நவம்பர் 09

அர்ச். தெயதோருஸ் வேதசாட்சி-(கி.பி. 306).

தீரோ என்னும் பட்டப் பெயரால் அழைக்கப்படும் தெயதோருஸ் ஆர்மீனியாவில் பிறந்து, தேவ கற்பனைப்படி நடந்து, உத்தம கிறீஸ்தவராய் வாழ்ந்து, உரோமைச் சக்கரவர்த்தியின் படையில் சேவை செய்துவந்தார். 

அக்காலத்தில் பிறமதத்தைச் சார்ந்த அரசர்களால் கலகம் ஆரம்பமானபோது, தெயதோருஸ் சத்தியவேதத்தை மறுக்காமல் தமது நெற்றியில் சிலுவையைப் பச்சை குத்திக்கொண்டு, தாம் கிறீஸ்தவரென்று வெளிப்படுத்தினார். 

நாட்டதிகாரி இவரைப் பிடித்து விசாரித்து பயமுறுத்தின போது, என்னைத் துண்டு துண்டாய் நறுக்கி நெருப்பில் போட்டு சுட்டெரித்த போதிலும் சத்தியவேதத்தை மறுதலிக்க மாட்டேன் என்றார். சிலநாட்கள் நன்றாய் யோசித்து உன் பதிலைச் சொல் என்று கூறி நடுவன் இவரைக் காவலினின்று விடுதலை செய்தான். 

வேதசாட்சி விடுதலையாகி, தேவ ஏவுதலால் பொய் தேவர்களின் கோவிலுக்கு நெருப்பு வைத்ததினால், அது சாம்பலாய் போயிற்று, மறுபடியும் இவர் பிடிபட்டு வேதத்திற்காகக் கொடூரமாய் அடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இரவில் சம்மனசுகள் இவரை சிறையில் சந்தித்து, தேற்றினர். மறுபடியும் அதிகாரி இவரை விசாரணை செய்து, உயிருடன் நெருப்பில் போட்டு சுட்டுக் கொல்லும்படி கட்டளையிட்டான். இவ்வாறு தெயதோருஸ் மோட்ச முடி பெற்றார். 

இவருடைய வேண்டுதலால் பேய், பூதங்கள் ஓடிப்போகும். தீராத பிணிகள் தீரும். இவருடைய கல்லறையைப் பக்தியுடன் தொடுவதால் அநேக புதுமைகள் நடந்ததென்று அர்ச். நிசாசிரகோரி என்பவர் எழுதி வைத்திருக்கிறார்.

யோசனை 

தங்கள் கழுத்திலுள்ள உத்தரியத்தையும், ஜெபமாலையையும், தங்கள் கிறீஸ்தவப் பெயரையும் மறைக்கும் கிறிஸ்தவர்கள், தெயதோருசுடைய நடத்தையைக் கண்டு வெட்கப்படக் கடவார்களாக.