ஆகஸ்ட் 09

அர்ச். ரோமானுஸ் - வேதசாட்சி (கி.பி. 258) 

ரோமானுஸ் உரோமாபுரி இராயனுடைய படைச் சேவகரில் ஒருவர். அர்ச். லாரன்ஸ் என்பவர் வேதத்திற்காக பிடிபட்டு நிஷ்டூரமாய் உபாதிக்கப் படும்போது அவர் காட்டிய தளராத விசுவாசத்தையும், தைரியத்தையும், அவர் முகத்தில் காணப்பட்ட மோட்சானந்த பிரகாசத்தையும் கண்ட ரோமானுஸ் சேவகர் அதிசயித்தார். 

மேலும் ஒரு சௌந்தரியமுள்ள சம்மனசு தோன்றி லாரன்ஸுக்கு ஆறுதல் கூறியதையும், அவருடைய வியர்வையையும் காயத்தின் இரத்தத்தையும் ஒரு வஸ்திரத்தால் துடைப்பதையும் கண்ட ரோமானுஸுடைய ஆச்சரியம் இன்னும் பன்மடங்கு அதிகரித்து, வேதசாட்சி ஆராதிக்கும் கடவுளே மெய்யான கடவுளென்று உறுதியாய் நம்பினார். 

தானும் அவரை ஆராதிக்க விரும்பி, கிறீஸ்தவ வேதத்தில் சேர தீர்மானித்தார். லாரன்ஸ் சித்திரவதை செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டபோது ரோமானுஸ் ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் வேதசாட்சியை அணுகி, தனக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி மன்றாடினார். 

வேதசாட்சி சந்தோஷப்பட்டு, வேத சத்தியங்களை அவருக்குச் சுருக்கமாய் போதித்து, ஞானஸ்நானம் கொடுத்தார். ரோமானுஸ் சிறையினின்று வெளிப்பட்டு தான் கிறீஸ்தவனென்று பகிரங்கமாய்க் கூறினார். இதைப்பற்றி கேள்விப்பட்ட இராயன் கோபாவேசம் கொண்டு அவர் தலையை வெட்டும்படி கட்டளையிட்டான்.

யோசனை 

நமது புண்ணிய ஒழுக்கத்தாலும் நன்மாதிரிகையாலும் பிறரை மனந்திருப்ப முயலுவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்.

அர்ச். டேவிட், கு. 
அர்ச். பெட்லிமிட், மே..