ஆகஸ்ட் 11

அர்ச். திபூர்சியுஸ், வேதசாட்சி, அர்ச். க்ரோமாசியுஸ், துதியர் (கி.பி. 286).

தியோக்ளேசியன் காலத்தில் உரோமையில் க்ரோமாசியுஸ் துரை நீதிபதியாக இருந்தபோது, அநேக கிறீஸ்தவர்கள் வேதத்தினிமித்தம் வாதித்து கொல்லப்பட்டார்கள். 

ஒருநாள் அவருக்கு முன் நிறுத்தப்பட்ட த்ரான்குயிலீனுஸ் என்பவர் ஞானஸ்நானம் பெற்ற விஷயத்தைப்பற்றி விசாரித்துக்கொண்டு இருக்கையில், தான் ஞானஸ்நானம் பெற்ற அக்கணமே தன்னை வெகு காலம் பீடித்துக்கொண்டிருந்த வாதரோகம் தன்னை விட்டு நீங்கினது என்றார். 

இதே பிணியால் வருந்தி வரும் அந்த துரையும் ஆறுதல் கொண்டு, இரகசியமாக ஞானஸ்நானம் பெற்ற மாத்திரத்தில் சுகமடைந்து, தன் உத்தியோகத்தை விட்டுவிட்டு ஒரு நாட்டிற்கு சென்று புண்ணிய வழியில் வாழ்ந்து அர்ச்சிய சிஷ்டவராகக் காலஞ் சென்றார். 

இவருடைய குமாரர் திபூர்சியுஸ் குருப் பட்டத்திற்காகப் படித்து 5-ம் பட்டம் பெற்று தன் ஞான வேலையைச் செய்து வந்தார். ஒரு சமயம் உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்ததால் சரீர மெல்லாம் நொறுங்கி சாகுந்தறுவாயில் இருந்தார். 

அப்போது அவர்மேல் சிலுவை அடையாளம் வரைந்தவுடன் அவர் பூரண குணமடைந்தார். அவர் வேதத்திற்காகப் பிடிபட்டு நெருப்பின்மேல் நடக்கக் கட்டளையிடப்பட்டார். 

அப்போது வேதசாட்சி சிலுவை வரைந்துகொண்டு சிறிதும் பாதிப்பின்றி நெருப்பின்மேல் நடந்ததைக் கண்ட அஞ்ஞானிகள் அதிசயப்பட்டு, மாய வித்தையால் அப்படிச் செய்தார் என்று கூறி அவரைப் பட்டணத்திற்கு வெளியே அழைத்துக்கொண்டு போய் தலையை வெட்டினார்கள்.

யோசனை

பரிசுத்த சிலுவை அடையாளத்தால் ஆத்துமத்திற்கும் சரீரத்திற்கும் பல முறை அநேக நன்மைகள் உண்டாவதால் நாம் எப்போதும் அதை விசுவாச பக்தியுடன் வரைந்து கொள்வோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்.

அர்ச். சுசான்னா , க.வே.
அர்ச். கெறி, து. 
அர்ச். எக்யூசியுஸ், ம.