பனிமயமாதா திருநாள் (கி.பி. 435)
ஐந்தாம் நூற்றாண்டில் உரோமையில் பக்தியுள்ள விசுவாசியும் செல்வந்தருமான பத்ரீசியுஸ் என்னும் பிரபு ஒருவர் இருந்தார்.
இவர் திருமணம் செய்தும் புத்திரபாக்கியமில்லாமையால், தம்மிடமுள்ள திரண்ட செல்வத்தை ஏதாவது ஒரு நல்ல காரியத்திற்காக செலவிட விரும்பி, அவரும் அவரது மனைவியும் தேவமாதாவைப் நோக்கி பக்தியோடு வேண்டிக்கொண்டு வந்தனர்.
ஒரு நாள் நித்திரையில் மோட்ச இராக்கினி அவ்விருவருக்கும் தனித்தனியாகத் தரிசனையாகி, அருகிலுள்ள மலையில் பனி உறைந்திருக்கும் ஸ்தலத்தில் தமது பேரில் ஒரு தேவாலயம் கட்டும்படிக் கூறினார்கள்.
மறுநாள் காலை அவ்விருவரும் பரிசுத்த பாப்பரசரைச் சந்தித்து தேவதாயார் தங்களுக்கு காட்டிய தரிசனத்தை அறிவித்தார்கள். லிபேரியுஸ் பாப்பாண்டவர் இதைக் கேட்டு அதிசயித்து தேவமாதா தமக்கும் முந்திய இரவில் காட்சி தந்து அந்த மலையில் கோவில் கட்டும்படிக் கூறியதை அவர்களுக்கு அறிவித்தார்.
அன்றே அவர் விசுவாசிகளுடன் பெருங் கூட்டமாய் மலைக்குச் சென்று பார்த்த போது, ஓரிடத்தில் உறைபனி விழுந்திருப்பதையும், ஒரு பிரமாண்டமான கோவிலின் அளவு அந்தப்பனியில் குறிக்கப்பட்டிருப்பதையும் பாப்பரசரும் மற்றவர்களும் கண்டு பிரமித்தார்கள்.
பாப்பாண்டவருடைய உத்தரவின் பேரில் பத்ரீசியுஸ் பிரபு ஒரு தேவாலயத்தைக் கட்டியபின், அர்ச். பாப்பாண்டவர் அதை அபிஷேகம் செய்து தேவமாதாவின் பெரிய கோவில் என்று அதற்குப் பெயரிட்டார். அதில் அநேக புதுமைகள் நடந்து வருகின்றன.
நமது கர்த்தர் பிறந்தபோது அவர் கிடத்தப்பட்ட கொட்டிலும் முன்னீட்டியும் இதில் மேரை மரியாதையுடன் வைக்கப்பட்டிருக்கிறது.
யோசனை
நாமும் நமது அந்தஸ்திற்கு தக்கப்படி தேவ பணிவிடைக்கு வேண்டிய உதவி செய்ய மறக்கலாகாது.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்.
அர்ச். ஓஸ்வல்ட், இராஜா.வே.
அர்ச். ஆப்ராவும் துணை., வே.
அர்ச். மெம்மியுஸ், மே.