அர்ச். பிரான்சீஸ்கு அசீசியார் - துதியர் (கி.பி. 1226)
ஐந்து காய பிரான்சீஸ்கு இத்தாலி தேசத்தில் பிறந்து தன் தந்தையைப் போல வியாபாரம் செய்து வந்தார். அவர் சாந்த குணமும், இரக்கம் நிறைந்த வருமாய் இருந்தபடியால் ஏழைகளை நேசித்து அவர்களுக்கு உதவி புரிவார்.
இவர் தருமத்தில் அதிக செலவு செய்கிறதை அறிந்த அவர் தந்தை, அவ்வூர் மேற்றிராணியாரிடம் தன் குமாரனை கூட்டிக்கொண்டு போய், அவர் மேல் குற்றம் கூறி, அது முதல் அவருக்குச் சேர வேண்டிய சொத்துக்கள் முதலிய உரிமை சுதந்திரத்தை விட்டுவிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு பிரான்சீஸ்கு சம்மதித்து தன் வஸ்திரங்களையும் தன் தந்தை கையில் கொடுத்து, இனி பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே என்று தாராளமாய்ச் சொல்ல இடமுண்டு என்று கூறி, அது முதல் தம்மை தேவ ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
யாசகஞ் செய்து சில கோவில்களை செப்பனிட்டார். உலக நன்மையை முற்றிலும் புறக்கணித்து, பரிசுத்த தரித்திரத்தை விரும்பி, ஏழை களுக்கு உதவி செய்து வியாதியஸ்தர்களைச் சந்தித்து ஜெப தபங்களைச் செய்து வந்தார்.
இவருக்கு சீஷர்களாக வந்த 12 பேருடன் உரோமைக்குச் சென்று பாப்பாண்டவருடைய அனுமதி பெற்று ஒரு சன்னியாச சபையை ஸ்தாபித்து, அந்த சபையோருக்கு “மிகவும் சிறியவர்கள்'' என்னும் பெயரிட்டார்.
வேதசாட்சியாக விரும்பி, இவர் துலுக்கர் இராஜ்ஜியத்திற்கு சென்றபோது, துலுக்கர் அரசன் அவரைக் கனப்படுத்தி, வெகுமதிகளைக் கொடுத்ததினால் அவர் அத்தேசத்தை விட்டுப் புறப்பட்டார்.
வருஷத்தில் பல முறை அநேக நாட்களை தபசு காலமாக அனுசரித்து, அர்ச். மிக்கேல் சம்மனசானவரின் திருநாளுக்குமுன் 40 நாட்கள் ஒருசந்தி பிடித்து அற்புதமாக ஐந்து காய வரம் பெற்றார்.
அடிக்கடி கர்த்தருடைய பாடுகளை நினைத்து விம்மி அழுவார். பெரும் பாவியாகத் தம்மைத் தாழ்த்துவார். பரிசுத்த தரித்திரத்தை அனுசரித்து, அவர் சபையோரும் அவ்விதமே செய்ய புத்தி சொல்லி, அதை மீறினவர்களைக் கண்டிப்பார்.
புதுமை வரமும் தீர்க்கதரிசன வரமும் பெற்று, சகலராலும் மகிமைப்படுத்தப்பட்டார். குறுகிய காலத்திற்குள் இவர் சபை ஐரோப்பா தேசமெங்கும் பரவி அநேகாயிரம் சன்னியாசிகள் அதில் சேர்ந்தார்கள்.
பிரான்சீஸ்கு கடின வியாதியாய் விழுந்து, கர்த்தர் பாடுபட்ட வர்த்தமானம் வாசிக்கப்படும்போது தமது ஆத்துமத்தை சர்வேசுரனிடம் ஒப்படைத்து மரணமானார்.
யோசனை
உலக பாக்கியம் வெறும் புகையென்று உணர்ந்து மெய்யான பாக்கியத்தைத் தேடுவோமாக.