அக்டோபர் 07

ஜெபமாலை மாதா திருநாள் 

ஆல்பிஜென்சிஸ் என்னும் பதித மதம் ஐரோப்பாவில் பரவியபோது, அந்த துஷ்டப் பதிதரால் திருச்சபைக்கும் அரசாங்கத்திற்கும் அநேக பொல்லாங்கும் நஷ்டமும் நேர்ந்தது. 

அக்காலத்திலுள்ள மேற்றிராணிமாரும் குருக்களும் கடும் முயற்சி செய்து, அதை அழிக்க அவர்களால் முடியாமல் போயிற்று. அக்காலத்திலிருந்த தோமினிக் என்பவர் தமது சபையாருடன் பிரசங்கத்தாலும் வேத தர்க்கத்தாலும் அந்த பதிதரை மனந்திருப்ப முயற்சித்தும் பலன் ஏது மில்லை . 

ஒரு நாள் தேவதாயார் 153 மணி ஜெபமாலையைக் கையிலேந்தின பிரகாரம் தோமினிக்குக்குத் தரிசனமாகி அதை ஜெபிக்கும் விதத்தை அவருக்கு உணர்த்தி, ஜெபமாலை பக்தியை சகல கிறீஸ்தவர்களுக்கும் படிப்பிக்கும்படி கற்பித்தார்கள். 

அவ்வாறே தோமினிக் செய்த மாத்திரத்தில் அந்த அபத்த மதம் சிறிது சிறிதாய் அழிந்து போயிற்று. அது முதல் ஜெபமாலை பக்தி உலகமெங்கும் பரவியது. 

பிற்காலத்தில் துலுக்கர் ஐரோப்பா தேசத்திற்கு சென்று அதை அழிக்கும் கருத்துடன் பிரமாண்டமான படையைச் சேர்த்து, போர் புரிந்த காலத்தில் விசுவாசிகள் தேவதாயாருடைய உதவியை மன்றாடி, நாடெங்கும் ஜெபமாலையை ஜெபித்து பக்தி விசுவாசத்துடன் சர்வேசுரனைப் பார்த்து மன்றாடினார்கள். 

ஜெபமாலை மாதாவின் உதவியால் கிறீஸ்தவர்களின் சொற்பப் படை சமுத்திரம் போல் பரவியிருந்த துலுக்கரை, அற்புதமாக ஜெயித்து, அவர்களுடைய கர்வத்தை அடக்கிற்று. 

அது முதல் ஜெபமாலையின் பக்தி உலகமெங்கும் பரவியதுடன் பரிசுத்த பாப்பரசரும் ஜெபமாலை மாதாவின் திருநாளைக் கொண்டாடும்படி கட்டளையிட்டதை அனுசரித்து இன்று நாம் அத்திருநாளைக் கொண்டாடுகிறோம்.

யோசனை

நம்மை இடைவிடாமல் தொந்தரவு செய்யும் ஆத்தும் சத்துருக்களை ஜெபத்தின் மூலமாக ஜெயிக்க முயலுவதுடன், நாள்தோறும் 53 மணி ஜெபமாலையை ஜெபிக்க மறவாதிருப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். மார்க், பா.
அர்ச். செர்ஜியுஸும் துணை., வே. 
அர்ச். மார்செல்லுஸும் துணை., வே. 
அர்ச். ஜுஸ்டீனா, க.வே.