அர்ச். செர்வாசியுஸ். மேற்றிராணியார் (கி.பி.384)
உத்தம கோத்திரத்தாரும் படிப்பாளியுமான செர்வாசியுஸ் ஜெப தபத்தால் சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்து புண்ணியவாளனாய் நடந்தார். இவருடைய புண்ணியங்களாலும் அருமையான தபத்தாலும் அநேகப் புதுமைகளைச் செய்து வந்தார்.
இவர் ஒரு பாஷையில் பேசும்போது மற்ற ஜாதி ஜனங்கள் தங்கள் தங்கள் பாஷையில் கண்டுபிடிப்பார்கள். இவரைத் தொடுவதாலும் இவர் கை கழுவிய ஜலத்தைக் குடிப்பதாலும் நோயாளிகள் சுகமடைந்தார்கள்.
தேவநற்கருணையைத் தவிர வேறு உணவின்றி அநேக நாள் பிழைத்திருக்கிறார். இவர் தாங்கிரெஸ் நகருக்கு மேற்றிராணியாராக நியமிக்கப்பட்டு, அதில் மகா பிரயாசையுடன் சத்திய வேதத்திற்காக உழைத்து வந்தார்.
இவருடைய மேற்றிராசனத்தில் துஷ்டப் பதிதரான ஆரியர் மிகுந்த அக்கிரமங்களைச் செய்து அநேகரைத் தங்கள் மதத்தில் கபடமாய்ச் சேர்த்துக் கொண்டார்கள். அன்ஸ் என்னும் காட்டுமிராண்டி ஜனங்களால் தமது தேசம் கொள்ளையடிக்கப்படப் போவதாக ஒரு தரிசனையால் இவர் அறிந்து அந்தப் பொல்லாப்பு வராதபடி உரோமைக்குத் திருயாத்திரை செய்து அர்ச். இராயப்பரை பக்தியுடன் வேண்டிக்கொண்டார்.
அந்தத் தேசத்தாருடைய பாவத்தினிமித்தம் சர்வேசுரன் அதைத் துஷ்டரால் அழிக்கச் சித்தம் கொண்டிருப்பதாகவும், ஆனால் அந்தப் பயங்கர ஆக்கினையை அவர் பார்க்கமாட்டார் என்றும், அர்ச். இராயப்பர் தந்த தரிசனையில் மேற்றிராணியார் அறிந்துகொண்டார்.
செர்வாசியுஸ் மேற்றிராணியார் அர்ச்சியசிஷ்டவராய் காலஞ்சென்றபின், முன் கூறப்பட்ட துஷ்ட ஜனங்கள் அத்தேசத்தைக் கொள்ளையடித்து தாங்கிரெஸ் நகரத்தைப் பாழாக்கினார்கள்.
யோசனை
நமக்கு உண்டாகும் துன்பங்களை நீக்கும்படி சர்வேசுரனை மன்றாடுவ துடன் அதற்குக் காரணமான பாவங்களையும் விட்டொழிப்போமாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். மௌன அருளப்பர், மே.
அர்ச். ரெகலாத்தி இராயப்பர், து.