கி.பி. 1454 - 1600 : நிகழ்வுகள்.
கி.பி. 1492: கிறிஸ்தோபர் கொலம்பஸ் ஐரோப்பாவிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து, அமெரிக்காவுக்குக் கடல்வழி கண்டுபிடித்தார்.
கி.பி. 1453ல் பிசான்சியப் பேரரசு ஓட்டோமான் ஆட்சிக்கு உட்பட்டதால் ஐரோப்பாவுக்கும் சீனா உட்பட்ட கிழக்கு ஆசிய நாடுகளுக்குமிடையே வாசனைப் பொருள்கள், பட்டு போன்ற பொருள்கள் பெற்றுவர உதவிய பெரும் வழியை (பட்டுப் பாதை = Silk Road) பயன்படுத்த இயலா நிலை எழுந்தது. முதலில் போர்த்துகீசிய கடல் பயணியர் ஆப்பிரிக்காவைச் சுற்றி இந்தியாவுக்குக் கடல்வழி காண முயன்றனர். ஆனால் கிறிஸ்தோபர் கொலம்பஸ் போர்த்துகல் நாட்டிலிருந்து புறப்பட்டு, அட்லாண்டிக் பெருங்கடலில் மேற்கு நோக்கிப் பயணம் செய்தால் இந்தியாவை அடையலாம் என்று கணித்தார். அமெரிக்காவைக் கண்டுபிடித்தபோதிலும் இந்தியாவுக்குச் சென்றுசேர்ந்ததாகவே அவர் நினைத்ததால் தாம் கண்டுபிடித்த இடத்தில் வாழ்ந்த மக்களை அவர் "இந்தியர்" (Indios) என்று அழைத்தார்.
கி.பி. 1492: ஆப்பிரிக்காவில் அங்கோலா நாட்டில் கிறித்தவம் வேரூன்றத் தொடங்கியது.
கி.பி. 1493: கடல் வழி சென்று கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரும்பாலான நிலப்பகுதிகள் எசுப்பானியாவின் ஆட்சிக்கு உட்படும் என்றும் அங்கு கிறித்தவ மறையைப் பரப்புவது எசுப்பானியாவின் பொறுப்பு என்றும் திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர் அறிவித்தார். தம் இரண்டாம் கடற்பயணத்தின்போது கொலம்பஸ் கிறித்தவ மறைபரப்பாளர்களோடு அமெரிக்கா சென்றார்.
கி.பி. 1494: டொமீனிக்கன் குடியரசில் கிறித்தவ மறைபரப்பாளர் பணிபுரியத் தொடங்கினர்.
கி.பி. 1495: மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கிறித்தவ மறைபரப்பாளர் சென்றனர்.
கி.பி. 1496: ஹிஸ்பனியோலா தீவில் குவத்திக்காபா என்பவரும் அவர்தம் குடும்பத்தினரும் கிறித்தவத்தைத் தழுவியதோடு கிறித்தவம் அங்கே வேரூன்றத் தொடங்கியது.
கி.பி. 1498: கென்யா நாட்டில் முதல் கிறித்தவர்.
கி.பி. 1499: போர்த்துகல் நாட்டிலிருந்து அகுஸ்தீன் சபைத் துறவியர் சான்சிபார் சென்று கிறித்தவத்தைப் பரப்பினர். 1698இல் அரபு படையெடுப்பு நிகழ்ந்ததோடு அங்கிருந்த மறைபரப்புத் தளம் முடிவுக்கு வந்தது.
கி.பி. 1500: பிரான்சிஸ்கு சபைத் துறவியர் கப்ரால் என்னும் போர்த்துகீசிய கப்பல் தலைவரோடு பிரேசில் சென்று கிறித்தவ மறையைப் பரப்பினார்கள்.
கி.பி. 1501: திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர் அமெரிக்கா கண்டத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட எல்லா நாடுகளையும் எசுப்பானியக் கட்டுப்பாட்டுக்கு ஒப்படைத்து, புதிய நாட்டு மக்களிடையே கிறித்தவ மறையைப் பரப்ப வேண்டும் என்னும் பொறுப்பையும் எசுப்பானியாவிடம் கொடுத்தார்.
