ஏப்ரல் 02

அர்ச். பவுலா பிரான்சீஸ். துதியர் (கி.பி. 1508) 

பிரான்சீஸ் என்பவர் பவுலா என்னும் ஊரில் ஏழைகளான தாய் தகப்பனிடத்தினின்று பிறந்து, சிறுவயதிலேயே தேவ பயபக்தியுள்ளவரானார்.

இவருக்கு 15-ம் வயது நடக்கும்போது ஏகாந்தத்தை விரும்பி ஒரு கெபிக்குள் சென்று ஜெபத் தியானத்திலும் கடுந் தவத்திலும் ஜீவித்து வந்தார்.

ஒரு பாறை மேல் கொஞ்சம் நேரம் படுத்து இளைப்பாறுவார். மயிர்ச்சட்டையை அணிந்து கொள்வார். இறைச்சி முதலியவற்றை ருசி பார்த்தவரல்ல. கீரை, கிழங்கு முதலியவற்றை மாத்திரம் புசிப்பார்.

இவருடைய அர்ச்சியசிஷ்டதனத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட கணக்கில்லாத மக்கள் இவருக்குச் சீஷரானார்கள்.

பிரான்சீஸ், தமது குகை அருகில் ஒரு மடம் கட்டி வைத்து அதில் துறவிகளைச் சேர்த்து புண்ணிய வழியை அவர்களுக்குப் போதித்து வந்தார்.

தாழ்ச்சி உள்ளவரான இவர் தமது சபை சந்நியாசிகளுக்கு “சிறியவர்கள்” என்னும் பெயரிட்டார்.

இவருடைய புண்ணியத்தால், மரித்தவர்களுக்கு உயிரையும், வியாதியஸ்தருக்கு சுகத்தையும் கொடுத்து, பேயை ஓட்டி அநேகப் புதுமை களைச் செய்துவந்தார்.

குரூர குணமுடைத்தான ஃபெர்டினாண்ட் அரசன் இவருக்கு ஏராளமான திரவியத்தை தர்மமாக அளித்தபோது, அப்பணத்தி னின்று இரத்தம் வரும்படி செய்து, அதை அவர் பெற்றுக்கொள்ளாமல், கொடுமையாய் நடத்தப்பட்ட தன் பிரஜைகளுக்கு அதை உத்தரிக்கும்படி சொன்னார்.

அர்ச். பாப்பாண்டவரின் உத்தரவுப்படி சாகக் கிடக்கும் 11-ம் லூயிஸ் அரசனை சந்தித்து அவரை நல்ல மரணத்திற்கு தயார் செய்தார். இவருடைய சபை ஐரோப்பா முழுவதும் பரவியபடியால் சகலரும் இவருக்கு சங்கை செய்து மதித்து வந்தார்கள்.

இவர் உத்தமராய் வாழ்ந்து 91-ம் வயதில் பெரிய வெள்ளியன்று பாக்கியமான மரணமடைந்தார். வெகு காலம் அழியாதிருந்த இவருடைய சரீரத்தை பதிதர் நெருப்பில் சுட்டெரித்தார்கள்.

யோசனை 

தாழ்ச்சியென்னும் புண்ணியம் சகல புண்ணியங்களுக்கும் அஸ்திவார மாகையால் அதை அநுசரிப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். அப்பியன், வே.
அர்ச். தெயதோசியா, க.வே.
அர்ச். நிசேசியுஸ், அதிமே.
அர்ச். எப்பாவும் துணை. வே.
அர்ச். கான்ஸ்ட ன்டையின், இ.வே.