அர்ச். சிலுவை அருள் ஜோசப். துதியர் (கி.பி. 1734).
அர்ச். சிலுவை அருள் ஜோசப் சிறு வயதில் பாவத்தை வெறுத்ததுடன் தன் தோழர்களையும் அவ்வாறு வெறுக்கும்படி வற்புறுத்துவார்.
ஏழைகள் மட்டில் இரக்கம் காட்டி தன் போசனத்தை அவர்களுடன் பகிர்ந்து புசிப்பார்.
தமது 16-ம் வயதில் அர்ச். பிரான்சிஸ்கு சபையில் சேர்ந்து நாளுக்கு நாள் புண்ணியத்தில் உயர்ந்து வந்தார். மடத்தில் கொடுக்கப்பட்ட வேலைகளைப் பிரமாணிக்கமாய் செய்து வந்தார்.
சர்வேசுவரன் மட்டில் தளராத விசுவாசம் கொண்டு மனிதனுக்கு சாத்தியப்படாத காரியங்களைச் செய்து முடிப்பார். இடைவிடாமல் ஜெபத் தியானஞ் செய்து சர்வேசுரனோடு ஒன்றித்திருப்பார்.
அவர் செய்த அருந்தவப் புண்ணியங்கள் அதிசயத்துக்குரியவை. கடும் பஞ்ச காலத்தில் போஜன பதார்த்தங்களைப் புதுமையாக பெருகச் செய்வார் சந்நியாசிகளுக்கு வேண்டிய காய், கீரை முதலியவைகள் இவருடைய வார்த்தைக்கு கட்டுப்பட்டு முளைத்து வளர்ந்தன.
இவருக்குண்டாயிருந்த மிதமிஞ்சின பிறர் சிநேகத்தால் பிறருக்கு வேண்டிய உணவுகளை அற்புதமாகக் கொடுத்து, அவருடைய ஜெபத்தால் அநேகருடைய வியாதிகளை அற்புதமாய் சொஸ்தப்படுத்தினார்.
இவர் சாகும் வரையில் தமது சபைக்காக உழைத்து தாம் தீர்க்கத்தரிசனமாகக் கூறிய நேரத்தில் தமது ஆத்துமத்தை சர்வேசுரன் கையில் ஒப்படைத்தார்.
யோசனை
நாமும் அர்ச். சிலுவை அருள் ஜோசப்பைப் பின்பற்றி பிறருக்கு உண்டாயிருக்கும் துன்பம் துரிதம் நமக்கே உண்டானதென்று எண்ணி அவர்கள் மட்டில் இரக்கம் காட்டுவோமாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். ஆடிரியானும் யுபுலுஸும், வே.
அர்ச். கியாரன். மே.
அர்ச். ரோஜர், து.