122ம் சங்கீதம்
பரமண்டலங்களிலே எழுந்தருளியிருக்கிறவரே! உம்மை நோக்கி என் கண்களை ஏறெடுத்தேன்.
ஊழியர்களுடைய கண்கள் தங்கள் எஜமான்களுடைய கைகளை நோக்கி இருக்குமாப் போலும்,
வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கி இருக்குமாப் போலும் எங்கள் தேவனாகிய ஆண்டவர் எங்களுக்கு இரக்கஞ் செய்கிற வரைக்கும் எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கின்றன.
ஆண்டவரே, நாங்கள் மெத்தவும் நிந்தனைப் பட்டிருப்பதினாலே எங்கள் பேரில் இரக்கமாயிரும்.
ஏனென்றால் எங்கள் ஆத்துமம் ஐசுவரியவான்களுக்கு இழிவாகவும், அகங்காரிகளுக்கு நிந்தையாகவும் ஆகி, மெத்தவும் சிறுமைப் பட்டிருக்கின்றது.
பிதாவுக்கும், சுதனுக்கும் ....
123ம் சங்கீதம்
ஆண்டவர் நம் பக்கமாய் இருந்திராவிட்டால் இப்போது இஸ்ராயேல் சொல்லுகிறதாவது: ஆண்டவர் நமது பக்கமாய் இருந்திராவிட்டால்,
மனிதர்கள் நமக்கு விரோதமாய் எழும்பின போது, நம்மை ஒருவேளை உயிரோடு விழுங்கியிருப்பார்களே!
அவர்களுடைய கோபம் நமது பேரில் பற்றிக் கொள்ளும் போது, ஒருவேளை வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்குமே!
நம்முடைய ஆத்துமம் வெள்ளத்தைக் கடந்து போயிற்று. ஒருவேளை நம்முடைய ஆத்துமம் வெள்ளப் பெருக்கில் மூழ்கிப் போய்தானிருக்கும்.
ஆண்டவர் நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக்காததினாலே அவர் வாழ்த்தப் படுவாராக.
வேடர்களுடைய கண்ணிக்குக் குருவிக்குஞ்சு தப்பினது போல, நம்முடைய ஆத்துமம் தப்பிப் போயிற்று. கண்ணி தெறித்துப் போயிற்று. நாமோ விடுதலையானோம்.
பரலோகத்தையும், பூலோகத்தையும் படைத்த ஆண்டவருடைய திருநாமத்தினாலே நமக்கு சகாயம் உண்டாயிருக்கின்றது.
பிதாவுக்கும், சுதனுக்கும் ....
124ம் சங்கீதம்
ஆண்டவர் பேரில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்கள் சீயோன் பர்வதத்தைப் போல் அசையாமல் இருப்பார்கள். எருசலேமில் வாசம் பண்ணுகிறவன் என்றென்றைக்கும் கலங்குவதில்லை.
பர்வதங்கள் அதைச் சுற்றியிருக்குமாப்போல ஆண்டவர் என்றென்றும் தம் பிரசைகளைச் சுற்றியிருக்கிறார்.
ஏனெனில் நீதிமான்கள் அநியாயம் செய்யத் தங்கள் கையை நீட்டாதபடிக்கு ஆண்டவர் பாவிகளுடைய கொடுங்கோல் நீதிமான்களுடைய சுதந்தரத்தின் பேரில் செல்ல விடமாட்டார்.
ஆண்டவரே, நல்லவர்களுக்கும் செவ்வையான இருதயத்தோருக்கும் நன்மை செய்தருளும்.
நேர்மையான வழியை விட்டு விலகி பாவ அடிமைத்தனத்தை நோக்கி நடக்கிறவர்களை ஆண்ட‡ வர் அக்கிரமிகளோடு சேர்ப்பார். இஸ்ராயேலுக்குச் சமாதானம் உண்டாகக் கடவது.
பிதாவுக்கும், சுதனுக்கும் ....
ஆரம்ப வாக்கியம்: ஓ பரிசுத்த கன்னிமரியாயே, அகமகிழ்ந்து பூரிக்கக் கடவீர். ஏனெனில் தேவரீர் மாத்திரமே உலகெங்குமுள்ள சகல பதிதங்களையும் அழித்தவராக இருக்கிறீர்.