கி.பி. 1502: பார்த்தலோமே தெ லாஸ் காசாஸ் (Bartholome de Las Casas) என்பவர் எசுப்பானியாவிலிருந்து ஹிஸ்பானியோலா சென்றார். பிற குடியேற்ற எசுப்பானியர் செயத்துபோல அவரும் தோட்டத் தலைவராகி, அங்கு வாழ்ந்த பூர்வீக மக்களை அடிமைகளாகக் கொண்டு வேலைவாங்கினார். 1510இல் குருவாகத் திருநிலை பெற்றார். அமெரிக்கா கண்டத்திலேயே நிகழ்ந்த முதல் கிறித்தவக் குருப்பட்டம் அதுவே. பின் கியூபா சென்றார். பூர்வீக மக்கள் எசுப்பானியர்களால் ஒடுக்கப்பட்டதைக் கண்டு மனங்குமுறிய லாஸ் காசாஸ் தம் தாய்நாட்டுக்குத் திரும்பி பூர்வீக மக்களுக்கு ஆதரவாகச் சட்டங்களைத் திருத்த பாடுபட்டார். "இந்தியர்களின் (Indios) காவலர்" என்னும் சிறப்புப் பெயர் பெற்ற இவருடைய முயற்சியால் பூர்வீக மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமை குறைந்தது.
கி.பி. 1506, சனவரி 22: இரண்டாம் ஜூலியஸ் (திருத்தந்தை)திருத்தந்தை இரண்டாம் ஜூலியஸ் என்பவரின் ஆளுகையில் சுவிட்சர்லாந்தைச் சார்ந்த கூலிப் போர்வீரர்கள் காஸ்பர் ஃபோன் ஸிலேனென் என்பவர் தலையில் வத்திக்கான் நகர் வந்தனர். இவர்களே பிற்காலத்தில் "சுவிஸ் காட்ஸ்" (Swiss Guards) என்னும் பெயரோடு திருத்தந்தையின் மெய்க்காப்பாளர் ஆயினர்.
கி.பி. 1506, ஏப்பிரல் 18: வத்திக்கான் குன்றில் புனித பேதுரு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் புதியதொரு பெருங்கோவில் நிறுவும் எண்ணத்தில் அதற்கு இரண்டாம் ஜூலியஸ் அடிக்கல் நாட்டினார்.
கி.பி. 1508: மைக்கலாஞ்சலோ வத்திக்கானில் சிஸ்டைன் சிறு கோவில் உட்கூரையில் சுவர் ஓவியங்கள் படைக்கத் தொடங்கினார்.
கி.பி. 1514: பிரான்சிஸ்கு சபைத் துறவியர் அமெரிக்காவில் கலிஃபோர்னியா பகுதியில் கிறித்தவ மறையைப் பரப்பத் தொடங்கினர்.
கி.பி. 1515: போர்த்துகீசிய மறைபரப்பாளர் பெனின், நைஜீரியா பகுதிகளில் கிறித்தவத்தைப் பரப்பத் தொடங்கினர்.
கி.பி. 1516: "கனவுலகு" (Utopia) என்னும் தலைப்பில் தாமஸ் மூர் என்பவர் ஒரு நூலை வெளியிட்டார்.
கி.பி. 1516: பெனின் பகுதியில் முதல் கிறித்தவக் கோவில் கட்டப்பட்டது.
கி.பி. 1517: இந்தியாவில் முகலாயர் ஆட்சியின்போது வங்காளத்தில் முதல் கிறித்தவ மறைபரப்பாளர் கால்வைத்தனர்.
கி.பி. 1517, அக்டோபர் 31: கிறித்தவத் துறவி மார்ட்டின் லூதர் திருச்சபையில் சீர்திருத்தம் கொணர வேண்டும் என்பதை வலியுறுத்தி 95 பரிந்துரைகள் கொண்ட அறிக்கையை வெளியிட்டார்.
கி.பி. 1519: எசுப்பானியர்கள் மெக்சிக்கோ பகுதியைக் கைப்பற்றினார்கள்.
கி.பி. 1519: ஹெர்னாண்டோ கோர்ட்டேஸ் என்னும் எசுப்பானியர் மெக்சிகோவில் கால்வைத்து அதைக் குடியேற்ற நாடாக்கினார்.
கி.பி. 1521, சனவரி 3: திருத்தந்தை பத்தாம் லியோ என்பவர் மார்ட்டின் லூதர் தவறான கொள்கைகளைப் பரப்புகிறார் என்று அவரைச் சபைநீக்கம் செய்தார்.
