ஜுன் 05

அர்ச். பொனிபாசியார். மேற்றிராணியார், வேதசாட்சி (கி.பி. 755)


பொனிபாசியார் இங்கிலாந்து தேசத்தில் பிறந்து தெய்வ பயமுடையவராய் புண்ணிய வழியில் நடந்து வந்தார்.

இவர் உலக வாழ்வில் வெறுப்புற்று சந்நியாசியாய் வாழ விரும்பி துறவியானார். இவருடைய அரிதான புண்ணியங்களைக் கண்ட சந்நியாசிகள் இவரைத் தங்கள் மடத்திற்கு சிரேஷ்டராக நியமிக்க இருப்பதை அறிந்த பொனிபாசியார் அந்த உயர்ந்த பட்டத்தைப் பெற மனமின்றி குருப்பட்டம் பெற்று அஞ்ஞானத்தில் மூழ்கியிருந்த ஹாலந்து, ஜெர்மனி முதலிய தேசங்களில் போய் வேதம் போதித்தார்.

பொனிபாசியாரின் புண்ணியத்தைப்பற்றி கேள்விப்பட்ட பரிசுத்த பாப்பரசர் இவரைத் தம்மிடம் வரவழைத்து, இவரை மேற்றிராணியாராக அபிஷேகம் செய்து, ஜெர்மனியில் போய் வேதம் போதிக்க உத்தரவளித்தார்.

முரடரும் யுத்தப் பிரியருமான ஜனங்களுக்கு சத்திய வேதத்தை இவர் போதிக்கும் போது, பல முறை இவருக்கு மரண ஆபத்து உண்டான போதிலும் அதை சட்டை செய்யாமல், நல்லாயனைப் போல் ஆத்தும் இரட்சண்யத்தை மாத்திரம் கோரி வேதத்திற்காக உழைத்தபடியால் அநேக மக்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

இவர் பல இடங்களில் மேற்றிராசனங்களை ஸ்தாபித்து சத்திய வேதம் செழித்தோங்கும்படிச் செய்தார். சகலத்தையும் தேவ தோத்திரத்திற்காகச் செய்தபடியால், இவர் கருத்துக்கள் அனைத்தும் நிறைவேறின.

ஜெர்மனியில் வேதத்தைப் போதித்து அதை ஸ்திரப்படுத்தியபின், வேறொரு அஞ்ஞான தேசத்திற்குச் சென்று வேதம் போதித்து, ஞானஸ்நானம் பெற்ற அநேகருக்கு உறுதிப்பூசுதல் கொடுக்கும்படி ஒரு இடத்தில் காத்துக்கொண்டிருக்கும்போது, அநேக காட்டு மிராண்டிகளான அஞ்ஞானிகள் பொனிபாசியாரையும் அவரோடு இருந்தவர்களையும் கொன்று விட்டார்கள். இவ்விதமாக பொனிபாசியார் வேதசாட்சி முடி பெற்றார்.

யோசனை.

நாமும் செய்யும் சகலத்தையும் தேவ தோத்திரத்திற்காக செய்வோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். தொரொதேயுஸ், வே.
அர்ச். தொரொதேயுஸ், ம.
அர்ச். இல்லிதியுஸ், மே.