ஜுன் 13

அர்ச். பதுவா அந்தோணியார். துதியர் (கி.பி. 1231) 

அந்தோணியார் போர்ச்சுகல் தேசத்தில் பக்தியுள்ள தாய் தகப்பனிடத்தினின்று பிறந்து சிறுவயதிலே புண்ணிய வழியில் சுறுசுறுப்புடன் நடந்து வந்தார்.

இவர் அர்ச்சியசிஷ்டதனத்தை விரும்பி அர்ச். அகுஸ்தீன் சபையில் சேர்ந்தார். அவ்விடத்தில் உத்தம சந்நியாசியாய் நடந்து தன் சிரேஷ்டர் உத்தரவு பெற்று அர்ச். பிரான்சீஸ்கு சபையில் சேர்ந்தார்.

அவ்விடத்தில் அந்தோணியார் சமையல் வேலை செய்வோருக்கு உதவியாக நியமிக்கப் பட்டார். இவர் அதையும் மற்ற தாழ்ச்சிக்குரிய வேலைகளையும் சந்தோஷத்துடன் செய்துவந்தார்.

ஒரு நாள் மடத்தில் கூடிய அநேக சந்நியாசிகளுக்கு பிரசங்கம் செய்யும்படி சிரேஷ்டர் அந்தோணியாருக்கு உத்தரவிட்டபோது, இவர் எவ்வளவு சிறப்பாக பிரசங்கம் செய்தாரெனில், சகலரும் அதைக் கேட்டு அதிசயித்து பிரமித்தார்கள்.

அன்றிலிருந்து இவர் வேதசாஸ்திரம் படிப்பதற்கு உத்தரவு பெற்றார். பிறகு அர்ச். அந்தோணியார் ஊர் ஊராய்ச் சுற்றித்திரிந்து அநேகப் பாவிகளை மனந்திருப்பி பதிதரை சத்திய வேதத்தில் சேரச்செய்தார்.

இவர் அநேகப் புதுமைகளைச் செய்ய வரம் பெற்றதினால் ஏராளமான பாவிகள் நல்லவர்களானார்கள். மரித்தவர்களை எழுப்பினார். சிலுவை அடையாளத்தால் வியாதியஸ்தரைக் குணப்படுத்தினார்.

ஒரு மிருகத்தை தேவநற்கருணையை வணங்கும்படி செய்து, அதனால் அநேக பதிதரை மனந்திருப்பினார். ஒருவன் கொடுத்த விஷத்தைக் குடித்து சாகாதிருந்தார். கெட்டவர்கள் தமது பிரசங்கத்தைக் கேளாமலிருந்தபோது, இவர் கடற்கரைக்குச் சென்று செய்த பிரசங்கத்தை மச்சங்கள் கேட்கும்படி செய்தார்.

இவர் ஜெபஞ் செய்யும்போது சேசுநாதர் குழந்தை வடிவமாய் இவருக்குத் தோன்றினார்.

இவ்வாறு வெகு காலம் சர்வேசுரனுக்காக உழைத்தபின் மரணமடைந்து நித்திய சம்பாவனையைக் கைக்கொண்டார்.

யோசனை 

காணாமற்போன பொருட்களைக் கண்டடையச்செய்யும் அர்ச். பதுவை அந்தோணியாரைப் பார்த்து நாம் பாவத்தால் இழந்த புண்ணியங்களைப் பெற்றுக் கொடுக்கும்படி மன்றாடுவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். டாம்னேட், க.