மே 08

அதிதூதரான அர்ச். மிக்கேல் தரிசனையான திருநாள். (கி.பி. 492)

நேப்பிள்ஸ் நாட்டில் கர்கானோ என்னும் மலை அடிவாரத்தில் சில இடையர் ஆடுமாடுகளை மேய்த்துக்கொண்டு இருக்கையில், ஒரு எருது காணாமல் போனதால், அவர்கள் அதை எங்குந் தேடிப்பார்த்தும் அது அகப்படவில்லை.

கடைசியாய் அது மலைக் குகையிலிருப்பதைக் அவர்கள் கண்டு, அதை வெளியில் கொண்டுவரச் செய்த முயற்சியெல்லாம் வீணானதால், இடையர்களில் ஒருவன் அந்த எருதின்மேல் அம்பை எய்தான்.

எய்த அம்பானது எருதின்மேல் படாமல் அதை எய்தவன்மேல் பட்டு அவனைக் காயப்படுத்தியதை அவர்கள் கண்டு அதிசயித்து, இதைத் தங்கள் மேற்றிராணியாருக்கு அறிவித்தார்கள்.

மேற்றிராணியாரும் இதைக்கேட்டு ஆச்சரியப்பட்டார். இதன் காரணத்தை சர்வேசுரன் தமக்கு அறிவிக்கும் பொருட்டு அவரும் அந்தப் பட்டணத்து கிறிஸ்தவர்களும் மூன்று நாட்கள் ஒருசந்தியிருந்து விசேஷ ஜெபஞ் செய்தார்கள்.

மூன்றாம் நாள் அர்ச். மிக்கேல் சம்மனசானவர் மேற்றிராணியாருக்குத் தரிசனமாகி எருது நின்ற இடத்தில் தம்முடைய பேராலும் மற்ற சம்மனசுக்களின் பேராலும் சர்வேசுரனுக்கு ஒரு தேவாலயம் கட்ட வேண்டு மென்று அறிவித்தார்.

அவ்வாறே அவ்விடத்தில் மிக்கேல் சம்மனசானவர் பேராலும் மற்ற சம்மனசுக்களின் பேராலும் சிறந்ததோர் தேவாலயம் கட்டப்பட்டு, கணக்கில்லாத விசுவாசிகள் அந்த ஸ்தலத்திற்கு திருயாத்திரையாய் போய் வருகிறார்கள்.

மேலும் மிக்கேல் சம்மனசானவருடையவும் மற்ற சம்மனசுக்க ளுடைய வேண்டுதலாலும் அநேகப் புதுமைகள் அங்கு நடந்தேறி வருகின்றன.

யோசனை

மரணத்தறுவாயில் நம்மைப் பசாசின் சோதனையினின்று காப்பாற்றும் படி அர்ச். மிக்கேலையும் மற்ற சம்மனசுகளையும் பார்த்து மன்றாடுவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். பீற்றர், மே.
அர்ச். விக்டர், வே.
அர்ச். விரோ, மே.
அர்ச். ஒட்ரியன், மே
அர்ச். ஜிபிரியன், கு.