ஜுன் 02

லையன்ஸ் நகர் வேதசாட்சிகள். (கி.பி. 177) 174-ம் வருஷம் 

கிறிஸ்தவ சேவகர்களுடைய மன்றாட்டினால் மார்குஸ் அவுரேலியுஸ் இராயன் அற்புதமாக ஜெயங்கொண்டபின், வேத கலகம் நிறுத்தப்பட்டது.

இதனால் அஞ்ஞானங் குறைந்து சத்திய வேதம் அபிவிருத்தி அடைந்து வந்தது. துர்மனப் பசாசால் தூண்டப்பட்ட லையன்ஸ் நகரத்து அஞ்ஞானிகள், கிறிஸ்தவ மதம் அதிகமாய் பிரகாசிப்பதைப் பார்க்கச் சகிக்காமல் அரசாங்கத்தின் உத்தரவின்றியே கிறிஸ்தவர்கள் வீட்டில் நுழைந்து அவர்களைப் பிடித்து நிந்தித்து, தூஷித்து, உபாதித்து அவர்கள் வீட்டிலுள்ள பொருட்களை கொள்ளையடித்தப்பின் அவர்களைச் சிறையிலடைத்தார்கள்.

இப்பேர்ப்பட்ட அக்கிரமங்களைப்பற்றி கேள்விப்பட்ட அரசாங்க அதிகாரிகள் அவ்வஞ்ஞானிகளைத் தண்டிக்காமல் மாறாக அவர்கள் செய்த அக்கிரமங்களைப் புகழ்ந்தார்கள்.

இப்படிப் பிடிபட்டவர்களுள் போத்தினுஸ் என்னும் மேற்றிராணியார், சர்ங்டஸ் அற்றாலஸ், பிளாண்டினா முதலியவர்கள் முக்கியமானவர்கள்.

90 வயதிற்கு மேற்பட்ட போத்தினுஸ் மேற்றிராணியார் அனுபவித்த வாதையால் சிறையில் உயிர் துறந்தார்.

பெருங் கூட்டமான கிறிஸ்தவர்களை அதிபதியின் உத்தரவுப்படி கைகளாலும் தடிகளாலும் பலமாய் அடித்தார்கள். சிலருடைய விலா பக்கங்களை பழுக்கக் காய்ச்சிய இரும்புத் தகடுகளால் சுட்டு எரித்தார்கள். சிலரை துஷ்ட மிருகங்களுக்கு இரையாகப் போட்டார்கள்.

அநேக கிறீஸ்தவர்களை நெருப்பில் போட்டு சுட்டெரித்தார்கள். வேறு அநேகரை வாளால் அறுத்தார்கள். இவ்வாறே அத்தனை வேதசாட்சிகளும் சர்வேசுரனுக்காகத் தங்கள் இரத்தத்தை சிந்தி சாட்சி கூறி, வேதசாட்சி முடி பெற்றார்கள்.

அவர்களுள் பிளாண்டினா என்னும் அடிமைப் பெண் இடைவிடாமல் நான் கிறீஸ்தவள் என்று தைரியமாகக் கூறி உயிர் விட்டாள்.

யோசனை 

நாமும் கிறீஸ்துநாதருக்கு உகந்த சீஷராகும்படி துன்பதுரிதங்களை அனுபவித்து உத்தம கிறிஸ்தவர்களாய் நடப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். மார்செல்லினுஸும் துணை., வே.
அர்ச். எராஸ்மஸ், மே.