நவம்பர் 05

அர்ச். பெர்ட்டில் கன்னிகை - (கி.பி. 692).

பெர்ட்டில் பிரான்ஸ் தேசத்தில் உயர்ந்த குடும்பத்தில் பிறந்து, சிறுவயதிலேயே வேடிக்கை விளையாட்டுகளை விட்டு புண்ணிய வழியில் நடந்துவந்தாள். 

உலகத்தில் பேரும் புகழும், பெருமையும், சுகபோகமும் வீண் என்று இப்புண்ணியவதி உணர்ந்து, தாழ்ச்சி, பொறுமை, தலைவணங்குதல் போன்ற புண்ணியங்களே மெய்யான பாக்கியமென்று அறிந்து, ஆண்டவருக்கு ஊழியம் செய்யத் தீர்மானித்தாள்.! 

இந்தக் கருத்திற்காக ஆண்டவரைப் பார்த்து மன்றாடி, தன் ஆன்ம குருவாகிய ஒரு அர்ச்சியசிஷ்டவருக்குத் தன் கருத்தை அறிவித்தாள். அவரும் இவளைச் சில காலம் சோதித்துப் பார்த்தபின், இவளுக்கு தேவ அழைப்பு இருக்கிறதென்று தெரிவித்தார். 

இதையறிந்த பெர்ட்டிலின் பெற்றோர் சந்தோஷமடைந்து, தங்கள் குமாரத்தியை அழைத்துக்கொண்டு போய் ஒரு கன்னியர் மடத்தில் விட்டார்கள். அவ்விடத்தில் பொட்டில் ஜெபதப முதலிய ஞானக் காரியங்களை உற்சாகத்துடன் அனுசரித்து, சில காலத்திற்குப்பின் இவள் அம்மடத்தின் சிரேஷ்ட தாயாராக தெரிந்துகொள்ளப்பட்டாள். 

இவள் அம்மடத்துக் கன்னியரைத் தன் பிள்ளைகளாகப் பாவித்து, அன்பு நேசத்துடன் அவர்களைச் சிநேகித்து, ஒழுங்குகளை சீராய் அனுசரித்து சகலருக்கும் ஒரு வேலைக்காரியைப்போல் நடந்துவந்ததினால், மற்ற கன்னியரும் தங்கள் சிரேஷ்ட தாயாரைக் கண்டுபாவித்து புண்ணியவதிகளானார்கள். 

இவளுடைய அர்ச்சியசிஷ்டதனத்தைக் கண்ட இரண்டு இராணிகளும், அநேக பிரபுக்களின் குமாரத்திகளும் இம்மடத்தில் சேர்ந்து, உலகத்திற்கு மரித்து, சம்மனசுக்களைப் போல வாழ்ந்தார்கள். 

பெர்ட்டில் சகல புண்ணியங்களையும் உத்தமமாய் அனுசரித்து, மடத்தின் தாழ்ந்த வேலைகளைச் செய்து, சகலருக்கும் ஞானத் தீபமாகப் பிரகாசித்து, நித்திய மோட்ச பாக்கியத்தைச் சுதந்தரித்துக்கொண்டாள்.

யோசனை 

நாமும் நமது வாழ்வின் நிலையைத் தெரிந்துகொள்வதற்குமுன், தேவ உதவியை மன்றாடி, குருக்களின் நல்ல ஆலோசனையைத் தேடக்கடவோம்.