டிசம்பர் 04

அர்ச். பார்பரா. கன்னிகை, வேதசாட்சி. (கி.பி. 235).
பார்பரா பிற மதத்தைச் சார்ந்த பெற்றோரிடமிருந்து பிறந்து, பொய்த் தேவர்களை ஆராதித்து வந்தாள். ஆனால் அந்தப் பொல்லாத தேவர்களுடைய நடத்தையை அறிந்தபின், அவர்களை ஆராதியாமல், தனக்கு ஞான அறிவு உண்டாகவும், மெய்யான கடவுளை அறிந்து ஆராதிக்கவும் விரும்பி, அதே கருத்துடன் தினந்தோறும் ஜெபித்து வந்தாள்.

பொய் மதத்தின் மட்டில் வைராக்கியமான பக்தி வைத்திருந்த டியஸ்கோறஸ் என்னும் இவளுடைய தந்தை ஒரு கோபுரம் கட்டி, அதில் பார்பராவை வைத்திருந்தான். மெய்யான கடவுளை அறிய ஆசை கொண்ட இவள், தன் வேலைக்காரி மூலமாக ஒரு குருவானவரை தன்னிடம் இரகசியமாய் வரவழைத்து, அவர் வழியாய் சத்தியவேதத்தை அறிந்து, ஞானஸ்நானம் பெற்றாள்.

இதையறிந்த இவள் தந்தை கோபத்தால் பொங்கியெழுந்து, இவள் கிறீஸ்தவ வேதத்தை மறுதலிக்க அநேக முயற்சிகள் செய்தும், இவள் அதற்கு இணங்கவில்லை. அவன் இவளை அதிகாரிகளுக்கு கையளித்து வதைக்கும்படி கூறினான். ஆனால் பார்பரா சத்தியவேதத்தில் உறுதியாயிருப்பதை டியஸ்கோறஸ் அறிந்து, கோபத்தில் வெறிகொண்டு மகள் எனறும் பாராமல், தன் கையாலேயே இவளை வெட்டிக் கொன்றான்.

அக்கணமே அவன்மேல் இடி விழுந்து அவலமாய் மாண்டான். பார்பராவின் வேண்டுதலால் அநேகர் மரண நேரத்தில் கடைசி தேவதிரவிய அனுமானங்களைப் பெற பாக்கியம் பெற்றதால், கிறீஸ்தவர்கள் தங்களுக்கு நொடிப்பொழுதில் மரணம் வராதபடிக்கு, இந்த வேதசாட்சியை விசேஷ விதமாக மன்றாடி வருகிறார்கள்.

யோசனை

நாமும் மரண நேரத்தில் பாவசங்கீர்த்தனம், தேவநற்கருணை முதலிய தேவதிரவிய அனுமானங்களைப் பெற்று மரிக்கும்படி அர்ச். பார்பரம்மாளைப் பார்த்து மன்றாடுவோமாக.