அர்ச். அனாக்ளேதுஸ் - பாப்பாண்டவர் (கி.பி. 101)
கிரீக் தேசத்தாரான அனாக்ளேதுஸ் இளம் வயதில் கல்வி சாஸ்திரங்களைக் கற்றறிந்தபின், சேசு கிறீஸ்துநாதர் படிப்பித்த வேதமே மெஞ்ஞான வேதமென்று கண்டுகொண்டு, ஞானதீட்சை பெற்று அப்போஸ்தலர்களுக்குத் தலைவரான அர்ச். இராயப்பருக்கு சீஷரானார்.
இவருடைய பக்தியையும் புத்தி யையும் கண்ட அர்ச். இராயப்பர் இவருக்கு குருப்பட்டம் கொடுத்து, வேதம் போதிக்கும்படி உத்தரவு கொடுத்தார். அனாக்ளேதுஸ் செய்த பிரசங்கத்தால் அநேக அஞ்ஞானிகள் சத்திய வேதத்தில் சேர்ந்து, ஞானஸ்நானம் பெற்று, வேதத்திற்காக தங்கள் இரத்தத்தைச் சிந்தினார்கள்.
இவர் காலத்தில் பாப்புவாயிருந்த அர்ச். க்ளமென்ட் வேதசாட்சி முடி பெற்றபின், அனாக்ளேதுஸ், அர்ச். இராயப்பருடைய சிம்மாசனமேறி திருச்சபையை மகா திறமையுடன் நடத்தி வந்தார். அக்காலத்தில் அஞ்ஞான இராஜாக்கள் சத்திய வேதத்தை வேரோடு அழித்துவிட நினைத்தபடியால், தேசமெங்கும் கிறிஸ்தவர்களைப் பிடித்து வதைத்துக் கொன்றார்கள்.
அனாக்ளேதுஸ் பாப்பாண்டவர் தமது பிரசங்கத்தால் கிறிஸ்தவர்களுக்கு ஆறுதல் கூறி, தேவநற்கருணை சத்தியத்தை அவர்களுக்கு உணர்த்தி, அந்த மோட்ச போசனத்தை நாள்தோறும் அருந்தும் படி புத்திமதி கூறினார்.
பாப்பாண்டவருடைய இந்த நல்ல புத்திமதிக்கு இணங்கி கிறீஸ்தவர்கள் தேவநற்கருணையை நாள்தோறும் பக்தியுடன் வாங்கி அஞ்ஞானிகளால் உண்டாகும் துன்பதுரிதங்களுக்கும், வாதைக்கும், கடைசியாய் மரணத்திற்கும் அஞ்சாமல் தங்கள் இரத்தத்தைச் சிந்தி சேசுநாதருக்கு சாட்சி கூறினார்கள். அனாக்ளேதுஸ் பாப்பாண்டவரும் வேதத்திற்காகக் கொல்லப்பட்டார்.
யோசனை
நாமும் தேவநற்கருணையை நாள்தோறும் அல்லது அடிக்கடி வாங்குவோமாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். யூஜேனியுஸ், மே.
அர்ச். துரியாப், மே.