மார்ச் 07

அர்ச். அகுயினோ தோமாஸ். துதியர், வேதபாரகர் (கி.பி. 1274). 

அர்ச். தோமாஸ், அகுயினோ நகரில் சிறந்த கோத்திரத்தில் உதித்து சிறுவயதிலேயே சந்நியாசம் செல்ல ஆசை கொண்டார்.

இவருக்கிருந்த இந்த நல்ல ஆசையைத் தடுக்க அவர் தாயாரும் சகோதரர் சகோதரிகளும் செய்த இடையூறுகளை இவர் பொருட்படுத்தாமல் அர்ச். தோமினிக் சபையில் சேர்ந்தார்.

தோமாஸ் ஒரு ஊரினின்று வேறு ஊருக்கு அனுப்பப்பட்ட போது, இவருடைய இரு சகோதரர்கள் இவரை வழி மறித்து இவரை ஒரு கோட்டையில் அடைத்து வைத்து சந்நியாசத்தை விடும்படி இவரை அடித்துத் தொந்தரவு செய்தும், இவர் அதற்குச் சம்மதியாதிருந்தார்.

அப்போது அவர்கள் ஒரு துஷ்ட ஸ்திரீயை தோமாஸிடம் அனுப்பி அவரைப் பாவத்தில் விழத்தாட்டும்படி அவளுக்கு துர்ப் புத்தி சொன்னார்கள்.

அவ்வாறே அவள் அவர் அருகில் சென்ற போது அவர் ஒரு கொள்ளிக்கட்டையை கையில் எடுத்து அவளை வெளியே துரத்தினார்.

பிறகு அவர் அங்கிருந்து தப்பித்து தமது மடத்திற்குப் போய்ச் சேர்ந்து ஜெப தபத்திலும், ஒருசந்தி உபவாசத்திலும், கல்விக் கற்பிப்பதிலும் தனது கவனத்தைச் செலுத்தினார்.

இவர் அநேக சிறந்த பிரபந்தங்களை எழுதினார்.

இவை திருச்சபைக்கு மிகவும் பிரயோஜனமுள்ள புத்தகங்களாக இருக்கின்றன.

இந்த அரிதான சாஸ்திரங்களைத் தாம் ஜெபத்தால் அறிந்து கொண்டதாகக் கூறினார்.

ஒரு நாள் கர்த்தர் இவருக்குத் தரிசனமாகி “தோமாஸ் நம்மைப்பற்றி நன்றாக எழுதினாய். இதற்கு கைம்மாறாக உனக்கு என்ன வேண்டும்?” என்றபோது, "ஆண்டவரே! தேவரீரைத் தவிர வேறு சம்பாவணை எனக்குத் தேவையில்லை ” என்று கூறினார்.

அவர் தமது 50-வது வயதில் பாக்கியமான மரணமடைந்தார்.

யோசனை 

பாவத்திற்கு ஏதுவான மனிதரை விட்டு முற்றிலும் விலகுவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். பெர்பெத்துவாவும் பெலிசிதாசும். வே.
அர்ச். பவுல். ம.