ஜுன் 03

அர்ச். க்ளோடில்தம்மாள். இராணி (கி.பி.545) 

அஞ்ஞானியும் பிரான்ஸ் தேசத்து அரசனுமான க்ளோவிஸ் என்பவன் அழகியும் புண்ணியவதியுமான க்ளோடில்டாவை மணமுடித்துக் கொண்டான்.

கிறீஸ்தவளும், தாழ்ச்சி, கற்பு முதலிய புண்ணியங்களால் அலங்கரிக்கப்பட்டவளுமான இப்பெண்மணி முரடனும் கோபியும் கடவுளை அறியாதவனுமான அரசனை மணந்தபின், அவனுடைய குணாதிசயங்களையும் நடத்தையையும் கவனமாய்க் கண்டறிந்து, தக்க சமயம் பார்த்து சத்திய வேதத்தின் மகத்துவத்தைப்பற்றித் தன் கணவனுக்கு விளக்கி வந்ததுடன், அவன் மனந்திரும்பும்படியாக நாள்தோறும் ஜெப தபத்தாலும் கண்ணீராலும் சர்வேசுரனை மன்றாடி வந்தாள்.

இவர்களுக்குப் பிறந்த குழந்தை ஞானஸ்நானம் பெற்று இறந்தது. இரண்டாவது குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுத்தாள் அதுவும் இறந்துபோகுமென்று எண்ணி அரசன் அதற்குச் சம்மதியாதபோது, இராணி அரசனுக்குத் தைரியஞ் சொல்லி ஞானஸ்நானம் கொடுத்தாள். அதுவோ பிழைத்தது.

ஒரு தடவை இளவரசன் எதிரிகளுடன் யுத்தம் செய்கையில், தான் தோல்வியடையப் போவதை கண்டு "க்ளோடில்டாவின் தேவனே எனக்கு ஜெயம் கொடும்” என்று மன்றாட அவன் அற்புதமாக வெற்றியடைந்தான்.

உடனே அரசன் தாமதியாமல் ஞானஸ்நானம் பெற்றதினால், அத்தேசத்தாரும் தங்கள் அரசனைப் பின்பற்றி சத்திய வேதத்தைக் கைக்கொண்டார்கள்.

க்ளோடில்டா இராணி சத்திய வேதத்தைப் பரப்புவதற்காக மிகவும் பிரயாசைப்பட்டு, அநேக கோவில்களையும் மடங்களையும் கட்டுவித்து, தன் தேசத்தாருக்கு ஒரு நல்ல தாய் போல் விளங்கி அர்ச்சியசிஷ்டவளாய் காலஞ் சென்றாள்.

யோசனை

ஸ்திரீகளே! உங்கள் கணவர் கோபிகளும், குடியரும், காமவெறியரும், தேவதிரவிய அநுமானங்களை அசட்டை செய்பவர்களுமாய் இருப்பார்களேயாகில், இந்த நல்ல இராணியைக் கண்டுபாவித்து ஜெபத்தாலும் கண்ணீராலும் நல்ல புத்திமதியாலும் அவர்களை மனந்திருப்பும்படி முயற்சி செய்யுங்கள்

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். செசீலியுஸ், து.
அர்ச். கெய்வின், மே.