அர்ச். வினோக் மடாதிபதி - (8-ம் யுகம்).
வினோக் என்பவர் இங்கிலாந்து தேசத்தில் இராஜ வம்சத்தில் உதித்து, தெய்வபக்தி கொண்டு புண்ணிய வழியில் வாழ்ந்துவந்தார். இவர் சான்றோர்களிடம் கல்வி சாஸ்திரங்களைக் கற்றறிந்தபின், உலக சுக சந்தோஷம் முதலிய நன்மைகள் வீண் என்றும், சுவிசேஷ ஆலோசனைப்படி நடப்பதில் மாத்திரம் மெய்யான பாக்கியம் அடங்கியிருக்கிறதென்றும் உணர்ந்தார்.
இவர் உலகத்தைத் துறந்து, வேறு மூன்று பிரபுக்களுடன் துறவற வாழ்வை மேற்கொண்டார். இந்த பரிசுத்தவான்களின் புண்ணியங்களும் புதுமைகளும் எங்கும் பரவியதினால், அநேக வாலிபர் வினோக் என்பவருக்கு சீஷர்களானார்கள்.
இவர் அந்த மடத்திற்கு மடாதிபதியாகி, தமது போதனையாலும் நன்மாதிரிகையினாலும் தமது துறவிகளைப் புண்ணிய நெறியில் சிறந்து விளங்கச்செய்தார், தாமே முன்வந்து, மடத்தில் தாழ்ந்த வேலைகளைச் செய்வார். ஞானக்காரியங்களுக்கும், கைவேலைகளுக்கும் தாமே முதல் ஆளாய் நிற்பார்.
மடத்தின் ஒழுங்குகளை வெகு நுணுக்கமாய் அனுசரிப்பார். முதிர்ந்த வயதிலும், மடத்தின் வயல் வேலைகளில் ஈடுபடுவார். மடத்திற்கு வேண்டிய தானியங்களைத் தாமே திரிப்பார். விறகு சுமையைச் சுமப்பார். பெரும் இயந்திரத்தில் மாவை அரைப்பார். இவ்வளவு கடினமான வேலைகளை இவர் செய்வதைக் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
ஒருநாள் இவர் வேலை செய்யும் இயந்திரம் தானாக அரைக்கிறதைக் கண்டு துறவிகள் பிரமித்தார்கள். இவ்விதமாய் இந்தப் புண்ணியவான் கடினமான வேலைகளைச் செய்து, ஜெபத்தால் உத்தமதனத்தில் உயர்ந்து, மற்றவர்களையும் புண்ணிய வழியில் வளரச் செய்து, அர்ச்சியசிஷ்டவராய் காலஞ்சென்றார்.
யோசனை
யாதொரு சபைக்கும் அல்லது குடும்பத்திற்கும் தலைமையாயிருப்பவர்கள் தங்களுக்கு கீழ்ப்பட்டவர்களை அதிகாரத்தாலும் தண்டனையாலும் ஆளுவதைவிட, தங்கள் நன்மாதிரிகையால் எளிதாய் ஆளலாம்.