ஜுன் 07

அர்ச். இராபர்ட். மடாதிபதி (கி.பி. 1159)

இராபர்ட் இங்கிலாந்தின் பார்க் நகரில் பிறந்து, சிறுவயதிலேயே புண்ணிய வழியில் நடந்து வந்தார்.

உலகத்திலுண்டாகும் கணக்கற்ற சோதனைகளுக்குத் தப்பித்துக்கொள்ளும்படி குருப்பட்டம் பெற்று, சந்நியாசியானார்.

இவருடைய மேலான புண்ணியங்களையும் தவ ஒழுக்கத்தையும் கண்ட அம்மடத்தார் இறந்துபோன தங்கள் சிரேஷ்டருக்குப் பதிலாக இராபர்ட்டை சிரேஷ்டராகத் தெரிந்துகொண்டார்கள்.

ஆனால் அவர் அதிக தபஞ் செய்ய விரும்பி, ஆசீர்வாதப்பரின் சபையில் சேர்ந்தார். இராபர்ட் இம்மடத்திலும் மடாதிபதியாகத் தெரிந்துகொள்ளப்பட்டார்.

இவர் ஜெப தியானத்திலும் பூசை நேரத்திலும் மற்ற ஞானக்காரியங்களை நிறைவேற்றும் நேரத்திலும் சரீரமுள்ள ஒரு சம்மனசு போல காணப்பட்டார்.

இவர் தமது போதனையாலும், நன்மாதிரிகை யினாலும் தமது அலுவலை சிறப்பாக செய்துவந்தார். கர்த்தருடைய திருப்பாடுகளைப்பற்றி கண்ணீர் சொரிந்து தியானித்து தபசு காலத்தைக் கடின ஒருசந்தி உபவாசத்தில் செலவழிப்பார்.

இவரிடமிருந்த சிறந்த புண்ணியங்களினிமித்தம் புதுமைகளைச் செய்து தீர்க்கதரிசனங்களைச் சொல்ல வரம் பெற்றார்.

இவர் ஜெபத் தியானத்தின் மட்டில் எவ்வளவு ஆசை கொண்டிருந்தாரென்றால் தமது தபசாலும் ஒருசந்தியாலும் சொல்ல முடியாத அளவு தம்மை ஒறுத்தார்.

இராபர்ட் சகல புண்ணியங்களிலும் ஞானக் கண்ணாடியாய் விளங்கி உயிர் துறந்த போது, அவருடைய ஆத்துமம் மகா பிரகாசத்துடன் சம்மனசுக்களால் மோட்சத்திற்கு அழைத்துக்கொண்டு போவதை வனவாசியான அர்ச். காட்ரிக் என்பவர் காட்சியில் கண்டார்.

யோசனை 

நமக்கு கீழ்ப்பட்டவர்கள் தர்ம வழியில் நடக்கும்படி நாம் நாவால் அவர்களுக்குக் கற்பிப்பதைக் காட்டிலும் நன்மாதிரிகையால் அதிக எளிதாய் கற்பிப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். பவுல், மே,வே.
அர்ச். கோல்மன், மே.