ஆகஸ்ட் 04

அர்ச். தோமினிக் - துதியர் (கி.பி. 1212) 

சாமிநாதர் என்று வழங்கப்படும் தோமினிக் என்பவர் ஸ்பெயின் தேசத்தில் பக்தியுள்ள தாய் தகப்பனிடத்தினின்று பிறந்து, சிறுவயதிலேயே தெய்வபக்தியுள்ளவராய் நடந்துவந்தார். 

இவர் கல்விக்கூடத்தில் படிக்கும் காலத்தில் பெரும் பஞ்சத்தால் ஜனங்கள் அவதிப்படுகையில் தமது ஆஸ்தியை யெல்லாம் ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தார். தம்மிடத்தில் பணமில்லாத போது தமது புத்தகங்களையும் விற்று தர்மங் கொடுத்தார். 

ஒரு அடிமையை விற்கும்படி அவனுக்குப் பதிலாக தாமே அடிமையாயிருந்தார். படிப்பை முடித்து, குருப்பட்டம் பெற்று, பிரசங்கிகளின் ஒரு சபையை உண்டுபண்ணி, அவர்களுடன் பல தேசங்களுக்குச் சென்று பிரசங்கித்தார். 

இவர் இடைவிடாமல் ஜெபஞ் செய்து கடின தவம் புரிந்து இரத்தம் வரத் தம்மை அடித்துக்கொள்வார். அக்காலத்தில் அல்பிஜென்சஸ் என்னும் ஒரு புது பதித மதம் உண்டாகி, ஒரு கொள்ளை நோய் போல ஐரோப்பா முழுவதும் பரவியது. அந்தத் துஷ்டர், கிறீஸ்தவர்களைக் கொலைசெய்து, கோவில்களைக் கொள்ளையடித்து, பட்டணங்களைத் தீக்கிரையாக்கி, அநேக அக்கிரமங்களைச் செய்தார்கள். 

தோமினிக் தமது சபை குருக்களுடன் தேசமெங்கும் போய் பிரசங்கித்து அநேக பதிதரை மனந்திருப்பினார். மேலும் தேவதாயார் கட்டளைப்படி 153 மணி ஜெபமாலை ஜெபிக்கும் விதத்தை ஜனங்களுக்குக் கற்பித்தார். 

திருஜெபமாலையின் பக்தியால் மேற்கூறிய துஷ்ட பதித மதம் குறைந்து, காலப்போக்கில் அடியோடு மறைந்து போயிற்று. ஜெபமாலையின் பக்தியால் திருச்சபைக்கு அநேக பிரயோஜனம் உண்டாயிற்று. 

தோமினிக் தமது சபை மடங்களை அநேக ஊர்களில் ஸ்தாபித்து ஊர் ஊராய்ப் போய் பிரசங்கம் செய்து, அநேக புண்ணியங்களைச் செய்து இறந்துபோன மூவருக்கு உயிர் கொடுத்து, தமது 51-ம் வயதில் மரித்து மோட்ச சம்பாவனையை அடைந்தார்.

யோசனை

நாமும் ஜெபமாலை சபையில் சேர்ந்து, அந்தப் பரிசுத்த ஜெபமாலையை நாள்தோறும் பக்தியோடு ஜெபிப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். லுவானுஸ், ம.