அர்ச். ப்ருனோ - மடாதிபதி (கி.பி. 1101)
இவர் கொலோன் நகரில் பிறந்து பல தேசங்களுக்குச் சென்று சகல ஞானங்களையுங் கற்றறிந்து அநேக சாஸ்திரங்களில் பட்டம் பெற்று, குருவாகி பிறர் ஆத்தும இரட்சண்யத்திற்காக உழைத்து வந்தார்.
அவ்வூரில் இறந்து போன ஒரு தனவானுடைய பிரேதம் கோவிலுக்குக் கொண்டுபோய் மந்திரிக்கப்படுகையில், அந்த பிரேதத்திற்கு புதுமையாக உயிர் வந்து, “நான் நிர்ப்பாக்கியனாய் இறந்ததினால் என் ஆத்துமம் நரகத்திலிருக்கிறது'' என்று கூறி, மறுபடியும் மரித்தான்.
இதைக் கண்ட ப்ருனோ சர்வேசுரனுக்கு அதிக பிரமாணிக்கமாக ஊழியஞ் செய்யத் தீர்மானித்து, வேறு சிலருடன் கர்தூசியன் என்னும் அடர்ந்த காட்டில் ஜெபத்தாலும், கடுந் தவத்தாலும் சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்து வந்தார்.
இதனால் அவர்களுக்கு கர்தூசியன் சபையாரென்று பெயர் வழங்கப்படுகின்றது. மேலும் அந்த மடத்தில் சேர்ந்தவர்கள் நித்திய மௌனம் அனுசரித்து, மாமிசத்தை முற்றிலும் ஒதுக்கிவிட்டு, ஒரு நாளைக்கு ஒரு தடவை மாத்திரம் சொற்ப உணவு அருந்தி, கடும் ஒருசந்தி உபவாசமும் அனுசரித்து வருவார்கள்.
மேலும் கிடைக்கும் நேரங்களில் வேதப் புத்தகங்களை எழுதுவதில் காலத்தைச் செலவிட்டு, இடைவிடாமல் ஜெபஞ் செய்து, சர்வேசுரனோடு ஒன்றித்திருப்பார்கள். அக்காலத்திலிருந்த பாப்பரசர் ப்ருனோவை தம்மிடம் அழைத்து, தமக்கு ஆலோசகராக வைத்துக்கொண்டார்.
மேலும் தனக்கு பாப்பாண்டவரால் அளிக்கப்பட்ட அதிமேற்றிராணியார் பட்டத்திற்கு ப்ருனோ சம்மதியாமல் தமது மடத்திற்குத் திரும்பி வந்து புண்ணிய வழியில் நடந்து, அர்ச்சியசிஷ்டவராய் ஜீவித்தார்.
அநேக பிரபுக்களும் துரைமார்களும் உலகத்தைத் துறந்து, ப்ருனோவுக்கு சீஷர்களாகி புண்ணிய வழியில் நடந்தார்கள். இவர் அநேக வருஷகாலம் சர்வேசுரனுக்குப் பிரமாணிக்கமாய் ஊழியஞ் செய்து, அதற்கு சம்பாவனையாக மோட்ச பாக்கியத்தைப் பெற்றுக் கொண்டார்.
யோசனை
ப்ருனோவைப் போல் நாமும் நரக ஆக்கினையைப்பற்றி கவனமாய் யோசிப்போமாகில், நமது நடத்தையைச் சந்தேகமில்லாமல் திருத்திக் கொள்வோம்.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். பிதெஸ். க.வே.