டிசம்பர் 02

அர்ச். பிபியானா. கி.பி. 363.

பிபியானாவின் பெற்றோர் சத்தியவேதத்திற்காக, வேத துரோகியான ஜுலியான் இராயனுடைய கட்டளைப்படி பிடிபட்டு, தங்கள் இரத்தத்தை சிந்தி வேதசாட்சி முடி பெற்றார்கள். இவர்களுடைய சொத்துக்களையெல்லாம் அதிபதி பறிமுதல் செய்து, அவர்களுடைய குமாரத்திகளான பிபியானாவையும், தெமேத்திரியையும் சிறைப்படுத்தினான்.

அவர்கள் சத்தியவேதத்தை மறுதலிக்கும்படி, தன்னால் முடிந்த முயற்சிகளையெல்லாம் அவன் செய்தான். ஆனால் இவ்விரு புண்ணியவதிகளும் அவன் கருத்திற்கு இணங்காதிருந்தார்கள். நடுவன் அவ்விருவரையும் தன்னிடம் வரவழைத்து, அவர்களை விசாரணை செய்கையில், தெமேத்திரி சத்தியவேதத்தை விடுவதில்லையென்று தைரியமாகக் கூறி, அங்கேயே விழுந்து இறந்தாள்.

பிபியானாவும் அதே எண்ணத்திலிருந்ததை அதிபதி கண்டு, ஒரு துஷ்ட பெண்ணின் கையில் அவளை ஒப்படைத்தான். அப்பெண் பலவாறாய் சோதித்துப் பார்த்தும் பிபியானா சத்தியவேதத்தில் உறுதியாயிருந்தாள். இதனால் அதிபதி சினம்கொண்டு, அவளை கொடூரமாய் அடிக்கக் கட்டளையிட்டான்.

சேவகர் கொடுங்கோலனுடைய கட்டளைப்படி, இளம் பெண்ணான பிபியானாவை ஒரு தூணில் கட்டி கொடூரமாய் அடித்தபோது, அவள் உடலிலிருந்து இரத்தம் ஏராளமாய்ப் புறப்பட்டு தரையில் ஓடியது. சதையும் பிய்ந்து தரையில் விழுந்தது. பிபியானா விசுவாசத்தில் சற்றும் தளராமல், சகல வேதனைகளையும் பொறுமையுடன் அனுபவித்து, ஆண்டவரை நோக்கி மன்றாடி, அங்கேயே உயிர் துறந்து, மோட்சானந்த முடியைப் பெற பாக்கியம் பெற்றாள்.

அவளுடைய சரீரம் துஷ்ட மிருகங்களுக்கு இரையாகப் போடப்பட்டபோதிலும், அது அற்புதமாகக் காப்பாற்றப்பட்டு, கிறீஸ்தவர்களால் நல்லடக்கம் செய்யப்பட்டது.

யோசனை

நமது துன்பதுரிதங்களிலும் இப்புண்ணியவதியைப்போல் பொறுமையை அனுசரிப்போமாகில் புண்ணியத்தில் நிலைக்கொள்வோம் என்பது உண்மை.