மே 02

அர்ச். அத்தனாசியுஸ். பிதா (கி.பி.373) 

கீர்த்தி பெற்ற சாஸ்திரியான அத்தனாசியுஸ் கல்வி சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்து குருப்பட்டம் பெற்றார்.

இவருடைய ஞானத்தாலும் புண்ணியங்களாலும் அலெக்சாந்திரியா நகருக்குப் பிதாப் பிதாவாக நியமிக்கப்பட்டார்.

அக்காலத்தில் ஆரியுஸ் என்பவனாலும் அவனைச் சேர்ந்த கூட்டத்தாராலும் திருச்சபைக்கும் தேசத்திற்கும் வெகு துன்பங்களும் நஷ்டங்களுமுண்டாயின.

தங்கள் நோக்கத்தில் வெற்றிபெற இத்துஷ்டப் பதிதர் எத்தகைய பாவ அக்கிரமங்களுக்கும் பயப்படாமல், தங்கள் அபத்த மதத்தைத் தேசமெங்கும் பரப்ப சகல முயற்சியையும் செய்தபடியால், புண்ணியவாளரான அத்தனாசியுஸ் ஜெப தபத்தாலும், பிரசங்கத்தாலும், வேதத் தர்க்கத்தாலும் திருச்சங்கத்தாலும், அப்பதித மதத்தை அடக்கித் தடுத்து வந்தார்.

இதனால் அந்தப் பதிதர் கோப் வெறிகொண்டு அர்ச். பாப்பரசரிடம் இவருக்கு விரோதமாய்க் கூறிய அவதுாறு எல்லாம் வீணாகப்போனதினால் பதிதர், அத்தனாசியுஸ் மாய வித்தைக்காரன் என்றும், விபசாரியென்றும், கொலை பாதகனென்றும் இராயனிடம் முறையிடவே இக்குற்றங்களை விசாரிக்கும்படி இராயன் உத்தரவிட்டான்.

அத்தனாசியுஸால் கெடுக்கப்பட்டாள் என்று கூறப்பட்ட ஸ்திரீயே, அவர் அப்படிச் செய்யவில்லை என்று சாட்சி கூறினாள்.

இவரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டவனோ நீதிஸ்தலத்தில் தெய்வாதீனமாய் வந்து நின்றபடியால், அத்தனாசியுஸ் மாசற்றவரென்று தெரியவந்தது.

ஆயினும் ஆரியப் பதிதனான இராயனுடைய அநியாய உத்தரவால், ஆரியர் அத்தனாசியுஸுடைய கோவிலைக் கைப்பற்றிக்கொள்ளச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அத்தனாசியுஸ் ஜெப தபத்தாலும் ஒருசந்தியாலும் சர்வேசுரனைப் பார்த்து இந்த தேவ துரோகத்தை தடுக்கும்படி மன்றாடினார்.

குறித்த நாளில் ஆரியுஸ் தன் பெருங் கூட்டத்தாரோடு மேள தாள வாத்தியத்துடன் ஆரவாரமாக தேவாலயத்திற்குப் போகும்போது, திடீரென்று அவனுக்கு வியாதியுண்டாகி, வயிறு வெடித்து வழியில் மாண்டான்.

இதனால் கிறீஸ்தவர் களுக்குச் சந்தோஷமும் பதிதருக்கு வெட்கமும் உண்டாயிற்று.

அத்தனாசியுஸ் நான்கு இராயர் கீழ் தமது மேற்றிராசனத்தை ஆண்டு ஐந்து தடவை பரதேசத்திற்கு அனுப்பப்பட்டு, சகல வித கஷ்டம் துன்பங்களை அனுபவித்த போதிலும் தளராத தைரியத்துடன் சத்தியத்தைப் போதித்து சகலருக்கும் ஞானக் கண்ணாடியாய் விளங்கி முதிர்ந்த வயதில் மோட்ச முடி பெற்றார்.


யோசனை

நமது ஞானப் போதகருக்கு மனவருத்தம் உண்டாக்காமல் அவர்களை கனப்படுத்தி அவர்களுக்குக் கீழ்ப்படிவோமாக.