128, 129, 130ம் சங்கீதம்

128ம் சங்கீதம்

இப்போது இஸ்ராயேல் சொல்லத் தக்கதாவது: என் இளமையிலிருந்து அடிக்கடி என்னை நெருக்கினார்கள்.  என் இளமையிலிருந்து என்னை நெருக்கியும் என்னை மேற்கொள்ளாமற் போனார்கள்.

பொல்லாதவர்கள் என் முதுகின்பேரில் அடித்தார்கள்.  தங்கள் அக்கிரமத்தை நீடிக்கச் செய்தார்கள்.  

நீதியுள்ள ஆண்டவர் துன்மார்க்கர்களுடைய தளைகளை உடைத்துப் போட்டார்.  சீயோனைப் பகைக்கிறவர்கள் யாவரும் வெட்கிப் பின்னிட்டுப் போகக் கடவார்கள்.  

அவர்கள் கூரைக்கு மேல் முளைக்கும் புல்லுக்கு ஒப்பாகக் கடவார்கள்.  அது பிடுங்கப்படுமுன் உலர்ந்து போயிற்று.  

அறுக்கிறவன் தன் கையையும், அரிகளைக் கட்டுகிறவன் தன் மடியையும் அதனால் நிரப்புவதில்லை.  

அதினால் வழியிலே போகிறவர்கள்.  ஆண்டவருடைய ஆசீர்வாதம் உங்கள் பேரில் உண்டாவதாக.  ஆண்டவருடைய திருநாமத்தினாலே நாங்கள் உங்களை வாழ்த்துகிறோமென்று சொல்வதில்லை.

பிதாவுக்கும், சுதனுக்கும் ....


129ம் சங்கீதம்

ஆண்டவரே, பாதாளத்தில் நின்று உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.  ஆண்டவரே, என் கூக்குரலுக்கு செவிசாய்த்தருளும்.  என் வேண்டுதலின் குரலை உம் செவிகள் கவனமுடன் கேட்கட்டும்.

ஆண்டவரே, நான் செய்த பாவங்களை நினைவு கூர்வீராகில், உமக்கு முன் யார் நிற்க முடியும்? வணக்கமுடன் நாங்கள் உமக்கு ஊழியம் செய்யுமாறு நீர் பாவங்களை மன்னிக்கிறீர்.

ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கிறேன்.  அவரது வாக்குறுதியில் என் ஆத்துமம் நம்பிக்கை கொண்டுள்ளது.

என் ஆத்துமம் ஆண்டவரை எதிர்நோக்குகின்றது.  சாமக் காவலர் உதயத்தை எதிர்நோக்குவதை விட, அதிக ஆர்வமுடன் எதிர்நோக்குகின்றது.

சாமக்காவலர் உதயத்தை எதிர்பார்ப்பதற்கு மேலாக, இஸ்றாயேலர் ஆண்டவரை எதிர்பார்ப்பார்களாக.

ஏனெனில் ஆண்டவரிடம் இரக்கமுள்ளது.  அவரது இரட்சணியம் பொங்கி வழிகின்றது.

இஸ்றாயேலரை அவர் மீட்பார்.  அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தினின்றும் அவர்களை மீட்டுக் கொள்வார்.

பிதாவுக்கும், சுதனுக்கும் ....


130ம் சங்கீதம்

ஆண்டவரே, என்னுடைய இருதயம் இறுமாப்புள்ளதல்ல. என் கண்கள் மேட்டிமையுள்ளனவல்ல.  

பெரிய காரியங்களையோ, என் ஆற்றலுக்கு மிஞ்சின காரியங்களையோ நான் தேடவில்லை. 

மாறாக, தாயின் மடியில் குழந்தை இருப்பது போல என்னுள் என் ஆன்மா அமைதியுடன் இருக்கும்படி பார்த்துக் கொண்டேன்.  குழந்தையைப் போல் என் உள்ளம் அமைதியாக இருக்கிறது. 

இஸ்ராயேலே, இப்பொழுதும் என்றென்றும் ஆண்டவரின் மீது நம்பிக்கை வைப்பாயாக.

பிதாவுக்கும், சுதனுக்கும் ....

ஆரம்ப வாக்கியம்: ஓ ஆசீர்வதிக்கப்பட்ட தாயும், அமலோற்பவக் கன்னியுமானவளே! ஓ மகிமை மிக்க பூலோக இராக்கினியே, எங்களுக்காக சர்வேசுரனிடம் பரிந்து பேசும்.