ஏப்ரல் 08

அர்ச். பெர்பேதுவுஸ். மேற்றிராணியார் (கி.பி. 491)

இவர் துார் நகரின் 8-ம் மேற்றிராணியாராக, தமது மேற்றிராசனத்தை 30 வருட காலமாக வெகு ஒழுங்காய் நடத்தி வந்தார்.

இதற்காக அநேக சங்கங்களைக் கூட்டி அவசரமான சட்டங்களை ஏற்படுத்தினார். முக்கியமான திருநாளுக்கு முந்தி வரும் நாளையும் வாரத்தில் வரும் புதன், வெள்ளி கிழமைகளையும் ஒருசந்தி நாட்களாக ஏற்படுத்தினார்.

அந்த நகரில் உள்ள கிறீஸ்தவர்கள் 120 வருடகாலமாக அந்த ஒழுங்குகளைச் சீராய் அநுசரித்து வந்ததாக அர்ச். கிரகோரியார் எழுதியிருக்கிறார்.

மேலும் அர்ச். பெர்பேதுவுஸ் அர்ச்சியசிஷ்ட பண்டங்கள் மேல் அதிக பக்தி வைத்து, அவைகளைச் சேகரித்து, விசுவாசிகள் அவைகளை வணங்கும்படி தேவாலயங்களில் பக்தி யுடன் ஸ்தாபித்தார்.

இவர் பெரும் செல்வந்தராயிருந்தபடியால் தம்முடைய ஆஸ்தியை எல்லாம் கோவில்களுக்கும் ஏழைகளுக்கும் திக்கற்ற கைம்பெண் களுக்கும் அனாதைப் பிள்ளைகளுக்கும் கொடுக்கும்படி மரண சாசனம் எழுதி வைத்தார்.

இந்த மகா அர்ச்சியசிஷ்டவர் ஜெப தபத்தாலும் உத்தம பிரசங்கத் தாலும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கிறிஸ்தவர்களை புண்ணிய வழியில் நடத்தி, அக்காலத்திலிருந்த அர்ச்சியசிஷ்டவர்களால் கனமாக எண்ணப்பட்டு அர்ச்சியசிஷ்டவராய் மரித்து மோட்ச சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார்.

யோசனை 


நாமும் திருச்சபையால் குறிக்கப்பட்ட ஒருசந்தி சுத்தபோசன நாட் களைப் பிரமாணிக்கமாய் அனுசரிக்க வேண்டும். சர்வேசுரன் நமக்கு உலக நன்மையைக் கொடுத்திருந்தால் சர்வேசுரனுடைய வீடாகிய கோவில்களையும் அவருக்கு உகந்தவர்களான ஏழைகளையும் மறக்கலாகாது.


இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். டியொனீசியுஸ், மே.
அர்ச். ஏதேசியுஸ், வே.
அர்ச். வால்டர், ம.
அர்ச். ஆல்பர்ட், பிதா.