கி.பி. 1521: பிலிப்பீன்சு நாட்டில் முதன்முறையாகப் பலர் கத்தோலிக்க கிறித்தவ மறையைத் தழுவினார்கள்.
கி.பி. 1522: போர்த்துகீசிய மறைபரப்பாளர் இலங்கையில் கிறித்தவ சமயத்தைப் பரப்பத் தொடங்கினர்.
கி.பி. 1521, அக்டோபர் 17: கிறித்தவ சமயக் கொள்கைகளை நன்முறையில் விளக்கியுரைத்தார் என்பதற்காக இங்கிலாந்து நாட்டு அரசர் எட்டாம் ஹென்றி என்பவருக்கு "(கிறித்தவ) மறைக் காப்பாளர்" என்னும் பட்டத்தைத் திருத்தந்தை பத்தாம் லியோ வழங்கினார். ஹென்றி மன்னர் தம் உடன்பிறப்பின் விதவையாகிய அரகோன் நகர கேதரின் (Catherine of Aragon) என்பவரை மணந்தார். அவரை விவாகரத்து செய்ய கத்தோலிக்க திருச்சபை இசைவு தராததால் ஹென்றி தாமே இங்கிலாந்து திருச்சபைக்குத் தலைவர் என்று பிரகடனம் செய்தார் (1534). இது ஆங்கிலிக்க சபை கத்தோலிக்க சபையிலிருந்து பிரிந்து செல்ல வழியாயிற்று. 1538இல் ஹென்றி மன்னர் சபைநீக்கம் செய்யப்பட்டார்.
கி.பி. 1527, மே 6: உரோமை நகரம் சூறையாடப்பட்டது. திருத்தந்தை 7ஆம் கிளமெண்ட் வத்திக்கானிலிருந்து ஆஞ்செலோ கோட்டைக்குத் தப்பியோடினார். சுவிஸ் காவலர்கள் (Swiss Guards) அவரது உயிரைக் காத்தனர். இன்றுவரை சுவிட்சர்லாந்து இளைஞர்கள் சிலர் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 6ஆம் நாள் திருத்தந்தையின் காவல் குழுவில் சேர்க்கப்படுகிறார்கள். தற்போது சுவிஸ் காவலர்கள் பெரும்பாலும் அலங்கார முறைக்காகவே உள்ளனர்.
கி.பி. 1534: சோழமண்டலக் கடற்கரையில் பரவ இன மக்கள் ஒட்டுமொத்தமாகக் கத்தோலிக்க கிறித்தவ மறையைத் தழுவினர். சுமார் 20 ஆயிரம் பேர் திருமுழுக்குப் பெற்று கிறித்தவர் ஆயினர்.
கி.பி. 1540: புனித இஞ்ஞாசியார் தொடங்கிய இயேசு சபை திருத்தந்தை 3ஆம் பவுல் என்பவரால் அங்கீகரிக்கப்பட்டது.
கி.பி. 1542: பிரான்சிஸ் சேவியர் (சவேரியார்) இந்தியாவில் போர்த்துகீசிய குடியேற்றமாகிய கோவா சென்றடைந்தார். அங்கு முதலில் போர்த்துகீசியரிடையே பணிசெய்தார். பின்னர் தமிழ்நாட்டில் சோழமண்டலக் கடற்கரையில் பரவ கிறித்தவரிடையே மறைபரப்புப் பணி நிகழ்த்தினார்.
கி.பி. 1545, டிசம்பர் 13: வட இத்தாலியாவில் உள்ள திரெந்து என்னும் நகரில் பொதுச்சங்கம் கூடியது. மூன்று கட்டமாகக் கூடிய இச்சங்கம் 25 அமர்வுகளில் செயல்பட்டது. திருத்தந்தை 3ஆம் பவுல் என்பவரால் கூட்டப்பட்ட இச்சங்கத்தில் 255 ஆயர்கள் கலந்துகொண்டனர். சங்கம் 1563, டிசம்பர் 4ஆம் நாள் நிறைவுற்றது.
