பிப்ரவரி 12

அர்ச். பெனடிக்ட். மடாதிபதி (கி.பி. 821) 

இவர் அரசருடைய அரண்மனைகளில் கீர்த்தி வெகுமானங்களைப் பெற்று சுகமாய் வாழ்ந்துவந்தார். இவர் அரண்மனையிலிருந்த போதிலும், தேவ ஏவுதலுக்குக் காதுகொடுத்து, ஜெப தபங்களைப் புரிந்து தன் ஆத்துமத்தையும் சரீரத்தையும் அடக்கி ஒறுத்து புண்ணிய வழியில் வாழ்ந்து வந்தார்.

ஒருநாள் இவர், தண்ணீரால் ஏற்பட்ட விபத்தில் அற்புதமாய்க் காப்பாற்றப்பட்டபோது சந்நியாசியாய்ப் போவதாக, சர்வேசுரனுக்கு வார்த்தைப்பாடு கொடுத்தார். ஆகவே ஒரு மடத்தில் சேர்ந்து, சகலரும் அதிசயிக்கும் வண்ணம் சகல புண்ணியங்களிலும் சிறந்து விளங்கினார். ஆனால் அம்மடத்திலுள்ளவர்கள் திருந்தி வாழ விரும்பாததால், அவ்விடத்தைவிட்டு வேறு இடத்திற்குச் சென்று, தனிமையிலும் ஜெபத் தியானத்திலும் தேவ பணிவிடை புரிந்துவந்தார்

இவருடைய அர்ச்சியசிஷ்டதனத்தை அறிந்த அநேகர் இவருக்கு சீஷரானதால், அவ்விடத்தில் ஒரு மடத்தைக் கட்டி முன்னுாறு பேருடன் சந்நியாச வாழ்வை மேற்கொண்டார். அவர்களுக்கு வேண்டிய ஒழுங்குகளை இவரே எழுதிக் கொடுத்து அவர்களுக்கு தர்ம வழியைக் காட்டினார்.

மேலும் அவர் பல தேசங்களுக்குச் சென்று, அவ்விடங்களிலும் அநேக மடங்களை ஸ்தாபித்து, அவைகளை சாமர்த்தியத்துடன் நடத்திவந்தார். இவருடைய புண்ணிய வாழ்வைக் கண்ட அரசரும் பிரபுக்களும் இவருக்கு மரியாதை செய்யலானர் இவருக்கு உண்டான வியாதியாலும், இவர் நடத்திவந்த அரிதான தபத்தாலும் உடல் பலவீனப்பட்டு, சந்தோஷ சமாதானத்துடன் மரணமடைந்தார்.

யோசனை 

இல்லறத்தாரும் துறவறத்தாரும் தத்தம் அந்தஸ்திற்கு தக்கவாறு புண்ணியத்தில் வாழவேண்டும்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

தேவமாதாவின் ஊழிய சபையின்
ஏழு ஸ்தாபகர்.
அர்ச். மிலேஸியுஸ், பிதா.
அர்ச். யுலாலியா, க. வே.
அர்ச். கௌலியாஸ், பிதா. து.