அர்ச். ப்ரீமுஸும் பெலிஸியானுஸும். வேதசாட்சிகள் (கி.பி. 268)
கூடப்பிறந்த சகோதரர்களான ப்ரீமுஸ் என்பவரும் பெலிஸியானுஸ் என்பவரும் உரோமையில் அஞ்ஞானிகளாயிருந்து, சத்திய வேதத்தை அறிந்தபின் மகா புண்ணியவாளராய் நடந்து, சிறையிலுள்ள கிறிஸ்தவர்களைச் சந்தித்து, அவர்களுக்கு வேண்டிய ஆறுதல் சொல்லி, தங்களால் கூடுமான உதவி ஒத்தாசைப் புரிந்துவந்தார்கள்.
இவர்களுடைய நற்புத்தியால் கணக்கில்லாத அஞ்ஞானிகள் சத்திய வேதத்தில் சேர்வதைக் கண்ட பொய் மதத்தார் இவ்விருவர் மேலும் இராயனிடத்தில் புகார் செய்ததினால் அவ்விருவரையும் இராயன் பிடித்து வேதத்தை விடும்படி நய பயத்தைக் காட்டியும் இவர்கள் இணங்காததால் அவர்கள் தோலை உரித்து நாட்டதிகாரி கையில் அவர்களை ஒப்புவித்தான்.
அதிபதி வேதசாட்சிகளில் ஒருவரின் கை விரல்களில் கூர்மையான ஆணிகளை ஏற்றி, நிஷ்டூரமாய் அடித்தான். பிறகு மற்றவரை தடியால் அடித்து விலாப் பக்கங்களை தீப்பந்தங்களால் சுடக் கட்டளையிட்டு, அவர்கள் வாயில் ஈயத்தை உருக்கி ஊற்றும்படி செய்தான்.
ஆனால் வேதசாட்சிகள் வேதத்தில் சற்றும் தளராமலிருப்பதை அவன் கண்டு, கோபாவேஷம் கொண்டு அவ்விரு சகோதரர்களையும் சிங்கக் குகையில் போட்டான். மிருகங்களோ அவர்களைத் தொடாததைக் கண்ட அதிபதி அவர்கள்மேல் இரு கரடிகளை விட்டான். அவைகளும் நாய் குட்டிகளைப் போல் அவர்கள் பாதத்தில் விழுந்து கிடந்ததைக் கண்ட திரளான அஞ்ஞானிகள் கிறீஸ்தவ வேதமே மெய்யான வேதமென்று அறிந்து அதில் சேர்ந்தார்கள்.
கடைசியாய் அதிபதி வேதசாட்சிகளைச் சிரச்சேதம் செய்தான்.
யோசனை
சர்வேசுரனை மெய்யாகவே நேசிக்கும் ஆத்துமமானது தனக்குண்டாகும் கஷ்டம், வறுமை துன்பத்தால் கலங்காது.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். கொலம்பா, ம.
அர்ச். பெலாஜியா, க.வே.
அர்ச். வின்ஸென்ட், வே.
அர்ச். ரிச்சர்ட், மே.