அர்ச். பர்னபாஸ். அப்போஸ்தலர்
இவர் யூதராயிருந்தபடியால் வேதாகமங்களைப் படிப்பதற்காக ஜெருசலேமுக்கு இவருடைய பெற்றோரால் அனுப்பப்பட்டார். இவர் பழைய ஏற்பாட்டின்படி சரியாக வாழ்ந்தார்.
சேசுநாதரே மெய்யான இரட்சகரென்று நம்பி அவரைப் பின்சென்று 72 சீஷர்களில் ஒருவராகிய பிறகு அப்போஸ்தலரானார்.
கர்த்தர் மோட்ச ஆரோகணமானபின் தமக்கிருந்த நிலங்களையும் காணியாட்சிகளையும் விற்று அப்போஸ்தலர்களுடைய பாதங்களில் வைத்தார்.
இவருடைய மாதிரிகையை மற்ற விசுவாசிகளும் பின்பற்றினார்கள். அர்ச்.சின்னப்பர் பர்னபாஸை அழைத்துக்கொண்டு தேசமெங்குந் திரிந்து வேதம் போதித்துத் திரளான ஜனங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.
இவர்கள் பிரயாணத்தாலும் பசி தாகத்தாலும் கஷ்டப்பட்டதுடன் துஷ்டரால் துன்பப்படுத்தப்பட்டார்கள். இவர்களுடைய ஞானப்பிரசங்கங்களைக் கேட்ட ஒரு தேசத்தார் அதிசயித்து இவர்கள் மனிதாவதாரம் எடுத்த தேவர்கள் என்றார்கள்.
ஜெருசலேமில் கடும் பஞ்சமுண்டானபோது அவ்விரு அப்போஸ்தலர்களும் தர்மம் எடுத்து, சேர்த்து ஜெருசலேமிலுள்ள அப்போஸ்தலர்களுக்கு அனுப்பினார்கள்.
இதற்குப்பின் பர்னபாஸ் சைப்ரஸ் தீவுக்குச் சென்று வேதம் போதித்து அநேக குருக்களையும் மேற்றிராணிமார்களையும் அங்கு ஏற்படுத்தினார். இவ்விடத்தில் பர்னபாஸ் தமது விடாமுயற்சியால் ஊர் ஊராய்த் திரிந்து, பிரசங்கங்களாலும் புதுமைகளாலும் கிறீஸ்துநாதரைப் போதித்து ஏராளமான அஞ்ஞானிகளையும் யூதரையும் திருச்சபையில் சேர்த்தார்.
இதனால் நரகப் பசாசின் ஏவுதலால், யூதர் அவரைப் பிடித்து உபாதித்து கல்லாலெறிந்து கொன்றார்கள்.
யோசனை
உலக பாக்கியம் இரட்சண்ய வேலைக்கு தடையாயுள்ளதென்று பர்னபாஸ் உண்மையாக எண்ணினது போல், நமக்கும் அப்பேர்ப்பட்ட எண்ணமுண்டாகும்படி அதன் மட்டில் பற்றுதல் வையாதிருப்போமாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். தோக்கும்ரா, க.