திரெந்து சங்கம் கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகும். திருச்சபையில் நிகழ்ந்த புராட்டஸ்தாந்து பிளவுக்குப் பதில் அளிப்பதற்கும் கத்தோலிக்க கிறித்தவ கொள்கைகளை எடுத்துரைப்பதற்கும், திருச்சபையில் சீர்திருத்தம் கொணர்வதற்கும் இச்சங்கம் கூட்டப்பட்டது.
கி.பி. 1546: பிரான்சிஸ் சேவியர் கிறித்தவ மறை பரப்புவதற்காக இந்தோனேசிய தீவுகளாகிய மொரோத்தாய், ஆம்போன், தெர்னாட்டே என்னும் பகுதிகளுக்குச் சென்றார்.
கி.பி. 1548: பிரான்சிஸ் சேவியர் பஞ்சிம் கோவா பகுதியில் இறைத் திருப்பெயர் கல்லூரி நிறுவினார்.
கி.பி. 1552: கிறித்தவ மறையைப் பரப்புவதற்காகப் பயணங்கள் பல மேற்கொண்டு அயராது உழைத்த பிரான்சிஸ் சேவியர் சீனாவில் கிறித்தவத்தைப் பரப்பத் திட்டமிட்டார். சீனாவில் சேருமுன் சான்சியான் என்னும் தீவில் இறந்தார். பின்னர் அவரது உடல் அழியா நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு கோவாவுக்குக் கொண்டுவரப்பட்டது.
கி.பி. 1553: மலேசியாவிலுள்ள மலாக்கா நகரில் போர்த்துகீசிய மறைபரப்பாளர் ஒரு கிறித்தவக் கோவில் கட்டியெழுப்பினர்.
கி.பி. 1554: தாய்லாந்தில் 1,500 பேர் கிறித்தவ மறையைத் தழுவினர்.
கி.பி. 1564: அகுஸ்தின் சபைத் துறவியர் பிலிப்பீன்சு நாட்டில் கிறித்தவத்தைப் பரப்பினார்கள்.
கி.பி. 1565: இயேசு சபைத் துறவியர் மக்காவுக்குச் சென்று கிறித்தவ மறையைப் பரப்பினார்கள்.
கி.பி. 1579: அலெஸ்ஸான்றோ வலிஞ்ஞானோ "மறைபரப்புத் தளங்களைப் பார்வையிடுநர்" என்னும் முறையில் யப்பானுக்குச் சென்றார். மறைப்பணி நிகழ்த்த வேண்டிய முறை குறித்து வழிகாட்டினார். இலக்கு மக்களின் பண்பாட்டை மதித்து மறைபரப்பல் நிகழ வேண்டும் என்பது அவர் அணுகுமுறை.
கி.பி. 1582: இயேசு சபையைச் சார்ந்த மத்தேயோ ரிச்சி (Matteo Ricci) என்பவரும் வேறு சில துறவியரும் சீனாவில் மறைபரப்புப் பணி நிகழ்த்தினர். மேலை நாட்டு அறிவியல், கணிதம், வானவியல் போன்ற அறிவுத் துறைகளைச் சீனாவுக்கு அறிமுகம் செய்தனர். சீனக் கலாச்சாரத்துக்கு ஏற்ற விதத்தில் கிறித்தவக் கொள்கைகளைத் தழுவியமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
கி.பி. 1583: இயேசு சபையைச் சார்ந்த ஐந்து மறைபரப்பாளர்கள் கோவா அருகே கொலைசெய்யப்பட்டனர்.
கி.பி. 1587: வெளிநாட்டவர் அனைவரும் யப்பானைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.
கி.பி. 1591: திரினிதாத் தீவில் முதல் கத்தோலிக்க கிறித்தவ கோவில் கட்டப்பட்டது.
கி.பி. 1593: பிரான்சிஸ்கு சபைத் துறவியர் யப்பானில் கியோட்டோ நகருக்குச் சென்று புனித அன்னா மருத்துவமனையை நிறுவினர்.
கி.பி. 1595: டச்சு கிழக்கிந்தியக் கம்பனியார் ஐரோப்பியரலாத பிறர் நடுவிலும் மறைப்பணி செய்யத் தொடங்கினார்கள்.
கி.பி. 1599: இன்றைய பங்களாதேஷ் நாட்டில் ஜெஸ்ஸோர் பகுதியில் இயேசு சபைத் துறவியர் கிறித்தவ மறை பரப்பத் தொடங்கினர்.