ஏப்ரல் 01

அர்ச். யூக். மேற்றிராணியார் (கி.பி. 1132)

இவர் பாலகனாய் இருக்கும்போதே தம் பக்தியுள்ள தாயாரால் புண்ணிய வழியில் வளர்க்கப்பட்டார். சேனையில் பெரிய உத்தியோகத்தி லிருந்த இவருடைய தகப்பனார் தமது மகனான யூக் என்பவருடைய ஆலோசனைப்படி ஒரு சந்நியாச மடத்தில் சேர்ந்து நல்வாழ்வு வாழ்ந்து தமது 100-ம் வயதில் காலஞ் சென்றார்.

அர்ச்.யூக் சாஸ்திரத்தில் தேர்ந்து குருப் பட்டம் பெற்று தமது ஞான வேலையை வெகு சிரத்தையுடனும் கவனத்துடனும் செய்துவந்தார்.

இவருடைய தர்ம நடத்தையையும் புண்ணியத்தையும் குறித்து கிரநோபில் என்னும் நகருக்கு மேற்றிராணியாராகத் தெரிந்துகொள்ளப்பட்ட போது, இவர் அதற்கு சம்மதியாமலிருந்த போதிலும் அர்ச். பாப்பாண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து மேற்றிராணியார் அபிஷேகம் பெற்றார்.

இவர் தமது பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு ஊர் ஊராய்ப் பிரயாணஞ் செய்து, பாவிகளைத் திருத்தி கெட்ட வழக்கங்களைச் சீர்படுத்தி, கோவில் மானியங்களை அபகரித்தவர்கள் கையினின்று அவைகளை மீட்டு, கோவிலை வசமாக்கி, குருக்களை நன்னெறியில் நிலைநிறுத்தி, குறுகிய காலத்திற்குள் தமது பிரசங்கத்தாலும், விசேஷமாக ஜெபத் தியானத்தாலும், ஒருசந்தியாலும், அழுகை கண்ணீராலும், தமது விசாரணைக் கிறீஸ்தவர்களை நல்ல கிறீஸ்தவர் களாக்கினார்.

இவருடைய உருக்கமான பிரசங்கத்தைக் கேட்டவர்கள் கண்ணீர் சொரிவார்கள்.

ஏழைகள் மட்டில் இவருக்குள்ள இரக்கத்தால் தமது கையில் பணமில்லாதபோது தம்மிடமுள்ள பண்டம் பாத்திரங்களை விற்றுத் தர்மம் கொடுப்பார்.

இவர் 40 வருட காலமாக கடின வியாதியால் பீடிக்கப்பட்டிருந்தும் தமது வேலையை விடாமல் சர்வேசுரனுக்காகக் கடினமாக உழைத்து 80-ம் வயதில் நித்திய முடியைப் பெற்றுக்கொண்டார்.

யோசனை 

நாம் ஆத்தும சமாதானம் அடைய வேண்டுமாகில் உலக சந்தடியை விட்டு விலகி ஜெபத்தையும் ஏகாந்தத்தையும் ஆசிப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். மெலிதோ, மே.
அர்ச். கில்பெர்ட், மே.