1884, அக்டோபர் 13 அன்று காலையில், உரோமையில் பாப்பரசர் 13-ம் சிங்கராயர் தமது பிரத்தியேக சிற்றாலயத்தில், பூசை நிறைவேற்றி முடித்து, பீடப்படிகளில் இறங்கி வந்தவர், அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டார். பத்து நிமிடங்கள் அசைவின்றி நின்ற அவர் அதன்பின் தமது தனி அலுவலகத்திற்குச் சென்று, முழங்காலிட்டு ஜெபித்தபின் எழுந்து, அர்ச். மிக்கேல் அதிதூதரின் பேரில் ஒரு நீண்ட ஜெபத்தை எழுதினார். திருச்சபையின் ஒவ்வொரு குருவும் தமது தனிப் பூசை முடிந்ததும், பீடத்தடியில் முழங்காலிட்டு, 3 அருள்நிறை மந்திரமும், கிருபைதயாபத்து மந்திரமும் ஜெபித்தபின், தாம் எழுதிய ஜெபத்தைச் சொல்லி மன்றாட அவர் ஆணை பிறப்பித்தார். அவரது இந்த வினோதச் செயலைக் கண்ட திருச்சபையின் அதிகாரிகளும், கர்தினால்மார்களும் பாப்பரசருக்கு ஏதேனும் சுகவீனமாயிருக்கக் கூடுமோ என்று அஞ்சியவாறு அவர்கள் அவரை விசாரிக்க, அவர் தாம் கேட்டார் உரையாடலை அவர்களுக்கு விவரித்தார்.
பீடத்தினடியில் நின்ற பாப்பரசர் இரு வகையான குரல்களைக் கேட்டார். மேலே திவ்ய நற்கருணைப் பேழையிலிருந்து கேட்ட ஒரு குரல் மென்மையாகவும், கனிவாகவும் ஒலித்தது. அது நமதாண்டவரின் குரல்! நற்கருணைப் பேழைக்கு எதிரேயிருந்து ஒரு கடூரமான, கடுமையான குரல் ஒலித்தது, அது சாத்தானுடைய குரல் என்று பாப்பரசர் புரிந்து கொண்டார்.
சாத்தான் ஆங்காரத்துடன், “என்னால் உமது திருச்சபையை அழித்துவிட முடியும்” என, அதற்கு ஆண்டவர், “உன்னால் முடியுமா? வேண்டுமானால் முயற்சி செய், பார்க்கலாம்” என்றார். சாத்தான், “அதற்கு எனக்கு சிறிது காலமும், அதிக வல்லமையும் வேண்டும்” என்றது. நமதாண்டவர் “எவ்வளவு காலம் தேவை? எவ்வளவு வல்லமை வேண்டும்?” என்று வினவ, சாத்தான், “75-லிருந்து 100 ஆண்டுகளும், என் ஊழியத்திற்குத் தங்கள் அர்ப்பணித்தவர்கள் மீது எனக்கு அதிகாரமும் வேண்டும்” என, ஆண்டவரும், “சரி, நீ விரும்பியபடியே காலத்தை எடுத்துக்கொள். உனக்கு வேண்டிய வல்லமையையும் தந்தோம். உன்னால் முடிந்ததைச் செய்” என்று அனுமதியளித்தார்.
அதிதூதரான அர்ச்சியசிஷ்ட மிக்கேல் சம்மனசை நோக்கி ஜெபம்.
ஓ மகிமையுள்ள அதிதூதரான அர்ச். மிக்கேலே, பரலோக சேனையின் இளவரசரே, துரைத்தனங்களுக்கும், வல்லமைகளுக்கும் எதிராகவும், இவ்வுலக அரசர்களாகிய தீய அரூபிகளுக்கு எதிராகவும் நாங்கள் தொடர்ந்து நடத்தும் பயங்கரமுள்ள போராட்டத்தில் எங்களைத் தற்காத்தருளும்.
இனி அழியாதவனாகவும், அவருடைய சொந்த சாயலாகவும் பாவனையாகவும் கடவுளால் படைக்கப்பட்டவனும், பசாசின் கொடுமையினின்று மிகப் பெரிய விலை கொடுத்து மீட்கப்பட்டவனுமான மனிதனுக்குத் துணையாக வாரும். ஆங்காரமுள்ள கெட்ட சம்மனசுக்களின் தலைவனாகிய லூசிபரையும் அவனுக்குப் பிரமாணிக்கமற்ற சேனையையும் நீர் ஏற்கெனவே எதிர்த்துப் போரிட்டீர். அவர்களோ உம்மை எதிர்க்க வலுவற்றவர்களாக இருந்தார்கள். மோட்சத்திலும் அவர்களுக்கு இனி இடமில்லாமல் போயிற்று. பசாசென்றும், சாத்தானென்றும் அழைக்கப்பட்டதும், உலகம் முழுவதையும் கெடுப்பதுமாகிய அந்தக் கொடிய ஆதி சர்ப்பமானது, தனது தூதர்களோடு நரக பாதாளத்திற்குள் வீசியெறியப்பட்டதே! அதே விதமாக இந்நாளிலும் தேவரீர் உம்முடைய பரிசுத்த சம்மனசுக்களின் பரிசுத்த சேனையோடு சேர்ந்து, ஆண்டவரின் போரை நடத்த வருவீராக!
