ஏப்ரல் 05

அர்ச். வின்சென்ட் பெர்ரர். துதியர் (கி.பி. 1419)

அர்ச். வின்சென்ட் உத்தம தாய் தகப்பனிடத்தினின்று பிறந்து இளம் வயதில் கல்வி, கலைகளில் கற்றுத்தேர்ந்து, வேத சாஸ்திரங்களைத் திறமையுடன் படித்து வந்தார்.

இவர் அர்ச். தோமினிக் சபையில் சேர்ந்து புண்ணிய வழியில் வாழ்ந்து, கர்த்தருடைய திருப்பாடுகளைப்பற்றி இடைவிடாமல் தியானித்து, தேவதாயார் மட்டில் மிகுந்த பக்தி வைத்து, ஏழைகள் மட்டில் இரக்கங் காட்டி வந்தார்.

இவர் குருப்பட்டம் பெற்றபின் புண்ணிய வாழ்வில் தேர்ந்து, சகல புண்ணியங்களிலும் ஞானக் கண்ணாடியாய்ப் பிரகாசித்தார்.

இவருக்குண்டான மோக சோதனைகளை ஜெபத்தாலும் ஒருசந்தியாலும் கடின தபத்தாலும் முற்றிலும் வென்றார்.

அக்காலத்தில் ஐரோப்பா முழுவதும் பதித போதனையாலும் தேசக் குழப்பத்தினாலும் வருந்தினதினால் பாப்பாண்டவர் மற்றும் மேற்றிராணியாருடைய வேண்டுகோளின்படி வின்சென்ட் மேற்கூரிய தேசங்களில் சுற்றித் திரிந்து கணக்கற்ற பாவிகளை மனந்திருப்பி, பதிதர், முகமதியர் முதலியவர்களை சத்திய மறையில் சேர்த்தார்.

இவர் செய்த புதுமைகளுக்கு கணக்கில்லை. நாள்தோறும் இருமுறை கோவில் மணி அடிக்கும்போது தம்மிடம் வரும் சகல நோயாளிகளையும் குணப்படுத்தி அனுப்புவார்.

மரித்தவர்களுக்கு உயிர் கொடுப்பார். இவர் பிரசங்கத்தைக் கேட்கும் ஜனங்களுடைய அழுகையாலும் பெருமூச்சாலும் அப்போதைக் கப்போது பிரசங்கத்தை நிறுத்தும்படி நேரிடும்.

இவ்வாறு இவர் வெகு கடினமாக உழைத்து எண்ணற்ற நன்மைகளைச் செய்த போதிலும் தாம் பெரும் பாவி என்று சொல்லி அழுவார்.

வெனிஸ் நகரத்தில் வியாதியாய் விழுந்து தமது 62-ம் வயதில் நித்திய சம்பாவனையின் முடி பெற்றார்.

யோசனை 

நீ என்ன செய்தாலும் உன் புகழ்ச்சிக்காக அல்ல, ஆனால் சர்வேசுரனுடைய மகிமைக்காக செய்வாயாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். ஜெரால்ட், ம.
அர்ச். டிஜெர்நாக், மே.
அர்ச். பீகன், ம.