காவல் சம்மனசுகளின் திருநாள்
சர்வேசுரன் மனிதருக்கு அருளின கணக்கில்லாத உபகார நன்மைகளுக்குள் அவர் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சம்மனசைக் காவலாகக் கொடுத்ததை பெரும் உபகாரம் எனலாம்.
அசரீரியரும் உந்நதரும் மகா பரிசுத்தருமான தேவதுாதன் அருவருப்பும் நீசமுமான புழுவைப் போன்ற மனிதனுக்கு ஊழியஞ் செய்வது அவனுக்கு எவ்வளவு மகிமை! கௌரவம்! நமது ஆத்தும இரட்சண்ய வேலையில் அவர்கள் நமக்கு உதவி புரிகிறார்கள்.
பாவம் செய்யாதபடி நற்புத்தி கொடுக்கிறார்கள். பசாசால் உண்டாகும் பாவச் சோதனையை வெல்ல தைரியம் கொடுக்கிறார்கள். துன்ப துயரத்தாலும் வியாதி நோயாலும், தரித்திர வறுமையாலும் நாம் துன்பப்படும்போது நமக்கு ஆறுதல் அளிக்கிறார்கள்.
யாதொரு புண்ணியத்தைச் செய்து, புண்ணியவாளருடைய நன்மாதிரிகையைப் பின்பற்றி, தேவதிரவிய அநுமானங்களைப் பெற்று நல்ல வழியில் நடக்க நமது இருதயத்தில் புத்தி ஆலோசனை தருகிறார்கள்.
நமது சந்தோஷத்தில் அவர்கள் மகிழ்கிறார்கள். துக்க துயரத்தில் பங்கு கொள் கிறார்கள். இராப் பகலாய் நம்மோடுகூட இருந்து நமக்கு வரும் பொல்லாப்பு, வியாதி முதலிய ஆபத்தினின்று நம்மைக் காப்பாற்றுகிறார்கள்.
ஆகையால் நமது தாயினும் மேலாய் நம்மை அதிகப் பட்சமாய் நேசிக்கும் நமது காவலான சம்மனசை நாம் சிநேகித்து, சங்கித்து, அவருடைய நல்ல புத்திமதிகளுக்கு செவிசாய்த்து, அவருக்குப் பிரியப்பட வேண்டும்.
அவர் சமுகத்தில் மேரை மரியாதையை அனுசரித்து, பயபக்தியோடு நடக்க வேண்டும். அவர் முன் னிலையில் எந்த பாவத்தையும் செய்ய அஞ்சிக் கூச்சப்பட வேண்டும்.
பயணஞ் செய்யும்போதும், யாதொரு வேலையை ஆரம்பிக்கும்போதும், அவருடைய உதவியை மன்றாட வேண்டும். சம்மனசுக்கள் பரிசுத்தமான வஸ்துக ளாகையால் அவர்களுக்குமுன் பரிசுத்தத்திற்கு விரோதமான கிரிகையைச் செய்ய அஞ்சுவோமாக.
யோசனை
எப்போதும் நமது காவல் சம்மனசை மன்றாடி, விசேஷமாக இரவு வேளையில் நமது ஆத்துமத்தையுஞ் சரீரத்தையும் காத்து காப்பாற்றும்படி அவரை மன்றாடுவோமாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். தோமாஸ், மே.