மே 05

அர்ச். 5-ம் பத்திநாதர். பாப்பாண்டவர் (கி.பி. 1572)

அர்ச். தோமினிக் சபை சந்நியாசியான மிக்கேல் என்ற இவருக்கு உண்டாயிருந்த மேலான ஞானத்தினாலும் அர்ச்சியசிஷ்டதனத்தினாலும் இவர் குருவாகி மேற்றிராணியார் அபிஷேகம் பெற்றுக் கர்தினால் பட்டத்தை அடைந்து, 4-ம் பத்திநாதர் பாப்பாண்டவருடைய மரணத்திற்குப்பின் 5-ம் பத்திநாதர் என்னும் பெயரைக் கொண்டு அர்ச். இராயப்பருடைய சிம்மாசனத்தில் ஏறினார்.

இவர் தமது முந்தைய வழக்கத்தை விடாமல், தபத்தையும் ஒருசந்தி யையும் அனுசரித்து புண்ணிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இவர் குருக்க ளுடைய நல்லொழுக்கத்தைக் கவனித்து, தவறுகளைக் கண்டித்து, குருக்கள் செய்யும் கடமை ஜெப் புத்தகத்தையும், பூசைப் புத்தகத்தையும் சரிபார்த்து, தேவ பாடல்களைச் சீர்திருத்தி, திரிதெந்தின் சங்கத்தின் தீர்மானங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தார்.

இங்கிலாந்து தேசத்தில் சத்திய வேதத்தினிமித்தம் அநேக கத்தோலிக்கக் கிறீஸ்தவர்களை குரூரமாய்க் கொன்ற எலிசபெத் என்னும் இராணிக்குத் திருச்சபை சாபமிட்டு வேதத்தினிமித்தம் சிறைபடுத்தப்பட்ட ஸ்காட் மேரி இராணிக்கு ஆறுதலான நிருபம் அனுப்பினார்.

கிறீஸ்தவ வேதத்தை அழிக்கும் கருத்துடன் துலுக்கர் அநேகப் பட்டணங்களைப் பிடித்துப் பாழாக்கி, கிறிஸ்தவர்களை குரூரமாய் உபாதித்துக் கொன்று லெபாந்த்தோ என்னுமிடத்தில் ஏராளமான கப்பற்படையைச் சேர்த்து, போர் புரிகையில், கிறிஸ்தவர்களுக்கு ஜெயமுண்டாகும்படி இவர் மகா பக்தி விசுவாசத்துடன் தேவமாதாவைப் பார்த்து வேண்டிக்கொண்டார்.

அற்புதமாய் கிறீஸ்தவர்கள் ஜெயங்கொண்டதை இவர் தூரதிருஷ்டியால் அறிந்து, மற்றவர் களுக்குத் தெரியப்படுத்தினார். இவர் தமது 68-ம் வயதில் அர்ச்சியசிஷ்டவ ராகக் காலஞ் சென்றார்.

யோசனை

நமது அதிகாரத்திற்குட்பட்டவர்களுடைய நடத்தையைக் கவனித்து, அவர்கள் தவறுகளைக் கண்டித்து அவர்களுக்குப் புத்தி புகட்டுவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். ஹிலாரி, மே.
அர்ச். ஆன்ஜெலுஸ், வே.
அர்ச். மவுரோன்ட், ம.
அர்ச். அவர்டின், து