ஆகஸ்ட் 01

அர்ச். இராயப்பருடைய சங்கிலித் திருநாள்.

யூதருடைய இராஜாவான அகிரிப்பா என்பவன் பெரிய யாகப்பரைக் கொலை செய்தபின் யூதருக்குப் பிரியப்படும்படி இராயப்பரை பாஸ்கு பண்டிகைக்குப்பின் கொலை செய்யத் தீர்மானித்து, அவரைச் சிறையில் அடைத்து வைத்தான். 

அவர் சிறையினின்று தப்பித்துக்கொள்ளாதபடிக்கு இரவும் பகலும் இரு சேவகர் அவரைச் சிறையில் காக்கவும், வேறு இருவர் சிறை வாசற்படியிலிருக்கவும் கட்டளையிட்டான். கிறீஸ்தவர்களோவெனில் இடைவிடாமல் இவருக்காக சர்வேசுவரனைப் பார்த்து மன்றாடி வந்தார்கள். 

இராயப்பரைக் கொல்லத் தீர்மானிக்கப்பட்ட நாளுக்கு முந்தின நாள் இரவில் ஒரு சம்மனசானவர் சிறையில் தோன்றி, இராயப்பரைத் தட்டியெழுப்பி, தம்மைப் பின்செல்லும்படி கூறினார். அக்கனமே அவரைக் கட்டியிருந்த சங்கிலிகள் தெறித்து விழ அவர் எழுந்து சம்மனசைப் பின்தொடர்ந்தார். 

சிறைக் கதவுகள் தானாகத் திறந்ததுடன் பட்டணத்தின் பெரிய இரும்புக் கதவும் திறக்கப் படவே, இராயப்பர் அங்கிருந்து கிறீஸ்தவர்கள் வாசஞ்செய்த ஒரு வீட்டில் பிரவேசித்தார். 

அந்தச் சங்கிலியை பூர்வீக கிறீஸ்தவர்கள் பக்தியாய் காப்பாற்றி வந்தார்கள். பிற்காலத்தில் தெயதோஸ் இராஜாவின் மனைவியான இராணி திருத்தலங்களைச் சந்திக்கச் சென்றபோது, ஜெருசலேம் நகரின் மேற்றிராணியார் இராயப்பரைக் கட்டியிருந்த திருச் சங்கிலியைக் அவளுக்குப் பரிசாக ஒப்புக்கொடுத்தார். 

அவள் அதைப் பெற்றுக்கொண்டு, உரோமையில் இருந்த தன் குமாரத்திக்கு அதை அனுப்பி வைத்தாள். அவள் அதைப் பாப்பாண்டவரிடம் கொண்டுபோய் காட்டியபோது, அவர் வேறொரு சங்கிலியைக் கொண்டுவந்து, இது இராயப்பர் உரோமையில் கட்டப்பட்ட சங்கிலியென்று கூறி அதை மேசை மேல் வைத்த மாத்திரத்தில், இரண்டும் ஒன்றாய்ச் சேர்ந்து ஒரே சங்கிலியாய் மாறியது. 

இந்த அற்புத சம்பவத்தின் ஞாபகமாக இவருடைய சங்கிலித் திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது.

யோசனை 

சர்வேசுரனுக்காக நாம் அனுபவிக்கும் துன்பதுரிதங்கள் நித்திய சம்பாவனையை நமக்குப் பெற்றுத் தரும்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். ஏழு மக்கபீஸ் சகோதரரும் 
அவர்களின் தாயும், வே.
அர்ச். எதெல்வோல்ட், மே.