அர்ச். எர்மெனெஜில்ட். வேதசாட்சி (கி.பி. 586)
ஸ்பெயின் தேசத்து அரசனும் ஆரிய பதிதனுமான லெவிஜில்ட், என்ற அரசன் தன் குமாரர்களான எர்மெனெஜில்ட், ரெகார்ட் என்பவர்களைப் பதித மதத்தில் வளர்த்து அவ்விருவருடன் ஸ்பெயின் தேசத்தை அரசாண்டு வந்தான்.
எர்மெனெஜில்ட் ஒரு கத்தோலிக்க இராஜ புத்திரியை மணமுடித்துக்கொண்டு தன் இராணியின் ஆலோசனைக்கு இணங்கி கத்தோலிக்க வேதத்தைத் தழுவிக் கொண்டார்.
இவருடைய தகப்பன் இதனால் கோப வெறிகொண்டு பதித வேதத்தைக் கைக்கொள்ளும்படி செய்த முயற்சியெல்லாம் வீணானதால் எர்மெனெஜில்ட்மேல் படையெடுத்து அவரைப் பிடித்து நய பயம் காட்டியும் அவர் அதற்கு இணங்காமல் தன் இராஜ முடியை இழந்தாலும் சத்திய வேதத்தை விடுவதில்லையென்று தைரியமாகச் சொன்னார்.
அப்போது அவரது தகப்பன் அவரைச் சிறையில் வைத்து பல விதமாய் உபாதித்து வந்தான்.
பாஸ்கு காலம் நெருங்கி வந்தமையால் அரசன் ஒரு பதித மேற்றிராணியாரைச் சிறைக்கு அனுப்பி எர்மெனெஜில்டுக்கு தேவநற்கருணை கொடுக்கும்படி கட்டளையிட்டான்.
ஆனால் வேதசாட்சி அதற்கு சம்மதியாததால், அரசனின் உத்தரவுப்படி அர்ச். எர்மெனெஜில்ட் சிரச்சேதம் செய்யப்பட்டு வேதசாட்சி முடி பெற்றார்.
அந்த குரூர செய்கையால் லெவிஜில்ட் அரசன் பச்சாதாபப்பட்டு உயிர் விடும்போது தனது குமாரனான ரெகார்டை சத்திய வேதத்தில் சேரும்படி கூறியதால் அந்த அரசன் கத்தோலிக்க கிறீஸ்தவனானதுடன் அத்தேசத்தார் எல்லோரும் சத்திய வேதத்தைக் கைக்கொண்டார்கள்.
யோசனை
இராஜ முடியை விட சத்திய வேதத்தை அர்ச். எர்மெனெஜில்ட் மேலாக எண்ணியது போல் நாமும் சகலத்திலும் நமது சத்திய வேதத்தை மேலான பொக்கிஷமாக எண்ணுவோமாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். குயினாக், மே.
அர்ச். கரதாக், கு.