மே 10

அர்ச். இசிதோர். துதியர் (கி.பி. 1170) 

அர்ச். இசிதோர் ஸ்பெயின் தேசத்தில் ஏழையும் தெய்வபயமும் உள்ள உத்தம பெற்றோரிடமிருந்து பிறந்தார். தரித்திரத்தினிமித்தம் அவர்கள் தங்கள் குமாரனை கல்விக் கற்க அனுப்ப சாத்தியப்படாவிடினும், தெய்வ பயத்தில் அவரை வளர்த்துப் பாவத்தைப் பகைத்துப் புண்ணியத்தைப் போதித்து, ஜெபஞ் செய்து சர்வேசுரனுடைய கற்பனைகளை அனுசரித்து வாழும்படி, நற்புத்தி போதித்து வந்தார்கள்.

இவரும் தமது பக்தியுள்ளப் பெற்றோர்களுடைய புத்திமதிக்கு இணங்கி நடந்தார். இவருக்கு வயது வந்தபின் ஒரு துரை வீட்டில் விவசாய வேலைக்கு அமர்ந்தார். அந்த வேலையைத் தன் சொந்த வேலை யாகப் பாவித்து சுறுசுறுப்புடன் வேலையைச் செய்வார்.

ஏர் உழும்போதும், வண்டியோட்டும்போதும் மற்ற எந்த வேலையைச் செய்யும்போதும் சர்வேசுரனை மனதில் தியானிப்பார். அவர் ஜெபம் செய்யும் சமயத்தில் சம்மனசுக்கள் அவர் செய்ய வேண்டிய வேலையைச் செய்வார்கள்.

திருட்டு, பொய் முதலியவை அவரிடம் கிடையாது. தன் எஜமானுக்கு எப்போதும் பிரமாணிக்கமாயிருப்பார். தன் வயிற்றுக்காக வேலை செய்த போதிலும் தன் ஆத்துமத்தை மறந்தவரல்ல.

அதிகாலையில் எழுந்து ஜெபங்களை முடித்துக்கொண்டு வேலையைத் துவக்குவார். ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல் பூசைக் கண்டு, அன்று அற்ப வேலையையும் செய்யமாட்டார்.

அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்து நன்மை வாங்குவார். இவர் அந்த ஊருக்கு சகலத்திலும் நன்மாதிரியாய் வாழ்ந்தார். இவருடைய எஜமான் புண்ணியவானாயிருந்ததால், வேலைக்காரனால் தன் செல்வத்தை சர்வேசுரன் ஆசீர்வதித்துப் பலுகச் செய்தாரென்று கூறி, அவரைத் தன் சகோதரனைப் போல நடத்தி வந்தான்.

இசிதோர் 60 வயது வரைக்கும் வேலை செய்து புண்ணியவானாகக் காலஞ் சென்றார். இவரால் அநேகப் புதுமைகள் நடந்தன.

யோசனை

இசிதோருடைய சரித்திரத்தைக் கேட்ட குடியானவர்களே! தொழிலாளிகளே! ஜெபம் செய்யவும் பாவசங்கீர்த்தனம் செய்யவும் நேரமில்லையென்று இனி சாக்குப்போக்குக் கூறாதீர்கள். சுறுசுறுப்பு, எதார்த்தம், நன்னடத்தை முதலியவைகளை இவரிடத்தில் கற்றுக் கொள்வீர்களாக.