கண்டவர்
ஆலயத்தில் ஒரு அழகிய பெண்ணொருத்தி நின்றாள். பெர்தினாந்து அவளை இமை கொட்டாமல் பார்த்து நின்றார். சக துறவிகள் எரிச்சலால் மேலாளரிடம் புகார் செய்தனர். அவரும் காரணம் கேட்டார். ''ஒரு பெண் இவ்வளவு அழகாக இருந்தால், அவளைப் படைத்த கடவுள் எவ்வளவு அழகாய் இருக்க வேண்டும் என நினைத்தேன்” என்று பதிலுரைத்தார்.
அனைவரும் அவரது பதிலைக் கேட்டு வியந்தனர். தீய எண்ணத்துடன் பெண்களை நோக்குபவர்கள் நமது புனிதரைப்போல எண்ணுவார்களா? இவ்வித மேலான எண்ணம் பாவ இச்சைகளை அகற்றுமல்லவா?
பசிதீர்த்த அற்புத உணவு
படி உலகில் போட்டி, பூசல் பொறாமை.. என்பன எங்கும் உள்ளன. அந்தோனியார் இறைவனின் அடியவனாக வாழ்ந்தவர். எனவே பிறரின் ஆன்ம ஈடேற்ற அலுவலில் அக்கறையுடன் தன் உணவையும் ஓய்வையும் பாராது, தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தார். இவரது உடன் துறவிகளும் இவர் மீது பொறாமை கொள்ளாமலில்லை. மட்டற்ற பொறுமை, அளவற்ற ஞானம், வேதாமக அறிவு பெற்ற இவரை மடத்து தலைவரும் மட்டத்தட்ட எண்ணினார். எனவே ஒரு நாள் அந்தோனியார் ஆன்மீகப் பணி செய்து வரும் முன்னரே, இவர்கள் மடத்தின் உணவினை சாப்பிட்டு முடித்து விட்டனர். அந்தோனியார் சாப்பிட வந்த போது மேசை மீது எந்த உணவும் இல்லை. மேசை மீது துணியை விரித்து செபித்தார். விதம் விதமான உணவுகள் அங்கு வந்தன. தானும் உண்டு மற்றவர்களுக்கும் கொடுத்தார். இறைவன் அவரை என்றும் கைவிட்டதே இல்லை. ஏனெனில் அவர் எதைக் குடிப்போம்? எதை உண்போம்? எதை உடுப்போம்? என்று கவலைப்பட்டவரல்ல. அவரது ஆலயங்களில் அசனம் இன்றும் ஏராளமாக நடைபெற்று வருகிறது. அந்தோனியாரை வந்திப்பவன் சந்தோஷமாய் வாழ்வான்.
கடலைக் கடத்தல்
கடற் பயணமொன்றில் ஒரு தீவை அடைந்த துறவிகள் புனிதரை தீவில் விட்டு விட்டுத் திரும்பி விட்டனர். இயற்கையில் இறைவனைக் கண்டு மெய்மறந்து பின் தங்கி விட்ட, தன்னிலையடைந்த தூயவர் தனது மேலாடையைக் கடலின் மீது போட்டு செபிக்க அது அவருக்கு தோணியாகியது. அவர்கள் வந்து சேரும் முன் தேவ அருளால் தூயவர் அக்கரை அடைந்தார். கரை சேர்ந்த நண்பர்கள் அங்கு அவரைக் கண்டு வியப்படைந்தனர்.
கோயிம்பிரா செல்லுதல்
அவரது உற்றாரும், நண்பர்களும் அவர் சொந்த ஊரில் இருந்ததினால், அடிக்கடி அவரைப் பார்த்திடச் சென்றனர். தனது துறவுநிலைக்கு இது சற்றும் ஒவ்வாது என அவர் எண்ணினார். எனவே தொலைவிலுள்ள ஒரு மடத்திற்கு தன்னை மாற்ற வேண்டுமென்று வேண்டினார். ஆகவே லிஸ்பனிலிருந்து வடக்கே நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள கோயிம்பிரா பட்டணத்திற்கு அனுப்பினர்.
இந்நகரம் மன்னரின் தலைநகர். எழில்மிகு மாந்திகோ நதி இங்கு ஓடுகின்றது. கோயிம்பிரா துறவியர் இல்லம் திருச்சிலுவைக்கு அர்ப்பணிக்கப்பட்டு இருந்தது.
அந்த இடத்தில் வாழ்ந்த மூர் என்ற மிலேச்ச சாதியாரை ஓட்ட மன்னன் எட்டாவது அல்போன்ஸோ, சிலுவை அடையாளமிட்ட கொடி தாங்கி போர் புரிந்தான்.
ஸாநவாஸ்தேதோலோஸோ என்ற இடத்தில் மன்னன் பெரும் வெற்றி பெற்றான். கோயிம்பிரா வந்து நன்றி செலுத்தினான். இதனை நேர்முகமாகக் கண்டு, நம் புனிதர் திருச்சிலுவைமீது பக்தி மிக்கவர் ஆனார். அசிசி பிரான்சிசும் இதற்குப் பின் தன் சபைத் துறவிகள் யாவரும் "திவ்விய இயேசுவே உம்மை இங்கும் உலகில் உள்ள எல்லா ஆலயங்களிலும் ஆராதிக்கிறோம்; உம்மை வாழ்த்துகிறோம்; ஏனென்றால் உமது தூய சிலுவையால் உலகை மீட்டு இரட்சித்தீர்” என்ற செபத்தைக் கண்டிப்பாய் செய்ய வேண்டும் என்று கற்பித்தார்.
இச்செபம் திருச்சிலுவைப் பாதையில் சேர்க்கப்பட்டிருப்பதை நாம் அறிவோம்.
நாட்டில் ஏற்பட்ட சூழ்நிலையில் ஆயர் ஒருவரும் சில துறவிகளும் மன்னர் பக்கம் சேர்ந்தனர். பாப்பிறை இவர்களுக்கு தண்டனை வழங்கினார். நம் புனிதர் திருச்சபையின் தலைவருக்கு தாழ்ந்து பணிந்தவராகவே செயல்பட்டார்; ஒன்பது ஆண்டுகள் உருண்டோடின.
குருப்பட்டம்
1219ஆம் ஆண்டு தனது 24ஆம் வயதில் பெர்தினாந்து குருப்பட்டம் பெற்றார். ஆயினும் சமையல் வேலை போன்ற மிகச்சிறிய வேலைகளை செய்து வந்தார். ஆனால் "கடவளுக்குப் பயந்து நடப்பவனைவிட பெரியவன் எவனுமில்லை ". (சீராக். 10/27) என்று புனிதரின் வாழ்க்கை எடுத்துக் காட்டுகிறது.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
துறவு நிலை
Posted by
Christopher