ஆகஸ்ட் 10

அர்ச். லாரன்ஸ் - வேதசாட்சி (கி.பி. 258) 

உரோமையில் தேவாராதனை நேரத்தில் பரி. பாப்பரசருக்கு பரிசாரகராக பணிபுரிந்து, ஏழைகளுக்குத் தர்மம் பகிர்ந்து வந்த ஏழு டீக்கன்மார்களில் லாரன்ஸும் ஒருவர். 

அக்காலத்திலுண்டான வேதகலாபனையில் அநேக கிறீஸ்தவர்களும் குருக்களும் சிறையிலடைக்கப்பட்டார்கள். சிக்ஸ்துஸ் என்னும் பாப்பாண்டவரையும் சேவகர் பிடித்துக்கொண்டு போவதைக் கண்ட லாரன்ஸ் அவரைப் பார்த்து: பிரிய தந்தையே! என்னை விட்டுவிட்டு தேவரீர் மாத்திரம் செல்வது தர்மமா? நான் என்ன தவறு செய்தேன்? என்று அழுகையுடன் கூறினார். 

அதற்குப் பாப்பாண்டவர்: குமாரனே தைரியமாயிரு; இன்னும் மூன்று நாட்களுக்குள் நீயும் என்னைப் பின்செல்வாய் என்றார். பிறகு நாட்டதிபதி லாரன்ஸை வரவழைத்து, அவர் வசத்திலுள்ள கோவில் சொத்துக்களை மூன்று நாட்களுக்குள் தனக்குக் கையளிக்க வேண்டுமென்று கட்டளையிட்டான். 

அவர் கோவில் சொத்துக்களை குருடு, செவிடு, சப்பாணி முதலிய ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்து அவர்களைக் கும்பலாய்ச் சேர்த்து மூன்றாம் நாள் அதிபதியைப் பார்த்து, இதோ விலையுயர்ந்த திரவியம் என்றார். 

அதிகாரி இதைக் கேட்டு கோப வெறிகொண்டு, லாரன்ஸை பிடித்து இரும்புக் கட்டிலில் கிடத்தி, அதனடியில் நெருப்பை மூட்டும்படி கட்டளையிட்டான். வேதசாட்சியோ வெனில், சுவாலை விட்டெரியும் நெருப்பின் உஷ்ணத்தை பொறுத்துக்கொண்டு சர்வேசுரனைப் புகழ்ந்தார். 

அந்நேரத்தில் அவர் சிரசின்மேல் அதிசயப் பிரகாசம் ஜொலிக்கிறதை அங்கு நின்றுகொண்டிருந்த விசுவாசிகள் கண்டு, ஆனந்தம் அடைந்தார்கள். பிறகு வேதசாட்சி அதிபதியை நோக்கி, என் சரீரம் நன்றாய் வெந்திருக்கிறது, இப்போது அதைச் சாப்பிடு என்று கூறி உயிர்துறந்து வேதசாட்சி முடி பெற்றார்.

யோசனை

நமது இதயத்தில் எழும் ஆசாபாசங்களை, ஒறுத்தலென்னும் அக்கினியால் எரித்து சர்வேசுரனுக்குத் தகன பலி கொடுப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்.

அர்ச். தேயுஸ்தேதித், து.
அர்ச். ப்ளான், மே.