அர்ச். ப்ளாஸியார். மேற்றிரானியார், வேதசாட்சி (கி.பி.316)
இவருடைய அரிதான புண்ணியங்களினிமித்தம் செபாஸ்த் என்னும் நகருக்கு மேற்றிராணியாரானார். அக்காலத்திலுண்டான பயங்கரமான வேத கலாபனையினிமித்தம் இவர் ஒரு மலைக் கெபிக்குச் சென்று அவ்விடத்தில் ஜெபதபம் புரிந்துவந்தார்.
பல பிணிகளால் வருந்திய சிங்கம், புலி முதலிய காட்டு மிருகங்கள் அக்குகைக்குள் சென்று, அர்ச்சியசிஷ்டவரால் குணமடைந்து வருவதுண்டு.
ஓரு நாள் அந்நாட்டு அதிபதியின் ஊழியர் அந்தக் காட்டில் வேட்டையாடுகையில், காட்டு மிருகங்கள் மேற்படி குகையில் ஜெபஞ் செய்யும் ப்ளாஸியருக்காகக் காத்திருப்பதைக் கண்டு, அதைத் தங்கள் எஜமானுக்கு அறிவித்தார்கள்.
அதிகாரியின் உத்தரவுப்படி சேவகர் ப்ளாஸியாரைப் பிடித்துக் கொண்டு வருகையில், இறந்துபோன ஒரு குழந்தையை உயிர்ப்பித்ததைக் கண்ட சேவகரில் சிலர் கிறிஸ்தவர்களானார்கள். ப்ளாஸியார் வேதத்தை மறுதலித்துப் பொய் தேவர்களை வணங்கும்படி அதிகாரி செய்த முயற்சிகள் எல்லாம் வீணானதால், அவரை கொடூரமாய் அடிப்பித்து, சிறையிலடைத்தான்.
சிறையிலும் அநேக நோயாளிகள் அவரால் குணப்படுத்தப்பட்டார்கள். இவரது காயங்களிலிருந்து வடியும் இரத்தத்தை சில ஸ்திரீகள் பக்தியோடு தொட்டு தங்கள் மேல் பூசிக்கொண்டதினால், அதிபதி அவர்களை நெருப்பில் போட்டு சுட்டெரிக்கும்படி உத்தரவிட்டான்.
ஆனால் நெருப்பு அவர்களைச் சுடாததினால் சிரச்சேதம் செய்வித்தான். வேதசாட்சியை அதிபதியின் கட்டளைப்படி ஆழமான ஜலத்தில் அமிழ்த்தியும் அவர் சாகாததினால், அவர் தலை வெட்டுண்டு வேதசாட்சி முடி பெற்றார்.
யோசனை
நாம் பக்தியோடு ஜெபிப்பதுடன், பக்திமான்களைப் பழித்துப் பரிகாசம் செய்யாமலும் இருப்போமாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். ஆன்ஸ்காரியஸ், மே.
அர்ச். வெர்பர்க், க.
அர்ச். மார்க்க ரெட், க.