இதோ, ஆதி சத்துருவும், மனிதனைக் கொல்பவனுமானவன் தைரியம் கொண்டிருக்கிறான். சர்வேசுரனுடையவும், அவரது கிறீஸ்துவினுடையவும் திருநாமங்களைப் பூலோகத்திலிருந்து துடைத்து அழித்துவிடும்படியாகவும், நித்திய மகிமையின் முடிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆத்துமங்களைக் கைப்பற்றி, அவற்றைக் கொன்று நித்திய அழிவிற்குள் தள்ளும்படியாகவும், அவன் ஒளியின் தூதனாக நடித்து, தீய அரூபிகளின் முழுப்படையோடும் பூமியெங்கும் சுற்றித்திரிந்து, அதை முற்றுகையிட்டிருக்கிறான். இந்தக் கொடிய பறவைநாகம் மனிதர்கள் மீதான தனது கடுஞ்சினத்தின் விஷத்தையும், தனது கெட்டுப்போன மனதையும், இருதயத்தையும், தனது பொய்மை, அவபக்தி, தேவதூஷணம் ஆகிய உணர்வுகளையும், நோயைப் பரப்பும் தனது அசுத்ததனம், சகல துர்க்குணங்கள் மற்றும் அக்கிரமத்தின் மூச்சை, ஒரு மகா அசுத்தமுள்ள வெள்ளமாக, பூமியின்மீது ஊற்றுகிறது. இந்த மகா தந்திரமுள்ள எதிரிகள், மாசற்ற செம்மறிப்புருவையானவரின் மணவாளியாகிய திருச்சபையைப் பிச்சாலும் கசப்பாலும் நிரப்பி போதைகொள்ளச் செய்துள்ளதோடு, திருச்சபையின் மிகப் புனித உடைமைகளின் மீதும் தங்கள் அவபக்தியுள்ள கைகளை வைத்து விட்டன. திருச்சபையின் மேய்ப்பரை அடித்து வீழ்த்தி, ஆடுகளைச் சிதறடிக்கும் தங்களுடைய அக்கிரமமான திட்டத்தோடு, உலகின் ஒளிக்காக, மிகப் பரிசுத்த இராயப்பரின் ஸ்தானமும், சத்தியத்தின் ஆசனமும் ஸ்தாபிக்கப்பட்டிருந்த பரிசுத்த ஸ்தலத்திலேயே, தங்கள் அருவருப்புக்குரிய அவபக்தியின் சிம்மாசனத்தையும் அவை நிறுவி விட்டன!
ஆகையால், வெல்லப்படாதவரான இளவலே, தேவரீர் எழுந்து, இழக்கப்பட்ட அரூபிகளின் தாக்குதல்களுக்கு எதிராக கடவுளின் மக்களுக்கு உமது உதவியையும், வெற்றியையும் தருவீராக. அவர்கள் தங்கள் பாதுகாவலராக உம்மை வணங்குகிறார்கள். பரிசுத்த திருச்சபை நரகத்தின் கெடுமதியுள்ள வல்லமைக்கு எதிரான தன் பாதுகாவலாக உம்மில் மகிமை கொள்கிறது; பரலோக பாக்கியத்தில் மனிதர்களின் ஆன்மாக்களை ஸ்தாபிக்கும் பொறுப்பை சர்வேசுரனும் உம்மிடம் ஒப்புவித்திருக்கிறார். சாத்தான் மனிதர்களை இனி சிறைப்படுத்தவோ, திருச்சபைக்குத் தீங்கு விளைவிக்கவோ இயலாதவாறு தோல்வியுற்றவனாக எங்கள் பாதங்களுக்கு அவனைக் கீழ்ப்படுத்தும்படியாக, சமாதானத்தின் தேவனிடம் மன்றாடுவீராக. எங்கள் ஜெபங்கள் ஆண்டவருடைய கிருபைகளோடு விரைவாகக் கலந்து, பசாசும் சாத்தானும், ஆதிசர்ப்பமுமாகிய பறவைநாகத்தை அடித்து வீழ்த்தும் படியாக, மகா உந்நதரின் பார்வையில் எங்கள் ஜெபங்களை ஒப்புக்கொடுப்பீராக. பசாசு இனி மக்களினங்களைக் கெடுக்காதபடி, பாதாளத்தில் அவனை மீண்டும் சிறைவைப்பீராக. ஆமென்.
இதோ ஆண்டவருடைய சிலுவை, பகைமையுள்ள வல்லமைகளே, சிதறியோடிப் போங்கள். யூதா கோத்திரத்தின் சிங்கம், தாவீதின் வேருமானவர்ஜெயங்கொண்டார். நாங்கள் உம்மில் நம்பிக்கை வைத்திருக்கிறபடி, ஆண்டவரே, உம்முடைய இரக்கங்கள் எங்கள் மீது இருப்பனவாக. ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும். என் அபய சத்தம் உமது சன்னதி மட்டும் வரக்கடவது.
ஜெபிப்போமாக: எங்கள் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துநாதரின் பிதாவாகிய சர்வேசுரா, உமது திருநாமத்தை அடியோர்கள் கூவியழைத்து, மனுக்குலத்தை வாதிக்கவும், ஆத்துமங்களை அழிக்கவும் உலகில் சுற்றித்திரியும் சாத்தானுக்கும், மற்ற சகல அசுத்த அரூபிகளுக்கும் எதிராக நித்திய மாசற்ற கன்னிகையும், எங்கள் தாயாருமாகிய மரியாயினுடையவும், மகிமையுள்ள அர்ச். மிக்கேல் அதிதூதருடையவும் மன்றாட்டுக்கு தேவரீர் செவிசாய்த்து, எங்களுக்கு உதவியாக வரத் திருவுளம் கொள்ளும்படியாக உமது மதுரமுள்ள தயாளத்திடம் தாழ்ச்சியோடு இரந்து மன்றாடுகிறோம். ஆமென்.