அர்ச். நசியான்சென் கிரகோரியார். பிதா (கி.பி.389)
நசியான்சென் நாட்டில் அர்ச்சியசிஷ்டவர்களான பெற்றோரிடத்தினின்று கிரகோரியார் பிறந்தார்.
செசாரயே, அலெக்சாந்திரியா முதலிய பட்டணங்களுக்கு இவர் அனுப்பப்பட்டு, கல்வியில் தேர்ந்து வேதசாஸ்திரி என்னும் பெயர் பெற்றார்.
உலகம் கொடுக்கக்கூடிய சிறந்த பெயரையும் மகிமையும் துறந்து விட்டு குருப்பட்டம் பெற்று சில காலத்திற்குப்பின் மேற்றிராணியாரானார்.
இவர் பக்தியிலும் புத்தியிலும் சிறந்து விளங்கியமையால், ஆரியப் பதிதப் போதனை யால் குழப்பத்திற்குள்ளாகி சீர்குழைந்திருந்த அலெக்சாந்திரியா நகருக்குப் பிதாபிதாவாக நியமிக்கப்பட்டார்.
இவருடைய விடா ஊக்கத்தாலும், கஷ்டமிக்க பிரயாணங்களாலும், ஜெப தபத்தாலும் வாக்கு சாதுரியமான பிரசங்கத்தாலும், குழப்பங்களையும் பிரிவினைகளையும் சீர்படுத்தி அநேக பதிதரை மனந்திருப்பி சத்திய வேதம் சிறந்து பிரகாசிக்கும்படிச் செய்தார்.
தங்கள் மதம் அழிவதைக் கண்ட பதிதர் கிரகோரியாரைப் பகைத்து தூஷணித்துக் கடைசியாய் அவரைக் கொல்லும்படி ஒரு பாதகனை அனுப்பினார்கள்.
அந்தப் பாவி அவரைக் கொல்லும் கருத்துடன் அவரை நெருங்கியபோது, மனம் மாறி, அவர் பாதத்தில் விழுந்து அவரிடம் மன்னிப்பு கேட்கவே, அவரும் அவனுக்கு மன்னிப்பளித்தார்.
கிரகோரியார் அலெக்சாந்திரியாவுக்கு பிதாப்பிதாவாக நியமிக்கப்பட்டது திருச்சபை சட்டத்திற்கு விரோதமென்று சிலர் காய்மகாரத்தால் முறையிட்டதை இவர் கேட்டு, அவர்களுடைய முறைப்பாடு ஒழுங்கற்றதென்று அறிந்திருந்தும், தம்மால் திருச்சபைக்குக் குழப்பம் உண்டாகாதபடிக்கு அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சிலப் புண்ணியவான்களுடன் ஏகாந்தத்தில் வசித்து, அர்ச்சியசிஷ்டவராய்க் காலஞ் சென்றார்.
யோசனை
நாமும் யாதொரு பொது நன்மையினிமித்தம் பாவமற்ற விஷயத்தில் பிடிவாதம் காட்டாமல் நமது அபிப்பிராயத்தை விட்டு விடுவது நலமாகும்.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். ஹெர்மஸ், து.
அர்ச். நிக்கொலாஸ், மே.
அர்ச். ப்ரைனாத், மே.