அர்ச். லூர்து மாதா திருநாள்.
1858-ம் வருஷம் பெப்ருவரி மாதம் 11-ம் தேதி பிரான்ஸ் தேசத்தில் லுார்து என்னும் நகரில் ஒரு மலைக்குகையில் பெர்நதெத் என்னும் ஏழையும் புண்ணியவதியுமான ஒரு சிறு பெண்ணுக்கு அர்ச். கன்னிமரியம்மாள் வெண்மை யான வஸ்திரம் தரித்து, தூய மேலாடையை அணிந்து ரோஜா புஷ்பங்களைக் காலால் மிதித்த வண்ணமாய்க் காணப்பட்டார்கள்.
அப்போது தேவமாதா சிலுவை அடையாளத்தைப் பக்தியுடன் வரையப் பெண்ணுக்குக் கற்பித்து, தமது கையிலிருந்த ஜெபமாலையின் மணிகளை ஒவ்வொன்றாய் உருட்டி ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். மறு தரிசனையில், தரிசனையான உருவத்தின் மேல் பெர்நதெத்தம்மாள் தீர்த்தத்தைத் தெளித்தாள். தெளித்த மாத்திரத்தில், தரிசனையான கன்னிகை முன்னிலும் அதிக காந்திப் பிரகாசத்துடன் ஜொலித்தார்கள்.
மறுபடி காணப்பட்டத் தரிசனைகளில், தரையை முத்தி செய்யவும் தவம் புரியவும் திருக்கன்னிகை பெர்நதெத்துக்குச் சொன்னார்கள். மீளவும் அவ்விடத்தில் ஒரு தேவாலயம் கட்டும்படி குருக்களுக்கு அறிவிக்கக் கற்பித்தார்கள். அந்தப் பெண் நின்ற இடத்தில் விரலால் மணலைத் தோண்டச் சொன்னார்கள். அவள் தோண்டியவுடனே அவ்விடத்தில் சிறு ஊற்று கிளம்பிற்று. அந்த ஜலத்தைக் குடித்து, அதனால் தன் முகத்தைக் கழுவவும் தேவதாய் கற்பித்தார்கள்.
மங்கள வார்த்தைத் திருநாளன்று திருக்கன்னிகை மறுபடியும் காணப்பட்டபோது, உங்கள் பெயர் என்னவென்று பெர்நதெத் அக்கன்னிகையை வினவினாள். அப்போது கன்னிமரியம்மாள், “நானே அமலோற்பவம்” என்றார்கள். அன்றுமுதல் இன்று வரையில் சகல தேசத்தினரும், பலதரப்பட்ட கணக்கற்ற ஜனங்களும் லூர்து நகருக்குத் திருயாத்திரையாக போகிறார்கள். அற்புத மாய்க் காணப்பட்ட ஊற்றின் ஜலத்தால் உண்டாகும் அற்புத ஆச்சரியங்களுக்குக் கணக்கில்லை.
யோசனை.
தேவதாயாருடைய படிப்பினையை நாமும் பின்பற்றி, ஜெபமாலையைப் பக்தியுடன் ஜெபித்து, நமது பாவங்களுக்காகத் தபச் செயல்களைச் செய்து தேவதாயார் மூலமாக சர்வேசுரனுடைய பாதத்தை அண்டுவோமாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். சத்துார்னியாரும் துணை. வே.
அர்ச். செவெரினுஸ், ம.
அர்ச். தெயோதோரம்மாள், சக்கரவர்த்தினி.