அர்ச். மலக்கியார் பேராயார் - (கி.பி. 1148).
பக்தியுள்ள உயர்ந்த குடும்பத்தைச் சார்ந்த தாய் தந்தையரிடம் மலக்கியார் பிறந்து, சிறு வயதிலேயே பக்தியிலும், ஞானத்தில் சிறந்து தாழ்ச்சி, பொறுமை, ஒறுத்தல் முதலிய புண்ணியங்களை அனுசரித்துவந்தார்.
இவர் ஞானசாஸ்திரங்களைக் கற்றறிந்தபின், குருப்பட்டம் பெற்று, ஊக்கமுடன் தமது பங்கு மக்களின் ஆன்ம இரட்சணியத்திற்காக உழைத்துவந்தார். ஏழை எளியவர்கள் வசிக்கும் குடிசைகளுக்குப் போய், தமது சிறந்த புத்திமதியால் அவர்களை நல்வழியில் திருப்பி, தம்மால் முடிந்த உதவி ஒத்தாசைகளைச் செய்துவருவார்.
திக்கற்றவர்களின் பிரேதங்களைத் தமது கையால் அடக்கம் பண்ணுவார். இதைக் கண்ட இவர் சகோதரி, கோபத்துடன் இவரைப் பார்த்து, செல்வந்தரின் மகனான நீர் இப்பேர்ப்பட்ட தாழ்ந்த வேலைகளைச் செய்வது குடும்பத்திற்கு எவ்வளவு அவமானம் என்று இவரைக் கடிந்துகொள்வாள்.
இவள் மரணமானபின், மலக்கியார் இவள் ஆத்துமத்திற்காக திவ்விய பலிபூசை செய்து வேண்டிக்கொண்டார், வெகு காலத்திற்குப்பின் மரணமடைந்த இவர் சகோதரி மிகவும் துக்கத்துடன் தன் தமயனுக்குத் தோன்றி தன் நிர்ப்பாக்கிய நிலையை இவருக்கு அறிவித்தாள்.
அப்போது மலக்கியார் மேலும் அநேக திவ்விய பலிபூசைகள் நிறைவேற்றி, இவள் ஆத்துமத்திற்கு ஒப்புக்கொடுத்தார். மறுபடியும் இவருடைய சகோதரி சந்தோஷத்துடன் இவருக்குத் தோன்றி, தான் மோட்சத்திற்குப் போவதாக அறிவித்தாள்.
இவருடைய புண்ணிய செயல்களைப் பார்த்து, பாப்பரசர் இவரைப் பேராயராக நியமித்தார். இவர் தமது புண்ணிய வாழ்வாலும், புத்திமதியாலும் தமது மறைமாவட்டக் கிறீஸ்தவர்களை நல்ல கிறீஸ்தவர்களாக மாற்றினார்.
இவர்மேல் அவதூறு கூறிய ஒரு மனிதனுடைய நாக்கு அழுகி, அவன் அவலமாய் மாண்டான். வேறொரு பெண் இப்பேர்ப்பட்ட பாவத்திற்காகப் பைத்தியம் பிடித்து, நிர்ப்பாக்கியமாய் இறந்தாள்.
மலக்கியார் அநேக புதுமைகளைச் செய்து புண்ணியத்திலும் ஜெபத்தியானத்திலும் மிகுந்து, அர்ச்சியசிஷ்டவராக காலஞ்சென்றார்.
யோசனை
நாம் உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்களை மறவாமல், நாள்தோறும் அவர்களுக்காக மன்றாடவேண்டும்.