அர்ச். மோனிக்கம்மாள். விதவை (கி.பி. 387)
அர்ச். அகுஸ்தீன் என்பவருடைய தாயாரான மோனிக்கம்மாள் சிறு வயதில் புண்ணிய வழியில் வாழ்ந்து வந்தாள்.
இவள் அஞ்ஞானியான ஒருவனை மணமுடித்துக்கொண்டு, அவன் ஞானஸ்நானம் பெறும்படி ஜெப தபத் தாலும் புத்திமதியாலும் பிரயாசைப்பட்டு வந்தாள்.
அம்மனிதன் முன்கோபக் காரனானதால், தன் மனைவியை அவன் கோபித்துத் திட்டும்போது, அவள் ஒன்றும் பேசாமல் பொறுமையாயிருந்து, கோபம் தீர்ந்தபின் அவனுக்கு நியாயத்தை எடுத்துக் காட்டினதினால் அவன் பிறகு சாந்த குணமுள்ளவனாகி, ஞானஸ்நானம் பெற்று நல்ல கிறீஸ்தவனாய் மரித்தான்.
மற்ற ஸ்திரீகள் தங்கள் புருஷன்மார்களுடைய தவறுகளைப்பற்றி மோனிக்கம்மாளிடம் முறையிடும்போது, உங்கள் கணவர் மட்டில் தப்பிதமில்லை, உங்கள் அடக்கமற்ற நாவின் மேல்தான் தப்பிதமென்று சொல்லி, அவர்களுக்கு நற்புத்தி சொல்லு வாள்.
இவளுடைய மூன்று பிள்ளைகளுள் அகுஸ்தீன் என்பவர் துடுக்கன். இவர் மனிக்கேயர் பதித மதத்தில் சேர்ந்து பெரும்பாவியாய் நடப்பதைக் கண்ட மோனிக்கம்மாள் இடைவிடாமல் கண்ணீர் அழுகையுடன் ஜெபஞ் செய்து அவர் மனந்திரும்பும்படி சர்வேசுரனை மன்றாடுவாள்.
தன் மகனுக்காக வேண்டிக் கொள்ளும்படி மேற்றிராணிமாரையும் குருக்களையும் மன்றாடுவாள். மேலும் தன் மகன் போகும் ஊர்களுக்குப் போய் அவன் பாவ வழியை விடும்படி புத்தி சொல்லுவாள்.
மோனிக்கம்மாளுடைய ஜெபம் வீணாகவில்லை. தனது 30-வது வயதில் அகுஸ்தீன் மனந்திரும்பினார்.
சில காலத்திற்குப்பின் மோனிக்கம்மாள் மரண அவஸ்தையாயிருக்கும்போது அகுஸ்தீனுக்கு நல்ல புத்திமதி சொல்லி, தான் இறந்தபின் தன் ஆத்துமத்திற்குப் பூசை செய்விக்கும்படி கேட்டுக் கொண்டாள்.
அவ்வாறே அவர் பூசை செய்ததுடன், அவர் குருவான பின்னும் அநேக வருடகாலம் தன் தாயாரின் ஆத்துமத்திற்காக திவ்விய பலிபூசை நிறைவேற்றி ஒப்புக்கொடுத்தார்.
யோசனை
ஸ்திரீகளே! மோனிக்கம்மாளைக் கண்டுபாவித்து உங்கள் புருஷர் களால் வீட்டில் சண்டை சச்சரவு உண்டாகி உங்களை அவர்கள் குரூரமாய் நடத்தும்போது, நாவை அடக்கி சற்றுப் பொறுமையாய் இருப்பீர்களேயாகில் சீக்கிரத்தில் சமாதானமுண்டாகும். உங்கள் பிள்ளைகளால் உங்களுக்குத் துன்பமும் சங்கடமும் உண்டாகும்போது ஜெபத்தாலும் புத்திமதியாலும் அவர் களை நல்வழிக்குத் திருப்புவீர்களாக.